சினிமாவுக்கு மொழி கிடையாது. நில எல்லைகளும் இல்லை. ஓர் அந்நிய தேசத்தின் நில அமைப்பை, மனிதர்களின் வாழ் முறையை, அவரது பருவகாலங்களை நம்மால் பாஸ்போர்ட் இன்றி அறிய முடிவது சினிமாவால்தான். இன்று ஓடிடி தளங்கள் கட்டற்ற வகையில் சினிமா பார்க்கும் அனுபவத்தை உருவாக்கியிருக்கின்றன. குறிப்பாக லாக்டவுன் காலத்தில், மனிதர்கள் தம் இதயத்தை இலகுவாக வைத்துக்க கொள்ள, ஓடிடி பயன்பாடு பெரிதும் உதவியது. இந்திய சினிமா என்பது, பெருமளவில் மலையாள சினிமாவாகவே அறியப்படுகிறது. சிறிய பட்ஜெட்டில் அவர்களால் உலகத் தரத்துக்கு படங்களைத் தர முடிகிறது. மது.சி.நாராயணன், ராஜிவ் ரவி, லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, திலீஷ் போத்தன், அல்போன்ஸு புத்திரன் போன்ற இயக்குனர்களின் படங்கள், பேண்டமிக் காலத்தில் மொழி கடந்த வரவேற்பைப் பெற்றன. ஃபகத் பாசில், பிரித்விராஜ் , நிவின்பாலி போன்றோரின் யதார்த்தமான நடிப்புத் திறமையும் அனைவரையும் கவர்ந்திருந்தது. சூஃபியும் சுஜாதையும், டிரைவிங் லைசென்ஸ், டிரான்ஸ், குருதி, மாலிக், நாயாட்டு, போன்ற படங்கள் குறித்து, சமுக ஊடகங்களில் சினிமா ரசிகர்கள் சலிப்பின்றி எழுதியபடி இருந்தார்கள். ஆனாலும், வேற்றுமொழி சினிமாவை எப்படி பார்ப்பது? என்பது முக்கியமான விசயம். நமக்கு அதிகம் பரிச்சயமற்ற புதியமொழி படங்களை எவ்வாறு அணுகுவது? அங்கு நிலவுகிற அரசியல், பண்பாட்டு சூழல் என்ன? மதம், கல்வி போன்ற நிறுவனங்கள், அங்கு எவ்வாறு இயங்குகின்றன ? அங்கு புழங்கக் கூடிய தொன்ம நம்பிக்கைகள் எவை? என்பது குறித்தெல்லாம் ஒரு படத்தை பின்னணியாகக் கொண்டு உரையாடும்போது, அந்தப் படம் குறித்த பருண்மையான பார்வையை நாம் அடைகிறோம். அந்த வகையில் கவிஞர் கரிகாலனின் ‘தெய்வத்திண்டே திர’ மலையாள சினிமாக்கள் குறித்த ஒரு புதிய திறப்பை நம்மிடம் உருவாக்குகிறது.
சினிமாவை வெறும் கேளிக்கை சாதனமாக அணுகாமல், அதை ஒரு பண்பாட்டு வடிவமாகவும், அரசியல் மாற்றத்துக்கு உதவும் கருவியாகவும் கரிகாலன் பார்க்கிறார். சினிமாவை வெறும் அழகியல் அடிப்படையில் உரையாடாமல், அதில் பொதிந்து கிடக்கும் அரசியல் காரணிகளையும் இணைத்துப் பேசுகிறார். குறிப்பாக, இடதுசாரி சினிமா, பெண்ணிய சினிமா, சிறுபான்மையினர் சினிமா போன்ற விவாதங்களுக்கு உதவுகிற மாற்று சினிமா படங்களை இந்நூலில் அதிகம் அடையாளம் காட்டுகிறார். இந்த நூலை வாசித்து முடிக்கும்போது, கடந்த இருபது ஆண்டுகளில் மலையாள சினிமா அடைந்திருக்கும் பரிணாம வளர்ச்சியை நம்மால் அறிந்து கொள்ள முடியும். உலக சினிமாக்களோடு மலையாள சினிமாவை ஒப்பிட்டு உணர முடியும். தமிழ் சினிமாக்கள் செல்ல வேண்டிய திசை வழி பற்றிய தெளிவைப் பெற முடியும். சினிமா ரசனையை மேம்படுத்திக் கொள்ள , சினிமா கோட்பாட்டை வளப்படுத்திக் கொள்ள இந்நூல் வாசகர்களுக்கு துணை புரியும். கவிஞர் கரிகாலனின் திரைப் பரிமாணத்தை வெளிப்படுத்தும் தெய்வத்திண்டே திர நூலை வெளியிடுவதில் படைப்பு பெருமிதம் கொள்கிறது.