நூல் பெயர் : இலைவழி மழைத்துளி
நூல் வகைமை : கவிதைகள்
ஆசிரியர் :
தஞ்சை விஜய்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
122
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 170
இலை
புரட்டுதல் பொதுவாக மழை வருவதற்கான அறிகுறியாகும். மழை பெய்யும் முன்பு ஏற்படும் வானிலை
நிலைமைகள் காரணமாக இலைகள் நிலை மாறுவதே இதற்குக் காரணம். மரங்கள் வளரும்போது, அவற்றின்
இலைகள் அந்தப் பகுதிக்கு நிலவும் காற்றுக்கு ஏற்ப வளரும் ஆனால் மழை வரும்போது காற்றின்
திசை மாறினாலோ அல்லது காற்றின் எதிர் திசையில் மழை வந்தாலோ அந்த காற்றின் சக்தி இலைகளை
புரட்டுவதற்கு வழிவகுக்கும். ஈரப்பதம் இலைகளை மென்மையாக்கும், வாசனையை வலுவாக்கும்
எனவேதான், மழை பெய்யும் முன் பூக்கள் அதிக மணம் கொண்டவையாக மாறுகிறது. மேலும் ஈரப்பதத்தால்
கிளைகளில் இருக்கும் இலைகளும் தளர்வாகும். தளர்வின் காரணமாக இலை புரட்டல் நிகழும்.
இலை புரட்டலை வைத்தே மழை வருகையை கணித்த நம் முன்னோர்களின் அறிவு, அறிவியல் உண்மைகளை
அடிப்படையாகக் கொண்ட இன்றைய வானிலை முன்னறிவிப்புக்கு ஒப்பானது என்பது வரலாற்று உண்மை.
ஒரு தலைமுறை இந்த அறிவை அடுத்த தலைமுறைக்குக் கடத்தியது, அதனால்தான் மழையின் வருகையை
இலைகளை வைத்தே கண்டுபிடிப்பது இன்றும் தொடர்கின்றன. இப்படி இயற்கையைப் பற்றியும், இயற்கையிடம்
கற்றுக் கொள்ள வேண்டியதைப் பற்றியும் சமூகப்பார்வையில் கவிதைகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே
“இலை வழி மழைத்துளி” நூல்.
தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு நத்தம் கிராமத்தை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும்
கொண்ட படைப்பாளி தஞ்சை விஜய் அவர்களுக்கு இது ஆறாவது தொகுப்பு. இதுவரை இவர் எழுதிய
ஐந்து நூல்களும் நம் படைப்பு பதிப்பகத்தின் மூலமாகவே வெளியிடப்பட்டு பலரது கவனம் பெற்றது. இவர் நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம்
உதவி பெற்று தனது கல்லூரி படிப்பை முடித்தவர். இவரது படிப்புக்காகவும் படைப்புகளுக்காகவும்
பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளிவந்து
உள்ளன. கடலூரில் நெற்களஞ்சிய கவி விருது, மதுரையில் சமூக சிந்தனைக்கவி விருது மற்றும் புதுக்கோட்டையில் கவிச்சுடர் விருதும்
பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.