புள்ளிகளால் ஆனது வாழ்க்கை. வருவது தொடக்கப்புள்ளி, விழுவது முற்றுப்புள்ளி, மீண்டும் எழுவது தொடரும் முற்றுப்புள்ளி, சில புள்ளிகள் நம் தலை எழுத்தை மாற்றும் சக்தி கொண்டது. சிறியதாக யோசித்தால் சில புள்ளிகளை வைத்து வாசலில் போடும் கோலத்தோடு நின்று விடலாம். பெரியதாக யோசித்தால் சமூகத்தில் பெரும்புள்ளியாகவும் மாறிவிடலாம். ஒற்றைப் புள்ளியில் இருந்து தான் ஒரு கவிதையும் தோன்றுகிறது. ஏகப்பட்ட புள்ளிகள் சேர்ந்ததுதான் இலக்கியமும். பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே இருக்கின்றன. நட்சத்திரம் கூட சிறு புள்ளிதான் நமக்கு. இப்படிப்பட்ட வாழ்வியல் சமூகக் காரணிகளை எல்லாம் உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'தொடரும் முற்றுப்புள்ளிகள்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் மனத்தில் தான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அசை போட்டுக் கொண்டிருக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
சென்னையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி நயினார் அவர்களுக்கு இது மூன்றாம் நூல். இவருடைய
படைப்புகள் பல பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. கால் டாக்ஸி
ஓட்டிக்கொண்டே கவிதை எழுதும் காரோட்டி இவர். சில திரைப்படங்களில் துணை
இயக்குனராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். படைப்பு குழுமத்தால்
வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், படைப்பு குழுமத்தின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் இவர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.