நூல் பெயர் : நிழலின் வெளிச்சம்
(கட்டுரைகள் )
ஆசிரியர் : கடையநல்லூர் பென்ஸி
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 178
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 150
உயிரிகளின் உயர்வான கண்டுபிடிப்பு மனிதகுலம். மனிதகுல வரலாற்றின் கண்டுபிடிப்புகளில் மகத்தானவையாக போற்றப்படுவன இரண்டு, ஒன்று சக்கரம், இரண்டாவது அச்சுக்கலை. கூடன்பர்க் கண்டுபிடித்த அச்சு இயந்திரம் மனிதர்களிடம் அறிவுப் புரட்சியை உண்டாக்கி அகிலத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தது. பொதுவாக மனிதனின் உள்ளுணர்வும், புலன்களும், எளிய சிந்தனைப் பழக்கங்களும் இந்த உலகில் வெற்றிகரமாக உயிர் வாழ்ந்து சந்ததிகளைப் பெருக்க பரிணமித்தவை. நம்மால் மீயொலிகளைக் கேட்க முடியாது. எக்ஸ்-ரே கண்களோ, அகச்சிவப்பு விழிகளோ நமக்கு இல்லை. ஐம்புலன்களால் ஆன ஒரு சிறிய விழித்திரை வழியே இந்த மாபெரும் உலகத்தை மூளையின் துணையால் அறிகிறோம். அதே மூளையை வைத்து அறிவுப்புரட்சியின் வழியே அடுத்த நிலையை நோக்கி மனிதன் சிந்திக்கும்போதே அறிவியல் புரட்சி தோன்றியது. இப்படியாக குகை வாழ்க்கையிலிருந்து குவாண்டம் உலகம் வரை திரும்பியது என்பது நமது உள்ளுணர்வும், புலன் திறன்களும் தேடலின் பக்கம் திரும்பியதே ஆகும். அப்படிப்பட்ட சில தேடல்களை ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘நிழலின் வெளிச்சம்’ என்ற நூல். இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் புதிய செய்திகளையும் தரவுகளையும் வாசிப்பவர் மனதில் விதைத்து விட்டுப் போவது இத்தொகுப்பின் பலம்.
கடையநல்லூரைப் பிறப்பிடம், வசிப்பிடமாகக் கொண்டவரும், இளங்கலையில் தாவரவியலும், முதுகலையில் ஆங்கில இலக்கியமும் கற்றவருமான படைப்பாளி கடையநல்லூர் பென்ஸி அவர்களுக்கு இது முதல் நூல். இவர் சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். பணிபுரியும் காலகட்டத்தில் தொழிற்சங்க வேலைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு, தொழிலார்களின் நலனைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பொதுநலவாதி இவர். பணிநிறைவு பெறும்வரை வாடகை வீட்டிலேயே வாழ்வைக் கழித்த எளியமனிதர் என்பதும் குறிப்பிடத்தக்கது.