வாழ்வின்
நீள் வெட்டுத் தோற்றத்தை சில வார்த்தைகளே செதுக்குகின்றன. வாழ்வியலின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை சில வாக்கியங்களே நமக்குள் புரிதலைச் செலுத்துகின்றன. தோற்றத்திற்கும் மறைவிற்கும் இடையிலான வாழ்வெனும் மாயக் கோடுகளை சில சொற்களே நமக்குள் கோடிட்ட இடங்களாய் நின்று நிரப்புகின்றன. வாழ்க்கை என்பது ஒரு கதை, அதில் வாழ்தல் என்பது சிறுகதை. நாம் தோற்றுவிக்கும் சந்ததியினர் என்பது தொடர்கதை. நாமெல்லாம் கதைமாந்தர்கள். கதைமாந்தர்களின் காலகட்டத்தைப் பிரதிபலிப்பதே வரலாறு. அப்படிப்பட்ட வாழ்வியலின் வரையறைகளை எல்லாம் வரலாறுகளாய் ஒன்று திரட்டி உருவாக்கப் பட்டிருப்பதே ‘ஆராயி’ எனும் தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசிப்பவர்களின் உணர்ந்து கொண்டதலுக்கிணங்க, வாழ்வைக்
கண்கள் வழியே
காட்சிப்படுத்தும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
ஈரோடு
மாவட்டம் சென்னிமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட படைப்பாளி விஜி முருகநாதன் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு.
இவர், இன்றைய இலக்கிய உலகிலும், பல
பத்திரிகை இதழ்களிலும் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். கல்கி, சு.சமுத்திரம் நினைவுப் பரிசு போட்டி, அமுதசுரபி, தினமணி_சிவசங்கரி மற்றும் பறம்பு மாபெரும் சிறுகதைப்
போட்டிகளிலும் பரிசு பெற்று பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பியவர். தினத்தந்தி நாளிதழில் இவரது ‘இறையருள் பெற்ற சித்தர்கள்’ என்ற ஆன்மீகத் தொடர் பதினைந்து வாரங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.