நூல் பெயர் : லூபா யானை (சிறார் இலக்கியம்)
ஆசிரியர் :
சு.பிரவந்திகா
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
102
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 150
சிறார்
இலக்கிய வரலாறு சங்க இலக்கியத்தில் இருந்தே தொடங்குகிறது. ‘நிலாவே வா.. வா.. உனக்குப்
பால் தருகிறேன்’ என்ற அகநானூற்றுப் பாடலில் ஒரு தாய் நிலவைக் காட்டி குழந்தைக்கு உணவு
ஊட்டுகிறாள். மேலும் ‘பிசி’ என்ற ஒரு வகையைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. பிசி
என்றால் விடுகதை என்று பொருள். விடுகதை குழந்தைகளுக்குப் பிடித்தமானது என்பதால் ‘சிறார்
இலக்கியம்’ சங்க காலத்திலிருந்து தொடங்குவதாகச் சொல்லலாம். சங்க காலத்திற்குப் பின்பு
இடைப்பட்ட காலத்தில் ஔவையார் எழுதிய ‘ஆத்திச் சூடி’, ‘கொன்றை வேந்தன்’, உலக நாதர் எழுதிய
‘உலக நீதி’, ‘அதிவீரராம பாண்டியன் எழுதிய ‘நீதி நூல்’ போன்றவை குழந்தை இலக்கியமாக தமிழில்
உலா வந்தது. 20-ஆம் நூற்றாண்டில் சிறுவர் இலக்கியம் கவிமணி தேசியம் விநாயகம் பிள்ளையோடு
தொடங்கி, சிறார் இலக்கியத்தின் தந்தை கவிமணி என்றானது. தாத்தா பாட்டிகளிடம் கதை கேட்க
முடியாத குடும்பச் சூழலில் நடந்த மாற்றமும், அச்சுக் கலை உருவானதும் தான் சிறுவர் இலக்கியம்
அதிகரிக்க முதன்மைக் காரணங்கள். அந்தச் சமயத்தில் பாரதி, பாரதிதாசன், சுத்தானந்த பாரதி,
மின்னூர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் குழந்தைகளுக்கும் படைப்புகளைக் கொடுக்கத் தொடங்கினர்.
1915-இல் வெளியான பாரதியின் பாப்பாப் பாடல் அன்றிலிருந்து இன்றுவரை சிறார் இலக்கியத்தின்
முன்னோடியாக இருக்கிறது. அப்படி சிறுவர்களுக்குப் பிடித்தமான சிறுகதைகளை ஒன்றுதிரட்டி
உருவாக்கியிருப்பதே “லூபா யானை” நூல்.
சென்னையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி பிரவந்திகா அவர்களுக்கு
இது நான்காம் நூல். உலகளவிலான பல தமிழ் அமைப்புகளின் வாயிலாகக் கவிதைகள் சொல்வதிலும்
, கதைகள் சொல்வதிலும் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ள இவர், ‘பதினாறு வயதிற்குட்பட்ட குழந்தைகளில்
தன்முனைக் கவிதை எழுதிய முதல் குழந்தை’ என்ற சிறப்புக்குரியவராகவும் திகழ்கிறார். ஏழு
வயதிலேயே தன்னுடைய முதல் நூலை வெளியிட்டு இன்றைய இலக்கிய உலகில் கவனம் பெற்ற இவர்,
‘இளங்கவி’, ‘வளருங்கவி’, ‘சிறந்த மகளிர்’ விருது மற்றும் ‘கலையாழி’ உள்ளிட்ட பல விருதுகளைப்
பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.