நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்
நூல் பெயர் : நீ துளையிட்ட எனது புல்லாங்குழல்
(கஸல் கவிதைகள் )
ஆசிரியர் : ஜின்னா அஸ்மி
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 114
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : கமல் காளிதாஸ்
உள் ஓவியங்கள் : அன்பழகன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
தன் விரிந்த கரங்களால் ஆழ்மனதை ஆக்கிரமிக்கும் பெரும் பிரவாகம் ஒவ்வொரு கவிதையும். மனக்குகையின் மறைந்த சுவர்களில் வடுக்களாகியிருக்கும் சிறு கசிவைக்கூட கவிதை தன் வார்த்தைகளால் வருடிவிடுகிறது. கொம்பு முளைத்த மானுடர்களுக்குப் புரியாத பலவற்றையும் புரிந்துகொண்ட கவிதை இரகசியமாய்க் கண் சிமிட்டிக் கரைகிறது.
எங்கோ, யாரையோ, எதற்காகவோ தீண்டிவிடும் கவிதைகள்தான் படைப்பு தகவு இதழில் இடம்பெறும். இந்தக் கஸல் கவிதைகள் வெளிவந்தபோது பல மனங்களுக்கு அது ஒருசேர நிகழ்ந்தது. முகநூல் பதிவில் பல பாராட்டுகள் தெறித்துவிழுந்தன. அக்கவிதைகளின் முதல் வாசகியாய் நான் முன்னமே பாராட்டியிருப்பேன்.
உணர்வுகள் எழுவதும் கவிதையில்தான். அடங்குவதும் கவிதையில்தான். அதுதான் கவிதையும் காதலும் செம்புலப் பெயல் நீர் ஆகும் தருணம். காதலால் நிரம்பிய ஒரு கவிஞனின் மௌனம்தான் இந்தக் கவிதைகள். மாதாமாதம் இந்தப் புல்லாங்குழல் பல கடும்பாறைகளைத் துளையிட்டபடியே இருந்தது. தன் இருப்பைப் பொய்யென நிரூபிக்கும் ஒரு காதலுக்குள் சிக்கித் தவிக்கும் கவிதைகள் இவை. ‘போர்க்களத்தில் வழியும் குருதியைப் போல பாரபட்சமின்றிப் பொழியும்’ அந்த அன்பு, எழுத்துகள் கோர்த்த வரிகளின்வழி நம்மைக் கிழித்துக் குணப்படுத்தி வந்தது.
காண முடியாத அந்த இறையைக் காதல் உணர்வுகளாய் வார்த்துத் தந்தன இந்தக் கஸல் கவிதைகள். இருபத்தியொரு இதழ்களில் இருபத்தியொரு பக்கங்களில் அடங்கிக் கிடந்த காதல் என்னும் அந்தப் பேருணர்வு ஒரு தனித்த நூலாய்க் கையில் தவழ இருப்பது தகவு இதழ் கண்ட பெருமகிழ்ச்சி. இதழ் சுமந்த கவிதைகளை இனி இவ்வுலகு சுமக்கட்டும். வாழ்த்துகள் கவிஞரே!