நூல் : எம்.ஜி. ராமச்சந்திரனும் காரல் மார்க்ஸும்
நூல் வகைமை
: சிறுகதைகள்
ஆசிரியர் :
பாலை நிலவன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2023
பக்கங்கள் : 294
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
விலை : ரூ. 450
இந்த நூலின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்றான எம். ஜி. ராமச்சந்திரனும்
காரல் மார்க்ஸும் கதை ஒரு மார்க்ஸிய மாவோயிசக் கருத்துக்களில் நம்பிக்கையுடைய ஒரு காலத்தில்
களப் போராளியாக இருந்த ஒரு ஹோமியோபதி மருத்துவரை பற்றியது. கிட்டத்தட்ட மன நோய்க்கு மிக அருகாமையில் உள்ள மருத்துவரின்
கதையை வாசிக்கும் போது எப்படி மரியா வர்கஸ் லோசாவின் அலெக்சாண்டர் மேஹ்தோ பற்றி படிக்கும்
போது சமகாலத்தில் நாம் பழகுகிற புரட்சியாளர்கள் தொண்டு நிறுவனத்தவர்களெல்லாம் நம் நினைவில்
வந்து போவார்களோ அப்படி பலரும் நம் நினைவில் நிழலாடுவது உறுதி.
சுந்தர ராமசாமியிலிருந்து ஜெயமோகன் வரை இப்படியான பாத்திரங்களை
தம் எழுத்துக்களில் உலவவிட்டுள்ள போதிலும் அதில் அவர்கள் கேளிக்குறியவர்களாகவே காட்டப்படுவார்.
அத்தகைய பிம்பமே வாசகர் மனதிலும் பதிக்கப்படும். பாலையின் டாக்டர் கைலாஷோ ஒரு கேலி
தொனியுடன் சித்தரிக்கப்பட்ட போதிலும் வாசகருக்கு அவர் மீதான மரியாதையையும் அனுதாபமுமே
இறுதியில் எஞ்சி நிற்கும். கைலாஷ் மட்டுமன்று, அவர் நம்புகிற மார்க்ஸியமும் நமது தேசத்திற்குரிய
ஒன்றாகவே நினைவிற் பதியும்.