நூல் பெயர் : சொல் புத்தர் நல் புத்தர்
கல் புத்தர் (ஹைக்கூ)
ஆசிரியர் :
மணி சண்முகம்
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
84
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 120
கவிதை என்பது ஆத்மாவின் அடையாளம் அன்றி வேறொன்றல்ல! பெரும்பான்மையான பொழுதுகளில்
இவை மனோசக்தியையும் ஆத்ம சக்தியையும் இணைக்கின்ற குறியீடாகி விடுகின்றது. ஒரு மரத்திலமர்ந்துள்ள
பறவை பறந்தபின்னும் ஏற்படுகின்ற சிறிய அதிர்வினைப் போலவோ அல்லது நிசப்தத்தைப் போலவோ
படரும் காட்சியோ உணர்வோ கவிதையாகும். கவிதைகளின் முழுமையான அர்த்தத்தை இலகுவாக விளங்கிக்கொள்ள
இவை படைக்கப்படும் தேசங்களின் கலாச்சாரம் அவசியம். ஆனால் வாசிக்க நினைக்கும் ஒவ்வொரு
கவிதைகளையும், அக்கவிதைகள் படைக்கப்பட்ட ஒவ்வொரு தேசங்களின் கலாச்சாரங்களை அறிந்து
கொள்வதென்பதும் அவ்வளவு சுலபமானது இல்லை. இருப்பினும், இப்போதைய மொழிபெயர்ப்புக் கலாச்சாரத்தின்
பின் குறிப்புகள் இவைகளைக் கொஞ்சமாவது விளங்க வைக்கத் தொடங்கி இருக்கின்றன.
ஹைக்கூ கவிதைகள் அந்தத் தேசத்தின் மற்றும் மண்ணின் நுண்ணிய போக்குகளின் நிறையைக்
கொண்டுள்ளன. இக்கவிதைகளை விளங்க நிச்சயமாக மலர்களின் நுகர்வு தேவை. இந்த நுகர்வு இல்லாமல்
ஹைக்கூ கவிதைகளை நெருங்க முடியாது. நான்கு காலங்களும் இந்தக் கவிதைகளுள் மந்திரங்கள்
போலச் சொல்லப்படுகின்றன. இந்த மந்திரங்களின் சூட்சுமங்கள் அறிந்தவர்கள் அதை மொழிபெயர்ப்பு
செய்கிறார்கள். அப்படிப் புகழ்பெற்ற ஹைக்கூ எழுத்தாளரான கர்மா டென்சிங்
வாங்சுக் அவர்களின் ஹைக்கூக்களை மொழியாக்கம் செய்து வெளியிடப்படுவதே ‘சொல் புத்தர்,
நல் புத்தர், கல் புத்தர்’ எனும் நூல்.
கடலூரைப் பிறப்பிடமாகவும், சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி சண்முகம் அவர்களுக்கு இது இருபதாவது நூல். சிற்றிதழ்களிலும் பேரிதழ்களிலும் காவல்துறைப் பணியோடு இன்றும் எழுதி வருகிறார். இதுவரை வெளியான இவரது மற்ற தொகுப்புகள் வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பதுடன், படைப்பு பதிப்பகத்தில் இவர் வெளியிடும் மூன்றாவது நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது.