இலக்கு என்னவென்றே தெரியாமல் ஓடிக்கொண்டு தன்னைச் சூழ்ந்திருக்கும் சுற்றத்தைக்கூட மறந்துவிட்ட அழுத்தம் பொதிந்த இவ்வாழ்வியலில் தன்னை ஒருவன் ஆசுவாசப்படுத்திக் கொள்ளுவதற்கான ஒரு அருமருந்து புத்தகம். பெரிய சமூக மாற்றங்களை எல்லாம் இலக்கில் இருத்திக் கொள்ளாது தன்கூடப் பயணிக்கும் சகமனிதனை, சமூகத்தைப் பார்த்து சிறுபுன்னகை ஒன்றை உதிர்க்கச் செய்துவிட்டால் அதுவே அப்புத்தகத்திற்கான மாபெரும் வெற்றி. அம்மாதிரியான எழுத்துக்களைக் கண்டறிந்து அவைகளைப் புத்தகங்களாக வெளிக்கொணர்ந்து இச்சமூகத்தில் நேசம் தழைக்கச் செய்வதில் படைப்புக்குழுமமானது எப்பொழுதுமே தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்.
அவ்வகையில் உறவின் செழுமைகளைப் போற்றும் தொகுப்பாக அமைந்திருப்பதே “இலைக்கு உதிரும் நிலம்” கவிதைத் தொகுப்பு. திருநெல்வேலி மாவட்டம் செங்குளக்குறிச்சியை வாழ்விடமாகக் கொண்ட படைப்பாளி முருகன்.சுந்தரபாண்டியன் அருங்காட்சியகத்தில் பூட்டப்பட்ட தமிழை தான் சார்ந்த கணினித்துறையில் இருந்துகொண்டு மெருகேற்றுபவர். இது இவரின் முதல் தொகுப்பு என்னும் பட்சத்தில் வாசிப்பவர்கள் ஆச்சரியத்தோடே பக்கங்களைக் கடந்து செல்ல வேண்டுமாயிருக்கும்.
நீரோட்டச் சுழிப்பாதையில் சுழன்று படியும் மணற்படுகையைப் போல வெகு நேர்த்தியாக கவிதைகளுக்கான தன் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த திரு.கனா காண்பவன்(ஹரிஹர சுதன் ) அவர்களுக்கு படைப்புக் குழுமம் தனது நன்றியை உரித்தாக்குகிறது.
எமது படைப்பு பதிப்பகத்தின் மூலமாக தனது கவிதை தொகுப்பை வெளியிட சம்மதம் தந்த படைப்பாளி திரு.முருகன்.சுந்தரபாண்டியன் அவர்களுக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.