ஒரு தலைமுறையைச் சீர்திருத்திச் செப்பனிட்டு அதன் ஆலகாலங்களை அடுத்தத் தலைமுறைக்குப் பிரதியெடுத்து அளிப்பதில் ஞாபகங்கள் பெரும்பங்கு வகிக்கிறது. ஞாபகங்களென்பது வெறுமனே கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்தல்மட்டுமல்லாது நாம் கழற்றிப் போட்ட உணர்வுகளைப் புதுப்பித்துக் கொள்வது. அப்படிப் புதுப்பிக்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் மனிதம் பூக்கும் என்பதும் திண்ணம். அவ்வகையில் படைப்புக் குழும்மானது தன் குழுமத்துக்கவிஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஒவ்வொருவர் வாழ்வில்தம் பிணைந்த நதியைச் சுற்றிக்கிடக்கும் ஞாபகங்களைத் தலைப்பாக்கி கவிதை படைக்கக் கேட்டது. நதியலைகள் போல அழகாகக் காதல், பாசம், கோபம், வெறுமை, ஆனந்தம், பால்யம், வெட்கமென உணர்வுகளைப் பந்திவைத்தார்கள் கவிஞர்கள். அக்கவிதைகளைத் தொகுப்பாக்கிப் பரிமாறுவதில் பேருவகை அடைகிறது படைப்புக் குழுமம்.
கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டியாக நம் குழுமத்தில் நடத்திய "நதிக்கரை ஞாபகங்கள்" எனும் கவிதை போட்டியின் கவிதைகள் தொகுப்பே இந்நூல். இப்போட்டிக்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான சிறந்த கவிதைகளினின்றும் மிகச்சிறந்த கவிதைகளை பரிசிலுக்காகத் தேர்வு செய்தும் சற்றும் சலிப்புறாது இத்தொகுப்பிற்கான வாழ்த்துரையையும் வழங்கி எங்களைப் பெருமைப்படுத்திய கவிஞர். அறிவுமதி அவர்களுக்குப் படைப்புக் குழுமம் தன் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறது.
படைப்பு குழுமத்தின் சொந்த பதிப்பாக வெளிவரும் நூல் இது. எமது பதிப்பகத்தின் மூலமாக தமது கவிதைகளை வெளியிட சம்மதம் தெரிவித்த குழும உறுப்பினர்கள் அனைவருக்கும், அட்டைப்பட வடிவமைப்பில் இத்தொகுப்பை அலங்கரித்த வடிவமைப்பாளர் திரு.கமல் காளிதாஸ் அவர்களுக்கும், மெய்ப்புத் திருத்தி உதவிய 'விழிகள்' தி.நடராசன் அவர்களுக்கும், அச்சக ஒருங்கிணைப்பாளர் திரு. அகன் (அமிர்த கணேசன்) அவர்களுக்கும் மற்றும் இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் படைப்புக் குழுமம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.