நூல் பெயர் : பியானோவின் நறும்புகை
(கவிதை )
ஆசிரியர் : நிலாகண்ணன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2021
பக்கங்கள் : 114
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஓவியர் மணிவண்ணன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 120
நவீனத்துவத் தன்மை கொண்ட வலுவான மையக்கரு கொண்டதாக வைத்திருப்பதும், அக்கருவைத் தர்க்கப்பூர்வமாக நிறுவ முயல்வதும், அம்முயற்சியைத் தெளிவான, செறிவான, ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக மாற்றிக் கொண்டதும், அதற்கேற்ற நுண்மையும், கவனமும் கொண்ட மொழியைக் கையாண்டிருப்பதும், அதில் அறிவியலை மையமாக்கிய நோக்கும் உலகளாவிய நோக்கும் உடையதாக தகவமைத்துக்கொண்டதும், ஒரு செயல்பாட்டு வழிமுறையைப்போல அல்லாமல், மையம் நோக்கிய செயல்பாட்டைச் சிதறடிக்கும் விதமாக அதிகாரத்தின் படிநிலைக் கட்டமைப்பை உடைத்துவிட்டு எல்லாவற்றையும் கிடைமட்டத்தில் வைத்துப் பார்க்கும் சிந்தனை முறையில் செதுக்கியதும், மொத்தத்தில் ஓர் உத்தியோ, ஓர் இலக்கிய வகைமையோ அல்லது ஏதோ ஓர் இசமோ என எதையும் சாராமல், ஓர் அழகான இலக்கியப்போக்கில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக்கொண்டு சுயமாக, அதே நேரத்தில் மொழி, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டிருப்பதே ‘பியானோவின் நறும்புகை’ நூல். கற்பனையின் புதிய சாத்தியங்களை உருவாக்குவதும் அந்தச் சாத்தியங்களை மெய்மையோடு ஒன்றுகலக்கச் செய்து புனைவின் வழியாகவே இவ் இலக்கிய உலகை எதிர்கொள்வதுமே இந்நூலின் பலம்.
சென்னையை வசிப்பிடமாகக் கொண்ட படைப்பாளி நிலாகண்ணன் அவர்களுக்கு இது முதல் தொகுப்பு. சிற்றிதழ்கள் பேரிதழ்கள் உட்பட இன்றைய இணைய ஊடங்களிலும் தனது இலக்கியப் பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும், கவிச்சுடர் எனும் உயரிய விருதையும் பெற்றவர் மேலும் படைப்பு பரிசுப்போட்டிகளில் கவிஞர் மு.மேத்தா, கவிஞர் வண்ணதாசன், கவிஞர் அறிவுமதி மற்றும் கவிஞர் பழநிபாரதி போன்ற ஆளுமைகளால் தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது