சூரியன் மறைவுக்கும் அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமும், புவியில் குறிப்பிட்ட ஓரிடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதியுமே இரவு அல்லது இருட்சூழ்வு எனப்படும். இருள் சூழ்ந்த பகுதி என்பது அமைதியைக் குறிக்கும். இரவு என்பது அமைதியின் மற்றொரு சொல். நிசப்தங்களின் நாளேடுகளில் இரவு இருப்பதால் என்னவோ உறக்கத்தின் மீதும் அதனுள் வரும் கனவுகளின் மீதும் யாரும் தொட முடியாத உச்சத்தில் உணர்வுகள் இருக்கின்றன. அவை, சில நேரங்களில் அமானுஷ்யமாகக் காட்சி அளிக்கின்றன. இருந்தும் இல்லாமல் இருப்பதே வாழ்வு என்பதைப் புரிய வைப்பதே இரவுதான். அதனால்தான் தினந்தோறும் வரும் நிலாவை விட்டுவிட்டு அமாவாசையில் தேடித் திரிகிறது கவிதை மனம். அப்படிப்பட்ட மனம் தேடியக் கவிதைகளை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘யாரோ தொலைத்த சாவி’ நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் இப்படைப்பாளி தன் இறுதி நாட்களில் எழுதி வைத்து விட்டுப் போன கவிதைகள். அவற்றை அவரின் குடும்பத்தார் தொகுத்து அவருக்காக நூல் வெளியிடுகிறார்கள் என்பதே இத்தொகுப்பின் பலம்.
திருவள்ளூர் மாவட்டம், மேலப்பேடு கிராமத்தைப் பிறப்பிடமாகவும், திருநின்றவூரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த படைப்பாளி கா.அமீர்ஜான் அவர்களுக்கு இது ஆறாவது நூல். இவரது இரண்டாம் நூல் படைப்பு பதிப்பகம் மூலமாகவே வெளியிடப்பட்டு பரவலான கவனம் பெற்றது. அன்றைய காலகட்டத்தில் வானொலியிலும், நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றதழ்களிலும் இவரின் படைப்புகள் பிரசுரமாகி இருந்தன. இவருடைய தொழிற்சாலையில் இவரால் தொடங்கப்பட்ட ’முத்தமிழ் மன்றம்’ இன்றும் தொடர்ந்து நிகழ்வுகளை நடத்தி வருகிறது. ஔவை நடராசன், சுரதா, சிலம்பொலி, நன்னன் திருக்குறள் முனுசாமி தொடங்கி குன்றக்குடி அடிகளார் வரை இம்மன்றத்தில் பேச வைத்திருக்கிறார். பல விருதுகளைப் பெற்றிருப்பதுடன் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ‘மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.