சாம்பல் மேட்டில் அமரும் வண்ணத்துப்பூச்சி
நூல் பெயர் : சாம்பல் மேட்டில் அமரும் வண்ணத்துப்பூச்சி
(ஹைக்கூ கவிதைகள்)
ஆசிரியர் : ஆரூர் தமிழ்நாடன்
பதிப்பு : முதற்பதிப்பு 2021
பக்கங்கள் : 124
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஆரூர் த. இலக்கியன்
வெளியீட்டகம் : இலக்கியப் படைப்புக் குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
இயற்கையின்மேல் நம் பார்வையைச் செலுத்தி, எளிமையின்மேல் நம் கவனத்தை ஈர்க்கும் இலக்கிய வடிவம் ஹைக்கூ. ஜப்பானிலிருந்து பெறப்பட்ட இக்கவிதையானது, தமிழில் துளிப்பா, குறும்பா, சிந்தர், கரந்தடி, விடுநிலைப்பா, மின்மினிக் கவிதை, வாமனக் கவிதை, அணில் வரிக் கவிதை என்று பலவாறாக அழைக்கப்பட்டாலும், ஹைக்கூ என்ற அதன் மூலப்பெயராலேயே பிரதானமாக அறியப்படுகிறது. குளிரும் மழையும், மாலைப் பொழுதும், பறவையும், வெயில் ஏறிய பகலையும், நீண்ட இரவையும் நம்முன் உயிர்பெறச்செய்யும் உத்தியே இதன் மகத்துவம். மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும் மறைமுகமாவும் அதிக கருத்துகளை வெளிப்படுத்துகிற தன்மையே இதன் தனித்துவம். அப்படிப்பட்ட தனித்துவத்தையும் மகத்துவத்தையும் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ’சாம்பல் மேட்டில் அமரும் வண்ணத்துப்பூச்சி’ நூல். பேசாமல் பேசி, வாசிப்பவரின் சிந்தனைக்குள் வீசாமல் வீசும் காற்றைப்போல் நுழைந்துகொள்ளும் சிறப்பே இந்நூலின் பலம்.
நக்கீரன் இதழின் தலைமைத் துணை ஆசிரியராகவும், ’இனிய உதயம்’ இலக்கியத் திங்களிதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றி வரும் படைப்பாளி ஆரூர் தமிழ்நாடன் அவர்கள் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள் என பல்வேறு இலக்கியப் படைப்புகளுடன், திரைப்படப் பாடல்களும் எழுதிவருகிறார். எண்ணற்ற கவியரங்குகளையும், பட்டிமன்ற, வழக்காடு மன்றங்களையும் தலைமையேற்று நடத்தியிருக்கிறார். ‘பெரியார் விருது’, ‘கவிக்கோ விருது’ போன்ற பல விருதுகளும், ‘கவிமாமணி’, ‘கவிப்புயல்’, ‘கவியருவி’ போன்ற பல பட்டங்களும் பெற்றிருக்கிறார். இவரது முதல் கவிதை நூலான ‘கற்பனைச் சுவடுகள்’, கலைஞர் கருணாநிதி அவர்களின் அணிந்துரையோடு, அவரது 21வது வயதில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.