நூல் பெயர் : உன் கிளையில் என் கூடு
(கவிதை)
ஆசிரியர் : கனகா பாலன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 90
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : படைப்பு டிசைன் டீம்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 80
பட்சிகளுக்கு மரமென்பது வீடு; கிளையென்பது கூடு. வாழ்வியலை வீடு என்றும், வாழ்தலை கூடு என்றும் கொண்டாடித் திரிகின்றன, புள்ளினங்கள். கூண்டும், கூடும் ஒன்றல்ல. வானத்தையே வளைத்துக் கூண்டாக்கினாலும் விடுதலை அடைந்ததாக நினைக்காதவை பறவைகள். கூண்டில் அடையும் பறவையைவிட, கூடடையும் பறவையே சுதந்திர கானம் பாடும். அப்படியான கூடுகளைத் தாங்கும் கிளை, தாய்மைக்கு இணையானது. தாங்கிப் பிடிப்பது யாவும் இவ்வுலகில் விலை மதிப்பற்றது மனிதனுக்கு; கிளை மதிப்புற்றது மரங்களுக்கு. இயலாமை அல்லது இல்லாமையின்பேரில் ஒன்றிடம் ஒன்று சரணாகதியடைதல் அடிமையாகும். அதுவே ஆத்மார்த்தம் அல்லது நம்பிக்கையின்பேரில் ஒன்றிடம் ஒன்று சரணாகதியடைதல் அன்பாகும். அப்படிப்பட்ட இயற்கையின் ஆத்மார்த்தமான நம்பிக்கைகளையெல்லாம் கவிதைகளாக ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே, ‘உன் கிளையில் என் கூடு’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் வாசிப்பவரின் உள்ளுணர்வுக் கிளைகளை உலுக்கி மனக்கூடுகளில் சிறகடிக்கவைக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
தென்காசி மாவட்டம், வெள்ளாகுளம் ஊரைப் பிறப்பிடமாகவும் சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி கனகா பாலன் அவர்களுக்கு இது, மூன்றாம் தொகுப்பு. இவர், சமூக வலைதளங்கள் மற்றும் பிரபல பத்திரிகைகளில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.