நூல் பெயர் : மணிப்பயல் கவிதைகள்
(கவிதை)
ஆசிரியர் : மணி அமரன்
பதிப்பு : முதற்பதிப்பு 2020
பக்கங்கள் : 93
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : ஆரூர் த.இலக்கியன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு மீடியா நெட்வொர்க்ஸ், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ100
எல்லா பறவைக்கும் சிறகுகள் இருக்கின்றன என்றாலும் எல்லாமே சிறகடிக்கிறதா? அப்படியே சிறகடிக்கிறது என்றாலும், எல்லாமே உயரப் பறக்கிறதா? அப்படியே உயரப் பறக்கிறது என்றாலும், மீண்டும் கூண்டுக்கு வராமல் இருக்கிறதா? ஆக, சிறகுகளுக்கும் சுதந்திரத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மணிக்கணக்கில் சிறகடிப்பதை விட மனதுக்குள் சிறகடிப்பதே முழுச் சுதந்திரம். ஒரே இடத்தில் இருந்துகொண்டு, மனதில் தோன்றிய தன் எண்ணங்களை எல்லாம் எழுத்துகளாக மாற்றி, வாசிப்போரை கட்டிப்போட வைப்பதே உண்மையான சிறகடிப்பு. எழுந்து நிற்பது உயரமல்ல; எழுத்தில் நிற்பதே உயரம் என்ற நம்பிக்கை நிமிடங்களை எல்லாம் கவிதை மணித் துளிகளாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே, ’மணிப்பயல் கவிதைகள்’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் எல்லோருக்கும் புரியும்வகையில் மிக எளிய நடையில் இருப்பதும் அது எதார்த்தங்களை வாசிப்பவர் மனதில் விதைத்துவிட்டுப்போவதும் இந்தத் தொகுப்பின் பலம்.
திருநெல்வேலி மாவட்டம், சங்காணியை பிறப்பிடமாகவும், குன்னத்தூரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மணி அமரன் அவர்களுக்கு இது, முதல் தொகுப்பு. இவரது பல கவிதைகள் பலரின் பாராட்டுதலோடு இன்றைய இலக்கிய உலகிலும், சமூக வலைதளங்களிலும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றவர் மற்றும் படைப்பு பரிசுப் போட்டியில் வெற்றிபெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.