நூல் பெயர் : டோடோ (சிறார்
இலக்கியம்)
ஆசிரியர் : அன்புச்செல்வி சுப்புராஜு
பதிப்பு :
முதற் பதிப்பு - 2024
பக்கங்கள் :
112
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 150
குழந்தைகளுக்காக மட்டுமே தனித்தன்மையுடனும் அர்பபணிப்புடனும் எழுதியவராக அறியப்பட்ட கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள்,
1950-இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். சிறார் இலக்கியத்தில் இயங்குவதற்கான
தளமாக இந்தச் சங்கம் தமிழ்ச் சிறார் உலகில் திகழ்ந்தது. கூத்தபிரான், வாண்டு மாமா,
ந. தெய்வசிகாமணி, சவுந்தர், மாயூரன் என ஏகப்பட்ட எழுத்தாளர்கள் குழந்தை இலக்கியம் படைக்க
உந்துசக்தியாக இருந்தது. அழ.வள்ளியப்பா பரம்பரை என்றே பலரும் பின்தொடரும் அளவிற்கும்
அவர் உருவாக்கிய தாக்கம் தொடர்ந்தது. அதன் விளைவாக, அறிவியல், வரலாறு, சமூகம் சார்ந்த
படைப்புகள், பாடல், சிறுகதை, நாவல், வாழ்க்கை வரலாறு, பொது அறிவு, துப்பறியும் கதைகள்
என எல்லாத் துறைகளிலும் நூற்றுக்கணக்கான படைப்பாளர்களும் அவர்களின் படைப்புகளும் வெளிவந்தன.
பெரியவர்களுக்கு எழுதிக்கொண்டிருந்த ராஜாஜி, கா.அப்பாதுரையார், நாரண துரைக்கண்ணன்,
அகிலன், ஆர்.வி, ரா.கி.ரங்கராஜன், எல்லார்வி, கு.அழகிரிசாமி, அரு.ராமநாதன், துமிலன்,
ஜே.எம்.சாலி, ஜெயகாந்தன் ஆகியோரும் குழந்தைகளுக்காக சிறார் இலக்கியம் எழுதியது தமிழ்
இலக்கிய உலகின் பொற்காலம். அதன் நீட்சியாக சிறுவர்களுக்குப் பிடித்தமான சிறுகதைகளை
ஒன்றுதிரட்டி உருவாக்கியிருப்பதே “டோடோ” நூல்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியைப் பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி அன்புச்செல்வி சுப்புராஜு அவர்களுக்கு இது பத்தொன்பதாம் நூல். தமிழ் இலக்கிய உலகில் தன்முனைக் கவிதையின் கிளை வடிவமாக ‘ தன்முனையியைபுக் கவிதை’ வகைமையை அறிமுகம் செய்தவர் என்ற சிறப்புக்குரியவரான இவர், இன்றைய இலக்கிய உலகிலும் இணைய உலகிலும் தன் படைப்புகள் மூலம் நன்கு அறியப்பட்டவர். கம்போடிய அரசுடன் இணைந்து அங்கோர்வாட் தமிழ்ச்சங்கம் அளித்த “சர்வதேச பாரதியார் விருது” , கனடா - தமிழாழிப் பேரவை வழங்கிய கலையாழி விருது, தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ள இவர், படைப்புக் குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கிகாரத்தையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.