நூல் பெயர் : ஓலங்கல் சுழலும் உடைந்த இசைத்தட்டு (கவிதைகள்)
ஆசிரியர் :
ஜெ.பிரான்சிஸ் கிருபா
பதிப்பு :
முதற்பதிப்பு - 2024
பக்கங்கள் :
138
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 200
காலம்
ஒரு பறவையைக் கூண்டில் அடைத்தாலும், தன் விடுதலைக்கான வழியை தானே உருவாக்கிக் கொள்ளும்
ஆற்றலுடைய கவிதைப் பறவை ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்கள். தன்னியல்பு மாறாமல் படைப்புகளைத்
தந்து தனிப்பெரும் ஆழியாக வாசக அலைகளை உருவாக்கிக் கொண்ட மகா சமுத்திரம் இவர். வாழ்வியலின்
தூரத்தை துயரத்தால் அளவீடு செய்து அதை எழுத்துக்களில் ஏற்றிப் பார்த்த எதார்த்தவாதி.
தன்னைக் கிள்ளி எறியும்போதோ, பறிக்கும்போதோ, இன்பத்திலோ துன்பத்திலோ வெவ்வேறு மணம்
தராமல் ஒரே மாதிரி மணம் வீசும் புன்னகை பூக்கும் மலர் இவர். தன்னையே ஒரு கவிதையாக கர்த்தரிடம்
ஒப்புக்கொடுத்து விட்டவர். காலத்தின் கைகளில் எப்படியாவது கவிதையை ஒப்படைத்து விட வேண்டும்
என அவரை சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். இதுவே கடைசி காலமென தெரியாமல்
அவர் கைப்பட துண்டுச் சீட்டுகளிலும் டைரியிலும் எழுதி வைக்கப்பட்ட கவிதைகளை ஒவ்வொன்றாக
சரிபார்க்கப்பட்டு முறைப்படுத்தி இறுதிவடிவம் கொடுக்கப்பட்டு உருவாக்கப் பட்டிருப்பதே
‘ஓலங்கள் சுழலும் உடைந்த இசைத்தட்டு’ நூல்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைப்
பூர்வீகமாகவும், சென்னையை வாழ்விடமாகவும், கொண்ட படைப்பாளி ஜெ.பிரான்சிஸ் கிருபா அவர்களுக்கு
இது, பத்தாம் நூல். இவரது கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல பத்திரிகைகள், இதழ்களில் பிரசுரமாகி இருக்கின்றன.
திரைப்படத்திலும் ஏராளமான பாடல்களை எழுதி இருக்கிறார். தமிழ் இலக்கிய உலகத்தில் கொண்டாடப்படும்
‘கன்னி’ போன்ற புதினங்கள் இன்னும் ஒன்றிரண்டு இவரிடமிருந்து வந்திருக்கக் கூடாதா என
வாசகர்கள் ஏங்கிக்கொண்டிருந்தார்கள். நாம் அவரை தவற விட்டது போல காலமும் அதை தவற விட்டிருக்கலாம்.
சுந்தரராமசாமி விருது, சுஜாதா விருது, மீரா விருது, ஆனந்த விகடன் விருது என பல விருதுகளையும்
பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.