நூல் பெயர் : குடைக்குள் கங்கா
(சிறுகதைகள் )
ஆசிரியர் : மீ.மணிகண்டன்
பதிப்பு : முதற்பதிப்பு - 2022
பக்கங்கள் : 86
வடிவமைப்பு : முகம்மது புலவர் மீரான்
அட்டைப்படம் : திண்டுக்கல் தமிழ்பித்தன்
வெளியீட்டகம் : இலக்கிய படைப்பு குழுமம்
அச்சிடல் : படைப்பு பிரைவேட் லிமிடெட், சென்னை
வெளியீடு : படைப்பு பதிப்பகம்
பதிப்பாளர் : ஜின்னா அஸ்மி
விலை : ரூ 100
கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லா மொழிகளிலும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. கதை என்பது இலக்கிய வரலாற்றின் கவித்துவமான ஒரு கலை வடிவம். கடந்த கால வரலாற்றை எதிர்காலச் சந்ததியினருக்குக் கடத்துவதில் கதை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாகப் புற வாழ்வியலை புரியும்படி சொல்வதற்கு கதையைத் தவிர வேறு எந்த சிறந்த உத்தியும் இல்லை. காரணம் பந்தயக் குதிரையைப் போல பாய்ந்தோடும் இதன் சுவாரசியமே கதை நகர்த்தலுக்கான சாராம்சம். தாலாட்டு கேட்டு தூங்கும் குழந்தைப் பருவம் தாண்டிய பிறகு பாட்டியிடம் கதை கேட்டுவிட்டுத் தூங்கும் நேரமே பால்ய காலத்தின் சொர்க்கம். பிற்காலத்தில் ஒரு குழந்தை வளர்ந்து இச்சமூகத்தில் தனக்கான தனித்துவமான பாதையை அமைத்துக் கொள்ள இக்கதைகளே காரணிகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட வாழ்வியல் சமூகக் காரணிகளை எல்லாம் உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'குடைக்குள் கங்கா' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கதையும் வாசிப்பவரின் மனதில், தான் வாழ்ந்ததற்கான அடையாளங்களை அசை போட்டுக் கொண்டிருக்கும் என்பதே இத்தொகுப்பின் பலம்.
சிவகங்கை மாவட்டம் கல்லல் எனும் ஊரைப் பிறப்பிடமாகவும், அமெரிக்காவின் ஆஸ்டின் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி மீ. மணிகண்டன் அவர்களுக்கு இது முதல் நூல். இவருடைய படைப்புகள் பல பிரபல பத்திரிகைகளில் பிரசுரமாகியிருக்கின்றன. ஈரோடு தமிழன்பன் விருது உட்படப் பல விருதுகளை பெற்றிருப்பதுடன் படைப்பு குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.