யாசகம் - எம்.எம்.தீன்
நூல்: யாசகம்
ஆசிரியர்: எம்.எம்.தீன்
வெளியீடு: ஜீவா படைப்பகம்
நம்மைச் சுற்றிலும் நாம் அன்றாடம் சந்திக்கும்... ஆனால் அவர்களைப் பற்றி ஒரு நிமிடம் கூட இதுவரை சிந்திக்காத... சிந்திக்கத் தோணாது நாம் கடந்து போகும் யாசகம் செய்பவர்களின் வாழ்வியலைக் களமாகக் கொண்ட கதை
"யாசகம்".
#தக்கரை #முத்தாச்சி #சூசை #சோத்துப்பட்டை என நான்கு முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமில்லாது வள்ளி, குரங்குசடைச்சி, சுலைகா, அய்யாக்கண்ணு வக்கீல், குட்டித்துரை என்று நீளும் துணைப்பாத்திரங்களும் கூட வெகுவாகத் தாக்குதலில் அந்த அதிர்வலைகள்
புரட்டிப்போடுகின்றன நம்மை.
இவர்கள் தவிர ஒரு குரங்கும், பீரு என்றதொரு சேவலும் கூட கதாபாத்திரமாகவே நம்மை ஈர்க்கின்றன.
பெரிய குடும்பத்தில் பிறந்து...எதிர்பாராத ஒரு சூழலில் சிறு பிராயத்திலேயே தன்னைவிட முதிர்ந்ததொரு பெண்ணின் பாலியல் இச்சைக்கு ஆளாகி...அதன் விளைவாகத் தலைகீழாகப் புரட்டிப்போட்டு விடும் வாழ்க்கையோட்டத்தில் பிச்சையெடுப்பதில் வந்து நிற்கும் தக்கரை, தன் தகப்பானாரோடு உறவாகிப்போன தன் மனைவியால் அனைத்தும் துறந்து யாசத்துக்கு வந்த சோத்துப்பட்டை, பெருவியாதிக்காரன் சூசை, ஊனமான தன் பிள்ளை குட்டித்துரைக்காக கையேந்தும் முத்தாச்சி என்று யாசகத்துக்கான காரண காரணிகளைத் தாங்கி நிற்கும்
பின்னணிகள் யாவும்...வாழ்க்கைச் சூழல் எப்படியெல்லாம் ஒருவரை மடை மாற்றிப் போட்டு அலைக்கழிக்கும் என்பதைச் சொல்லும் விதத்தில் நம்மை அப்படியே கதிகலங்கி உலுக்கியெடுக்கிறது.
தக்கரையின் வள்ளியோடான பால்ய பருவத்து விபத்தும், குரங்குச்சடைச்சி... முத்தாச்சியோடான காதலுமாக...
கதை நெடுக ஒரு யாசகனின் காதல்சார் உணர்வுகளும் உடலியல் வேட்கையும் நமக்கு இது ரொம்பவே புதுசு.
முத்தாச்சிக்கு ஒரு ஜிமிக்கி வாங்கிக் கொடுத்துவிட வேண்டுமென்ற
தக்கரையின் உள்ளக்கிடக்கை...அவளிடம் கூட சொல்லாத அந்தக் காதல்..நம்மை நெகிழவைக்கிறது.
ஒரு குடும்பச் சூழலுக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள முடியாது...ஒரு பறவை போல திரியும் மனநிலையிலான தக்கரை போன்ற அழுத்தம் வாய்ந்தவர்களை
நாம் நிச்சயம் கடந்திருப்போம்.
கிடைக்கும்போது கழுகு போல் சாப்பிடவும் கிடைக்காத போது பட்டினி கிடப்பதும் யாசகனுக்குத் தேவையான தனிக்குணமாக...
நாளின் இயக்கம் முழுக்க சாப்பாட்டிற்கான தேடலாகவே முடிந்துவிடும் அவலம்...
ஆறுவேலைக்குத் தின்னும் மனிதப் பிறவிகளை நிச்சயம் கூசவைக்கும்.
காதல், துன்பம், துயரம், ஆசை, தேடல், நாடல், ஊடல், கூடல், அவமானம், பசி, கண்ணீர்,
எதிர்பார்ப்பு, ஏக்கம் என்று நமக்குத் தெரியாத...இதுவரை தெரிந்து கொள்ளவும் நினைக்காத யாசகம் செய்பவர்களின் வாழ்வியலையும்
வாழ்வாதாரச் சிக்கல்களையும்
நம் கண்முன்னே புரட்டிப் போடுவதில்...இது நமக்கு வேறொரு மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது.
தேவாரம், திருவாசகம், பட்டினத்தார், பத்திரகிரியார் என்று பிச்சைக்காரன் என்பதையும் தாண்டி சோத்துப்பட்டைக்கும் வக்கீல் அய்யாக்கண்ணுவுக்குமான உரையாடல்கள் யாவும் அத்தனை சுவாரசியங்களைத் தாங்கியதான தனியொரு ட்ராக்...முற்றிலும் வேறொரு அனுபவம்.
விழியிழந்தோருக்கான பள்ளியில் சலுகைக்கான விண்ணப்பத்தில் குட்டித்துரைக்கு எந்த மதம் குறிப்பிடுவதென்ற கேள்விக்கு தக்கரை முத்தாச்சியின் பதில்களும் அதன் தொடர்ச்சியாக.."ஜாதி மதம் இரண்டுக்கும் டேஷ் போட்டுவிடுங்கள்" என்ற குட்டித்துரையின் தெளிவும்
நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறது.
யாசகம் செய்பவர்களை மட்டுமே களமாக வைத்து முழு நீளக் கதையாக இதற்கு முன் நான் வாசித்ததில்லை.
தர்கா, தேவாலயம், கோவில் என்று மதங்களுக்குள் அடங்காதது யாசகனின் பசி என்பதை கோடிட்டுக் காட்டுகிறது இந்த யாசகம்.
கந்தூரித் திருவிழா குறித்த விவரங்களெல்லாம் புதிதான தகவல்கள்.
கதையோட்டத்திற்கிணங்க கதை நடக்கும் இடத்தின் பெயரையே அந்த அத்தியாயத்தின் தலைப்பாக வைத்திருப்பது..
வாசித்த பின் தேவைப்படும் குறிப்பிட்ட களத்தைத் தேடுவதற்கு வசதியாக இருக்கிறது.
தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் தொய்வில்லாது நம்மை இழுத்துச் செல்லும் கதையோட்டம்...
யாசகம் வாசித்தலுக்குப் பின் பிச்சை எடுப்பவர்கள் மீதான நமது பார்வைக் கோணத்தை முற்றிலுமாக தடம் மாற்றியிருக்கிறது என்பதில் ஐயமில்லை.
குறிப்பு: ஜூலை 2020 மாதாந்திர பரிசு பெற்ற படைப்பு.