பேச்சாயி
ஊரில் இருந்து என் சின்னக்கா பெயரில் தந்தி " ஸ்டார்ட் இம்மீடியட் பேச்சாயி சீரியஸ் "
எனக்கு என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. உடனே கிளம்பிவிட்டேன். எப்படியும் தாம்பரத்தில் காலை பத்து மணிக்குள் பஸ் ஏறிவிட்டால் மாலை நான்கு மணிக் கெல்லாம்
கும்பகோணம் சேர்ந்திடலாம். அங்கிருந்து முக்கால் மணி நேரத்தில் கபிஸ்தலத்தை அடைந்திடலாம். அதிகபட்சம் ஐந்து மணிக்கெல்லாம்வீட்டுக்குப் போய்விடலாம்.
தாம்பரத்தில் சரியாக ஒன்பதே முக்காலுக் கெல்லாம் திருவள்ளுவர் சூப்பர் டிலக்ஸில் ஏறிவிட்டேன். டிரைவர் சீட் பின் உள்ள வரிசையில் ஒரு இருக்கையில் அமர்ந்தேன். அந்தப் பக்கம்தான் வெயில் மதியத்துக்கு மேல் வரும். அதிக சூடு இருக்காது.
எப்படியும் ஆறு மணி நேரம் அதில்தான் பயணம்.
பேச்சியாயி ! யார் இது?
கிராமத்தில் எங்கள் தெருவில் கடைசி வீடு. ரொம்பச் சின்னது. இட்லி மற்றும் ஆப்பம் சுட்டு விற்கும் பூங்காவணம் வீடுதான் அது.
பூங்காவணம் எல்லா வற்றையும் சுட்டு , சட்னி குருமா செய்து ஒரு கூடையில் எடுத்துக் கொண்டு வடக்கே உள்ள குக்கிராமங்களில்போய் விற்று வருவாள்.
அவள் மகள்தான் பேச்சாயி,
புருஷனிடம் வாழப் பிடிக்காமல் அம்மாவோடு வந்து விட்டாள். புருஷன் செம்ம குடிகாரன்.
வீட்டில் இட்லி, ஆப்பம் வியாபாரத்தை அவள் பார்த்துக் கொள்வாள்.
காலை எட்டு மணிக்கெல்லாம் பேச்சாயியின் இட்லி கடை வியாபாரம் முடிந்துவிடும். அதன்பின் தன் வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டால் பிறகு எங்கள் வீடுதான்.
என் அம்மா ஒன்பது பெற்றவள். ஐந்து தான் தங்கினோம். அம்மாவுக்கு சர்க்கரை நீர் வியாதி. அதனால் பேச்சாயிதான் வந்து வீட்டுவேலை செய்து கொடுக்கும்.
" அக்கா, துணியெல்லாம் எடுத்துப் போட்டாச்சா " என்று கேட்டபடியே 501 பாரில் ஒரு கட்டியை நூல் கொண்டு நறுக்கி, நனைத்த துணியில் தேய்க்கத் தொடங்கிடும்.
" பேச்சாயி, வெற்றிலை போடமலேயே வேலையில் இறங்கிட்டியே? " என அம்மா வெற்றிலைப் பெட்டியை நகரத்துவார்.
" கொஞ்ச துணிதானே முடிச்சிடறேன் "
வீட்டில் நான், அப்பா,அம்மா, பெரியண்ணன், சிண்ணன்ணன், சின்னக்கா ஆறு பேர்தான்.
பெரியண்ணன் எஃப் ஏ வரை படித்துள்ளார். சின்ணண்ணன் ஏழாம் வகுப்பிலும், சின்னக்கா ஒன்பதாம் வகுப்பிலும் படிக்கிறார்கள்.
எனக்கு நாலு வயதுதான். இன்னும் முடி கூட இறக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் ஏதாவது காரணமாய் தள்ளிப் போகிறது.
பெரியக்காவுக்கு கல்யணம் ஆகிவிட்டது . பெரியத்தானுக்கு விமானப்படையில் வேலை; தாம்பரத்தில் இருக்கிறார்கள்.
துணியைக் காயப் போட்டபின் பேச்சாயி வெற்றிலை போட்டுக் கொண்டு தன் வீட்டுக்குப் போய் விடும். எங்க வீட்டில் புகையிலை கிடையாது . அதனால் தன் வீட்டில் போய் அதைப் போட்டுக் கொள்ளும்.
"நானும் வரேன் " னு நான் அடம்பிடித்தால், "இப்ப வேணாம், சாயங்காலம் கடைக்கு போறப்ப வா " ன்னு சொல்லிட்டு போகும்.
நெல்லை ஊறப் போட்டு, இரவில் வேகவைக்கும். நெல் புழுங்க வைக்கயில் வரும் வாசம் இன்னும் நாசியிலேயே நிற்கிறது. கொட்டி வைத்து விட்டு, மறுநாள் காலை வெயில் வந்ததும் தோட்டப்பாயில் கிண்டி விட்டு காய வைப்பது பேச்சாயி வேலை. கோழி, காக்கா, ஆடு, மாடு எல்லாம் திங்காம பார்த்து ஓட்டுறதுதான் என் வேலை.
ரொம்பவும் இல்லை. ஒரு கலம் நெல்தான் ஒரு தடவைக்கு போடுவார்கள். ஒரு ரெண்டு மணி நேரமானதும் நெல்லையெல்லாம் கூம்பாச்சியாக குமித்து வைக்கும். பின் மீண்டும் பரப்பிவிடும். அவ்வப் போது கிண்டிவிடும். சில சமயம் காலால், சில சமயம் குனிந்து
கையால் கிண்டிவிடும். மூன்று மணியளவில் ஒரு கை நெல் எடுத்து கையில் வைத்து திருகிப் பார்க்கும். சற்று நேரத்தில் கொஞ்சம் நெல்லை தரையில் வைத்து குதிங்காலால் குதி விட்டுப்பார்க்கும். நெல் பதமா காய்ந்திருக்கா, அரிசி இடியாமல் வருமா என்ற லேப் டெஸ்ட் அதுதான்.
நான்கு மணிக் கெல்லாம் நொண்டி மூப்பனார் மிஷினில் அரைக்க கொண்டு போகையில் நானும் ஒட்டிக் கொண்டு போவேன்.
மிஷினில் அரிசி முன் பக்கமும், உமி பின் பக்கமுமாக வந்து விழும். முன் பக்கம் விழும் அரிசியை ஒரு கையால் பிடித்து, பின் ஊதிக் கொண்டே இரண்டு கையிலும் மாறி மாறி கொட்டி உமி இல்லாமல் என்னிடம் தரும்.
"நல்லா மின்னு முழுங்கு. அரையுங் கொறையுமா முழுங்காத"
சூடு தாங்காமல் ஒரு பேப்பரில் கொட்டி ஆற வைத்து தின்பேன். வாயில இடப்பக்கமோ வலப்பக்கமோ குரங்கு மாதிரி குறட்டில் அடக்கிக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமா தள்ளித் தள்ளி மென்று முழுங்குவேன். அரிசி சூடாக இருந்தாலும் ஊற வைத்தது போல ஈரமாக
இருக்கும். ஆனந்தமா மென்று சாப்பிடுவேன்.
அரிசியை தனியாக கூடையிலும் , உமியை சாக்கிலும் கட்டி கூடையில் வைத்து எடுத்து வரும்.
இது போல எப்பவும் ஒட்டு பில்லாக அது கூடவே போவேன்.
அதே மாதிரி கடைக்குப் போகும் போதும் போவேன். ஆனால் இப்போது பேச்சாயியின் இடுப்பில் ஆரோகணம்.
வழியெல்லாம் லொடலொடன்னு ஏதாவது பேசிக் கொண்டே போவேன். எல்லாத்துக்கும்
"உம் " கொட்டிக் கொண்டே வரும். அப்பப்ப என் முகத்தை ஒட்டு மொத்தமா வழித்து வாயில் வைத்து முத்தம் கொடுத்து "என் ராஜா" ங்கும். தவறாம நார்த்தவில்லை, ஆரஞ்சுவில்லை மிட்டாய் வாங்கித் தரும்.
எங்கள் ஊர் திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா ரொம்பப் பிரசித்தம். முப்பதுநாள் மகாபாரதக் கதை சொல்லி கடைசியில் தீமிதி. பேச்சாயிக்கு மூன்றாண்டு வேண்டுதல். தீக்குழியில் பேச்சாயி இறங்கியதுதான் தாமதம் நான் எட்டு கட்டையில்
"பேச்சாயி.....பேச்சாயி..... " என்று கத்தி ஆர்ப்பாட்டம். தீமிதித்ததும் தீக்குழியிலிருந்து நேரே ஓடி வந்து என்னை பேச்சாயி வாரிக்கொள்ளும்..
இதுபோல நினைக்க நினைக்கத் திகட்டாத சம்பவங்கள் எத்தனை யெத்தனையோ. என் அம்மா இறந்தபின் என் சின்னக்கவுக்கு துணையாக பகலெல்லாம் எங்க வீட்டிலேயே இருக்கும்.
எனக்கும் பேச்சாயிக்குமான பந்தம் எனக்கும் என் அம்மாவுக்கும் இடையிலானதை விட வலிமையானது.
அதனுடைய பாசம் எதனோடும் ஒப்பிட முடியாத ஒன்று.
பேச்சாயி மூலம் எனக்கும் வெற்றிலை போடும் பழக்கம் ஒட்டிக் கொண்டது.
"படிக்கிற பிள்ளை வெத்தல போடக் கூடாது. நாக்கு தடிச்சிடும்" என்று எவ்வளவோ சொல்லியும் நான் கேட்கவில்லை. வெற்றிலைப் பெட்டியை ஒளிய வைத்தெல்லாம் பார்த்தது; நான் விடவில்லை.
இன்று அது கைச்சீவல்,கும்பகோணம் வெற்றிலை, பன்னீர்ப் புகையிலை என்று மாறி சென்னையிலும் தொடர்கிறது. பேச்சாயி நினைவாக என்றென்றும் என்னோடிருக்கும்.
போன வாரம்தான் கும்பகோணம் வந்திருந்தேன். என் மனைவிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. என் மாமனார் வீட்டில்தான் எல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்.
பேச்சாயியை அழைத்து வந்து குழந்தையை காட்டி அனுப்பி வைத்தேன். வெற்றிலை, ஏஆர்ஆர்சீவல், மைதீன் புகையிலை எல்லாம் வேண்டுமளவு வாங்க்கிக் கொடுத்தேன். முராரியில் தூத் பேடா, மிக்சர் வாங்கிக் கொடுத்தேன்.
"நான் எங்க இதெல்லாம் சாப்பிடப் போறன். எல்லாம் சுத்தியிருக்கற குடி படைங்கதான் சாப்பிடப்போவுது " என்றவாறே பையில் வைத்துக் கொண்டது.
எங்கள் வீடு பின் பாதி இடிந்து சிதிலமாகிக் கிடக்கிறது. முன் பாதியில் தான் பேச்சாயி வாசம். உத்தரத்தில் பார்த்தால் ஒவ்வொன்றிலும் ஒரு ஏனை புடவையால் கட்டி, ஒரு குழந்தை தூங்கிக் கொண்டிருக்கும். சுற்றிலும் உள்ள வீட்டுப் பெண்கள்,
" பேச்சாயம்மா, இந்தா " என்று குழந்தைகளைக் கொடுத்து விட்டு வயல் வேலைக்கோ வேறு நிமித்தமாகவோ போய்விடுவார்கள்.
தன் குழந்தையாகப் பாவித்து என்னை வளர்த்தது. இப்போது என்னைப் போல பாவித்து இந்த குழந்தைகளை வளர்க்கிறது.
மதிய உணவுக்காக பேருந்து நிறுத்திய போது கூட சாப்பிடப் பிடிக்காமல் ஒரு காஃபி மட்டு்ம் சாப்பிட்டு விட்டு வந்து சீட்டில் உட்கார்ந்து விட்டேன்.
பேச்சாயி என்னை முழுமையாக ஆக்கிரமித்து இருந்தது. அம்மா வென்று அழைக்க அனைத்துத் தகுதியும் உள்ளது. அதைவிட சிறுவயதிலிருந்து பேச்சாயி என நான் கூப்பிடுவதையே செவி கொள்ளாமல் சந்தோஷமாகக் கேட்கும்.
அம்மா வென்றுதான் கூப்பிடவில்லை
"வாங்க போங்க "
என்று மரியாதையாகவாவது கூப்பிடலாமில்லையோ ? அதுவும் இல்லை.
"போ "
"வா ";
என ஒருமையில் தான் கூப்பிடுவேன்.
எனக்கென்னமோ பேச்சாயிக்காகவே என்னைப் பெற்றதாய் விட்டுச் சென்றது போலத் தோன்றுகிறது.
சில தாவரங்கள் சம்மந்தமே இல்லாத இடங்களில் இப்படித்தான் முளைத்து வளர்கின்றன போலும். வேர் பிடிக்க மண் உள்ளதா, வேர் உறிஞ்ச நீர் எங்கிருக்கிறது, இது யாருக்கு நிழல் தரப்போகிறது, யாருக்கு காய்த்து கனிதரப் போகிறது என்ற கேள்விகளோடு வளர்வதை
பார்த்திருக்கிறோம்.
பெரும்பாலும் கோவில் மண்டபத்தின் மேலே பார்த்திருக்கிறோம். எந்த இலக்குமின்றி வளர்ந்து நிற்கும்.
வண்டி அனைக்கரை வந்து விட்டது. அங்கு வந்ததும் மனம் பரபரக்க ஆரம்பித்து விடும். இன்னும் சுமார் இருபத்தைந்து கிலோ மீட்டர்கள்தான் கும்பகோணம். லேசாக தூக்கம் வந்தது.
எல்லாரும் இறங்கும் ஏற்பாட்டில் நான் விழித்துக் கொண்டேன். கடைசி ஆளாகத்தான் இறங்கினேன். எதிரே திருவையாறு பேருந்து நின்றிருந்தது. எப்போ கிளம்பினாலும் சரி யென்று அதில் ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
மனம் பலவித உணர்ச்சிகளில் குழம்பிக் கிடக்கிறது. இதைவிட பெரியது , ஊரில் இறங்கி நடந்து வீடுவரை செல்வது.
எப்படியோ ஊர் வந்து சேர்ந்து விட்டேன். வேகவேகமாக நடந்து வீட்டுக்கும் வந்து விட்டேன்.
வீட்டின் வெளியே சின்னக்கா அக்கம் பக்கத்து வீட்டு ஜனங்கள் என நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
சின்னக்காவிடம் ";எப்படியிருக்கு "என்றேன்.
"எனக்கென்னவோ அதன் காலம் முடிஞ்சிட்டதாகவே படுதுடா" என அக்காவின் பதில்,
" நீ வர்ரதுக்காகவே இன்னும் இழுத்துக்கிட்டு இருக்கு "
வீட்டினுள் சென்றேன். பேச்சாயியை கிடத்தியிருந்தார்கள். சுவாசத்தில் சளி சேர்ந்து
" சொர்..சொர் "
என்று பெரிதாக சத்தம்வெளிப்பட்டுக் கொண்டிருந்தது. இதை சேட்டுமுகம் என்று சொல்வார்கள். சுவாசம் நிற்பதற்கான கடைசி போராட்டம்.
நான் கீழே தலை மாட்டில் உட்கார்ந்தேன். சின்னக்காவும் உட்கார்ந்து கொண்டு ,
" பேச்சாயி, தம்பி வந்துட்டான் பாரு "என்று கொஞ்சம் பெரிய குரலி்ல் கூறியது.
நான் நன்றாக குனிந்து அதன் காதருகே போய் " பேச்சாயி....இதோ பார் நான் வந்திட்டேன் .உன்னோட செல்ல ராஜா வந்திட்டேன் " .
தெடர்ந்து கத்திக்கொண்டே இருந்தேன்.
ஒருகட்டத்தில் தொண்டை அடைத்து எனக்கு குரல் கம்மியது.
சின்னக்காவும் கூடவே
"பேச்சாயி...பேச்சாயி... " என கத்திக்கொண்டே இருந்தது.
பேச்சாயி தலையை மடியில் எடுத்து வைத்துக் கொள்ளலா மென்றால் தயக்கமாகவும் இருந்தது. மீண்டும் பேச்சாயி காதில் சத்தமாக பேச ஆரம்பித்தேன்.
ஒருகணம் நிறுத்தி கவனிப்பது போல தோன்றியது. பின் இரண்டு சுவாசம் வாங்கியபின் நின்று விட்டது. தட்டிக் கொடுத்தெல்லாம் பார்த்து விட்டோம். அவ்வளவுதான் போலும்.
எல்லாரும்
"நீ வரனும், உன் குரல் கேட்கனும்னு இருந்திருக்கு. கேட்டதும் போயிடுச்சி"
என்றார்கள்.
இந்த அறிவியல் வளர்ந்த நூற்றாண்டில் இதை எப்படி நம்புவது என்றுதான் தெரியவில்லை.
குறிப்பு: ஜூலை 2020 மாதாந்திர பரிசு பெற்ற படைப்பு.