திண்ணை
முன்புறம் இடிக்கப்பட்டு திண்ணைகளற்றுப்போன பெருநகரத்துச் சந்துக்குள் இருக்கும் வீடுகள்~
கோழிப்பண்ணையின் சாயலாய் புறாக்கூடுகளின் பிரதிகளாய் நின்று பொருளீட்டுகின்றன.
கேட்கக் காதுகளில்லாத
முதிய வாய்களும்~
பேசிக்கொள்ள சக உதடுகளில்லாத
சபிக்கப்பட்ட காதுகளும்~
அரூப உடலெடுத்து
அமர்ந்துபேச~
திண்ணைகளற்ற
பெருநகர வீதிகளின்
வாகனப் புகைக்குள் அலைகின்றன.
வழிப்போக்கர்களைத் திருடனாய்ப்பார்க்கும்
கருணையற்ற மனிதஉலகில் ~
காசுக்குக் குடிநீர்வாங்கி
கார்களைக் கழுவிக்கொள்பவனின் வீட்டில்~
விருந்தினருக்கேது அறை..?
பெற்றோரும் திண்ணைகளும்
சுமை.
பால்காரம்மாவும்
தயிர்க்காரியும்
கீரைவிற்கவரும் பாட்டியும்
பருப்பு மளிகைக் கூடைக்காரரும்
புளிவிற்கவரும் மலையாளத்தானும்
தலைச்சுமையிறக்கி பேரம்பேசிப் பொருள் விற்கிற திண்ணையிருந்த
இடம் ~
இன்னொரு குடும்பத்தின்
சன்னல்களற்ற ஒற்றையறை.
வாடகை நாலாயிரம்.
*****