பணி நீக்கம்
தனியார் துறைப் பணியில், பணி நீக்கமும் ஓர் அங்கமே. சிறிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு உரிய காலத்தில் சம்பள உயர்வெல்லாம் தர மாட்டார்கள். எனவே அதற்காகவே வேறு நிறுவனத்துக்கு மாறுவோர் அதிகம் உண்டு. சற்று பெரிய நிறுவனங்களில் பல்வேறு காரணங்களால் பணி நீக்கம் நடைபெறும். எனது சென்னை வாழ்க்கையில், வேலைக்குச்சேர்ந்த ஒரே நாளில் அந்த நிறுவனம் செட்டாகாது எனக்கருதி வேலையைவிட்டு நின்றது உள்பட பல அனுபவங்கள் இருக்கு.
பொதுவாகப் பணிநீக்க அறிவிப்பு வந்ததும் முதல் இரண்டு நாட்களுக்கு உடம்பிலிருக்கும் நெகடிவ் ஹார்மோன் சுரப்பின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். பாசிட்டிவ் ஹாத்மோன் கண்டுங்காணாமல் குறட்டைவிட்டு உறங்கிட்டு இருக்கும்! அந்த நெகடிவ் ஹார்மோன் ரொம்பவே ஓவரா ஆடும்! வாழ்க்கையே முடிந்து போனதாகச் சவுண்டு விடும்! நடுத்தெருவுல பிச்சையெடுக்கப் போறேன்னு பதட்டத்த ஏத்தும்! தூங்க விடாது! எல்லாமே பாசிட்டிவ் ஹார்மோன் முழிக்கிற வரைக்கும் தான்... அந்த சிங்கத்த உசுப்பிவிடுறது நம்மளோட வேலை தான். அது முழித்துக்கொண்டால், "பணி நீக்கத்தைப் பற்றியெல்லாம் கவலைப்படாத... இதைவிட அதிக சம்பளத்தில் வேலை வாங்கிடலாம்"னு ஆறுதல் சொல்லும். "உனக்கு இப்போதைக்கு ஒன்னும் சிரமமில்லை, பணக்கஷ்டத்தைச் சமாளிச்சுடலாம்"னு அதற்கான ஐடியாவைச் சொல்லும். அடுத்து என்ன பண்றதுன்னு நிதானமா யோசிக்கும். பின்னர், ஒவ்வொரு நண்பரோடும் தொடர்புகொண்டு வாய்ப்புகளை விசாரிப்பது, நிறுவனங்களில் தொடர்பு கொள்வதெனப் பல்வேறு முயற்சிகளை எடுக்கும். இதன்பலனாக விரைவில் இன்னொரு வேலை உறுதியாகும்.
பணி நீக்கத்துக்குப்பின், இன்னொரு வேலை கிடைக்குமா என்ற பதட்டம் முதலில் வரும். அதன்பின், நாம வாங்குற சம்பளத்துக்கே புதிய வேலை கிடைக்குமா என்ற பதட்டம் வரும். எந்த வேலையைத் தேர்ந்தெடுப்பது, எவ்வளவு சம்பளத்தில் தேர்ந்தெடுப்பது என்பதெல்லாம் அவரவர் குடும்பப்பொறுப்பு, மன தைரியம், நிதியாதாரத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே சக நண்பர்களைப் பார்த்து இதில் காப்பியடிக்கக்கூடாது. எனக்குத்தெரிந்து, நல்ல சம்பளத்தில் பணியாற்றி, பணிநீக்கத்துக்குப்பின் அதே சம்பளத்துக்கு ஓராண்டுக்குமேல் வேலை தேடி, பின்னர், 5000 ரூபாய்க்கு வேலை கிடைத்தாலும்கூட தேவலைன்னு புலம்பியவரைப் பார்த்திருக்கிறேன். ஓராண்டு காலம் வேலை தேடி, ஏற்கனவே பெற்ற சம்பளத்திலேயே வேலையில் சேர்ந்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.
ஒரு நிறுவனத்தில் சம்பளம் அதிகரிக்க, அதிகரிக்க, தலைக்குமேலே கத்தியொன்று தொங்குவதையும் மனதில்கொள்ள வேண்டும். வேலை காலியானால் சமாளிப்பதற்கான எண்ணமும், திட்டமிடலும் இருக்க வேண்டும். நான் ஐ.டி. நிறுவனமொன்றில் பணியாற்றியபோது, நல்ல சம்பளத்தில் இருந்த நிலையில் வேலை போனது! ஏழாண்டுகள் பணியாற்றிய நிறுவனம்! (என் வாழ்க்கையில் அங்குதான் அதிக ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்!!) வேலை தேடுவதற்காக ஒன்றரை மாத காலத்துக்கு சம்பளத்துடன் வாய்ப்பு கொடுத்திருந்தார்கள். திடீரென வேலையில்லாமல் போனதால் பதற்றம் தொத்திக்கொண்டது. இண்டர்வியூ சென்று பல ஆண்டுகளானதால் தன்விவரப்பட்டியலைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது. உடனடியாக பாசிடிவ் ஹார்மோனைத் தட்டியெழுப்பி, தன்விவரப்பட்டியலைப் புதுப்பித்தேன். எனக்கு வேலை போன விஷயத்தை மனைவியிடம் தெரிவித்தால் அவங்க பதட்டமாகி, நானும் பதட்டமாகிவிடுவேன் என்பதால், இதனை மனைவியிடம் சொல்லாமல் மறைத்து வேலை தேடலாமென்று பாசிட்டிவ் ஹார்மோன் சொன்னது!! அதன்படி தினமும் வீட்டிலிருந்து ஆபீசுக்குக் கிளம்புவதுபோல கிளம்பி, ஏதாவது நிறுவனத்தில் இண்டர்வியூ அட்டண்ட் செய்துவிட்டு, அப்படியே தி.நகர் ஜீவா பார்க்குக்குச் சென்றுவிடுவேன். அங்கே மதிய உணவைச் சாப்பிட்டுவிட்டு மாலை வரை நேரத்தைக் கடத்திவிட்டு, வீட்டுக்கு வருவேன்! கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் கவுண்டமணி தான் நினைவுக்கு வருவார்! பார்க்கிலிருக்கும்போது வீட்டிலிருந்து செல்பேசி அழைப்பு வந்தால், பறவைகளின், வாகனங்களின் சத்தம் அதிகமில்லாத இடத்துக்குச் சென்று அட்டெண்ட் செய்வேன்! இப்படியே ஒரு மாத காலத்துக்கு வேலை தேடியதில், தி.நகரிலேயே ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தது! அதன்பின்பு தான் வீட்டில் உண்மையைச் சொன்னேன்! கடுமையான திட்டு! "இனிமேல் வேலை போனால் உடனே சொல்லிவிடுகிறேன்!" என்ற உறுதிமொழியோடு சமாதானமானது! நம்ம நாட்டில் வேலைக்கு என்றும் பஞ்சமில்லை... சுய தொழில் வாய்ப்புக்கும் குறைவில்லை... வேலையிலிருக்கும் காலத்தில் சற்று கணக்காக வாழ்ந்துவந்தால் எந்தப் பிணக்கும் இல்லை!
குறிப்பு: ஜூலை 2020 மாதாந்திர பரிசு பெற்ற படைப்பு.