வெங்காலம்
வாடகை ஒப்பந்தத்தில் எனக்கென ஒதுக்கப்பட்டிருக்கிறது
பாலை நிலத்தின் சிறு பகுதி
திசையெங்கும் வெம்மை கிளர்ந்து வீசும் காற்றில் எனது குழந்தைகள் மேலாடையின்றி விளையாடிக் களிக்கின்றன
ஒரு மஞ்சள் வண்ணத்துப்பூச்சி அரளிப் பூவொன்றில் அமர்ந்திருப்பதுபோன்ற வாழ்வில்
சமூகம் பரிசளித்திருக்கிற சொத்து
ஒரு வட்டக்குடிலும்,கால் நொண்டும் ஒரு ஒட்டகமுமே
கனவு நாள்தோறும் மலர்கள் பூத்த ஏரியை எமது நிலத்தில் படர்த்துகின்றது
துடுப்புகளின் பரவசம் கிளர்ந்தெழ
நான் குழந்தைகளோடு படகுப் பயணம் போகிறேன்
நிலவு ஓய்ந்து தேய்கிறவரை...
குடில் முற்றத்தில் கோடை வெயில்
பொழுததிர மல்லாந்து விட
ஏரி கொதிக்கிறது
குடிலினின்று ஒட்டகம் இரைதேடியபடி
வெகுதூரம் சென்றுவிட்டது
பாதை நெடுக மூன்றுகால்களிட்டப் புள்ளிகள்...
பிள்ளைகள் மீன் துண்டுகள் கேட்கின்றன
மனைவி புகைந்து நாள்பட்ட அடுப்பைச் சுட்டுகிறாள்
நிரம்பித் ததும்பும் ஏரி நீர் மீதேறி நான்
மூச்சிரைக்க ஓடுகிறேன்
மேலும் முக்குளித்து எழுகிறேன்
கனவில் இரவின் நெடிய மணித்துளிகள் நுரைக்க நுரைக்க