கவிஞர் கூடல் தாரிக்கின் 'மூங்கில் வனம்' - ஒரு பயணம்
வாசகர்களின் வறட்சிக் காலத்திற்காக, ஒரு மழைக்காலத்தை 'மூங்கில் வனம்' என்ற பெயரில் தொகுப்பாக பரிசளித்துள்ளார் கவிஞர் கூடல் தாரிக்.
ஒரு மேற்கு தொடர்ச்சி மலை வாசி, வனத்தை தொகுப்பதில் வியப்பேதுமில்லைதான். தான் உணர்ந்த வனத்தின் பெருநிழலில் வாசகர்களை இளைப்பாறச் செய்து, அதன் மழையில் நீராட்டி பசுமையில் பசியாற்றி அனுப்புவது எளிதல்ல ஆனால் அதனை மூங்கில் வனம் தந்து சாதித்திருக்கிறார்.
ஒரு கவிஞனின் கவிதையில் கம்பனின் வீச்சு உள்ளது, பாரதியின் சாரல் தெறிக்கிறது என ஒப்பு நோக்குவதைவிட அவனை அவனாகவே பார்த்து, கவிதைகளை கவிஞனுக்கும் வாசகனுக்குமான பாலமாக உருவகித்தால் கவிதைச் சமூகம் வற்றாத நதியாகும்.
உதடுகளின்றி தன் நிலக்காதலியை முத்தமிடும் மழை, முத்த மழைத்துளிகள் தீண்டியவுடன் மண்ணின் புளகம் என மெல்லிய காதலுடன் நம்மை வரவேற்கிறது மூங்கில் வனப் பயணம்.
ஓரிதயத்தில் மலரும் காதல் உணர்வுகளை சமாளிப்பதற்கே மூச்சு திணறுகிறது. ஆனால், கவிஞர் மழையை ஈரிதயங்களால் காதல் செய்கிறார்.
தன் காதலியை, தமிழ் இலக்கணத்துடன் ஒப்பிட்டு, காய்கள் தரும் வெண்பாக்களை விட சுவை மிகுந்த கனிகள் தருபவள் தம் மழைக்காதலி என்கிறார்.
கால்களற்ற பயணங்கள் களைப்பாய்த் தோன்றவில்லை இதுவரையிலும் மூங்கில் வனத்தினூடே..
பரிசில் பெற்றுத் திரும்பும்
புலவனின் மனநிலையில்
இந்த மழையினை
இரசித்துக்கொண்டிருக்கிறேன்..கவிஞரின் இந்த வரிகளில் மழையை எடுத்துவிட்டு, மூங்கில் வனத்தைப் போட்டுக்கொண்டால் வாசகனின் பார்வையாக மாறிக்கொள்கிறது.
மிகுந்த சப்தத்துடன் கிளையை முறிக்கும் மரம்தான், மௌனமாய் பூவொன்றையும் உதிர்க்கிறதாம். தென்றலில் பூவுதிர்த்து ப்ரபோஸ் செய்யும் அதே மரம், புயலடிக்கையில் ப்ரேக்-அப் செய்து கொள்கிறதாம். அட, நான்கே வரிகளில் குறிஞ்சித்திணையும் பாலைத்திணையும்.
மணலெங்கும் உப்புமழை பொழிகிறாள், கரை திரும்பா கணவனை நினைத்து அழுபவள் நெய்தல் திணையைப் பாடுகிறாள்.
"பொழியும் மழைக்கிடையில்
அடிக்கத்தான்
செய்கின்றது
வெயிலும்"..வரிகளில் பொழியும் காதல் மழைக்கிடையே ஊடலெனும் வெயில் புகுந்து, மருதத் திணையாய் சிரிக்கிறது.
மழைபோல
இனிமையாகத்தான்
இருக்கிறது
மழைக்காகக்
காத்திருத்தலும் - மழைக்காதலுனுக்காக நிலக்காதலி காத்திருக்கும் முல்லைத் திணைக் காலங்கள்.
நாலு வயிறு நெறஞ்சா போதும் என்கிற, மழைக்காலத்து பணியாரம் சுட்டு விற்பவள் மூலம் மூங்கில் வனத்திற்குள் சமூக யானைகள் உலவத் தொடங்குகின்றன.
"மழைக்காலத்தை
வெப்பமாக்குகிறது
புதர்களுக்கிடையில்
கீறலுடன்
கண்டெடுக்கப்படும்
சிறுமியின் பிணம்"...மூங்கில்களில் முட்களுமுண்டு ஜாக்கிரதை. "ஆலயத்தில் கற்பழிப்பு
ஆகமத்தில் எவ்விதி" என்ற மற்றொரு சமூகக் கவிஞனின் கேள்வியே இதற்கு பதிலாக எழுகிறது.
"வனத்தையும் வாழ்வையும்
இழந்து
சபிக்கப்பட்ட யானையைத்தான்
ஆசிர்வதிக்க
நிர்பந்திக்கின்றான் பாகன்" மூங்கில் வனத்தின் முத்தாய்ப்புக் கவிதை. வருங்காலங்களில் சபிக்கப்பட்ட யானைகள்தாம் நாமெல்லாம். பாகன் யாரென நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீண்ட நாட்களாக உரையாடலை தவிர்த்தவன், இந்தப் பொழுதில் மூங்கில் வனத்துடன் பேசத் தொடங்கியிருந்தான். ராஜா என்று தான் அழைக்கப்படுவதை விரும்பாதவன், உள்ளங்கையில் அவன் மடக்கி வைத்திருந்த உதட்டுச் சாயம் ஊரறியச் செய்தது. மஞ்சளுடனும் குலுங்கும் வளையலுடனும் வீட்டைவிட்டு வெளியேறிவனுக்காக விளிம்புநிலை மனிதர்களுக்கான கதவுகளை திறந்து விட்டிருக்கிறது வனம்.
வெளிச்சத்தின் தேவையறிந்து மெழுகுவர்த்தியேற்ற, மின்னலைத் தந்த மழை, ஊர் முழுக்க தாகம் தணித்த மண்பானைக்கிழவியின் பிரேதத்தை குளிப்பாட்ட தண்ணீர் தர மறந்துவிட்டதாம்.
மூங்கில்கள் கூட்டுக்குடும்பத்தை தொலைத்து, தனிமரமான பின், நெடுந்தொடரிலும் முகநூலிலும் தங்களை தொலைத்த பெற்றோர் எதிர் வீட்டுக்காரனிடம் தங்கள் குழந்தையை தொலைக்கும் பரிதாபத்தை தோலுரிக்கிறது.
மழலைக்கு மழைப் புகட்டுகிறாள் மார்பு வற்றிய பாதசாரி. முலைப் புகட்ட வயிறு நிறையும். மழைப் புகட்ட என்ன நிறையும்?
மழையில் நனைந்து கொண்டு வரும் கீரை விற்பவளுக்கு, கிடைக்கும் வேண்டும் வேண்டாம் என்ற ஒற்றை பதிலில்தான் அவளின் பசி அடங்குவதிலும் நீள்வதிலும் இருக்கிறது. வரிகளை படிக்கும் போது, நாமே ஓடிப்போய் எல்லா கீரைக்கட்டுகளையும் வாங்கி வந்துவிட வேண்டும் போலிருக்கிறது. ஆனால், ஏடிஎம் அட்டையில்தான் அவ்வளவு பணமில்லை.
" சிறுவயதிலேயே
வயிறு புடைத்தவன்
மனனத்துடன் சொல்கிறான்
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
சகத்தினை அழித்திடுவோம்
விசில் ஊதி
விரட்டப்படுகின்றான்
வேடம் ஏதும் இல்லாமல்
பசியுடன் வேடிக்கை
பார்க்கும் பாரதி".....வனம் முழுக்க முள்ளாய் குத்தும் முரண்கள்.
விளக்கை ஏற்றி தேடத் தொடங்குகிறேன் மற்றொரு விளக்கை. அடர்வனத்துள் தொலைந்து கிடக்கும் நிலவெனும் குறியீடுகள்.
ஒற்றையடிப் பாதையில் வீடு திரும்புகிறவனுக்கு வழித்துணையாய் மழை. நதியொன்றினை நேர் கோட்டில் வரைந்தபடியே செல்லவைக்கிறது மழை.
புவித் தோன்றலின் மகா வெடிப்புக் கொள்கையின் பரிணாம வளர்ச்சியில், நிலம், மழை, வனம், விலங்கினம், மனிதம் என்ற வரிசையில் பசி, வறுமை, மூன்றாம் பாலினம், பிச்சைக்காரன், காதல்,காமம், சுயநலம் போன்றவை வராதுதான். ஆனால், இத்தொகுப்பு வரிசைகட்டுகிறது இவையனைத்தையும், மந்தையின் நடுவில் தனித்து நிற்கும் மேய்ப்பனாக.
ஓர் அடர் வனத்திற்கு விரல் பிடித்து அழைத்துச் செல்லும் இத்தொகுப்பில் வழி நெடுகெங்கும் குறியீடுகளும், படிமங்களும், தொன்மங்களும் பரவிக்கிடக்கின்றன.
மூங்கிலை யாசித்து வனத்தில் நுழைபவருக்கு, புல்லாங்குழல் வாசித்து மெல்லிய இசையில் மிதக்கவிட்டு மனதை வசமாக்குகிறது இந்த மூங்கில் வனம்.
குறிப்பு: ஜூன் 2020 மாதாந்திர பரிசு பெற்ற படைப்பு.