வரட்டாறு மேட்டை ஏறிக்கடந்தா பள்ளிக்கூடம். பெரியகுளம் தாலுகாவுல இருக்குற லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி பஞ்சாயத்து பிள்ளைக அஞ்சாவதுக்கு மேல படிக்கனும்னா இங்க தான் வருவாக...
இன்னக்கி எல்லா கட்டிடமும் காங்கரீட் கட்டிடமா நிக்குது. ஆனா.. அன்னக்கி.. இருவது வருஷத்துக்கு முன்னால ரெண்டே ரெண்டு கட்டிடம் தான் காங்கரீட். அதுல ஒன்னு ஹெட்மாஸ்டருக்கு.
கூரசெட்டுல தான் வகுப்பு நடக்கும். மூனு பக்கச் சுவரு முழு உசரத்துக்கும், முன்பக்கம் மட்டும் கால்வாசி உசரத்துக்கும் இருக்கும். முன்பக்க மதில்மேல ஏறி குதிச்சும் வரலாம், வாசல் வழியாவும் உள்ள வரலாம். எல்லாம் வாத்தியாரு இருக்காறா.. இல்லையான்றத பொறுத்து நடக்கும்
வகுப்புல பேன், லைட் எதுவும் கெடையாது. சூரிய வெளிச்சம் சும்மாவே அவ்வளவு கிளீனா கெடைக்கும். முன்னால நின்ன வேப்பமரக்காத்து எங்கள வேர்க்காம பாத்துக்கிரும்
போர்டுக்கு கீழ பழைய இரும்பு மடக்கு சேர், அதுக்கு முன்னாடி ஒரு ஸ்டூல். இது வாத்தியாருக்கு. எங்களுக்கு சிமெண்ட் தரைதான். உக்காந்து எந்திரிச்சா.. புளூ கலரு டவுசருக்கு பின்னாடி வெள்ளையடிச்சது மாதிரி இருக்கும்
சிவசாமி வாத்தியார் தான் ஆறாம் வகுப்புக்கு கிளாஸ் டீச்சர். வயசு அம்பத்தஞ்சை தாண்டும். ஒல்லியான , கருத்த தேகம், நல்ல உசரம். தேங்காய துருவி எடுத்த செரட்டா கணக்கா, ரெண்டு பக்க கன்னத்துலயும் குழி. பல் இருக்கா.. இல்லையான்னே தெரியாது. வெத்தலயை மென்னு மென்னு வாயெல்லாம் செவந்து கெடக்கும். மென்னு துப்புனதுபோக வெத்தலயில மிஞ்சுனது கொஞ்சம், அவரு வாயோட ரெண்டு பக்க எல்லையிலும் அணை கட்டி நிக்கும்
எட்டு முழ வெள்ள வேட்டி, கழுத்து வழியா கழட்டுற வெள்ளச் சட்ட போட்டிருப்பாரு. பெரம்பு ஒன்னு எப்பவும் கையில இருக்கும். ஒரு கையில வேட்டிய தூக்கி பிடிச்சுக்கிட்டு, இன்னொரு கையில பெரம்போடதான் வகுப்புக்கு வருவாரு
ஆறோ, ஏழோ தான் பொம்பளப்பிள்ளைங்க, ஆம்பள பசங்க தான் வகுப்புல அதிகம். சிவசாமி வாத்தியாரு இங்கிலீஸ் பாடமும், கணக்கு பாடமும் எடுத்தாரு
வயசானதாலோ என்னவோ, சாப்பிட்டு மதியத்துக்கு மேல வகுப்புக்கு வந்தார்ன்னா, அப்படியே சேர்ல சாஞ்சு தூங்கிருவாரு. அவரு தூங்கி விழுறது எங்களுக்கெல்லாம் சிரிப்பா இருக்கும்.
அப்படி தான் ஒருநாளு அசந்து தூங்கிட்டாரு. பள்ளிக்கூடத்துல சோறு வாங்கித்திங்க, கொண்டு வந்த சில்வர் தட்ட வச்சு, குசும்பு புடுச்ச ஒருத்தன், வாத்தியாரு மொகத்துல ஒளி அடிக்க, சூடு தெரிஞ்சோ என்னவோ.. டக்குன்னு முழிச்சு பாத்து, என்ன நடந்ததுன்னு ஒரு வழியா யூகிச்சுக்கிட்டாரு.
யப்பா.. அன்னக்கி தான் அவரோட கோவத்த நாங்க பாத்தோம். பெரம்ப வச்சு எல்லாத்தையும் விளாசிப்புட்டாரு விளாசி. அதுக்கப்புறம் அவரு மெதுவா பேசுனாலும், எங்களுக்கு மெரட்டுறது மாதிரியே தெரிஞ்சுச்சு. இவருக்கு பதிலா வேற வாத்தியாரு வரமாட்டாரான்னு நெனச்சோம்.
முழுபரீட்சைக்கு கொஞ்ச நாளைக்கு முன்னாடி, வகுப்புல சிவசாமி வாத்தியாரு பாடம் நடத்திக்கிட்டு இருந்தாரு. அப்ப திடீர்ன்னு துரைமுருகன்ற பையனுக்கு வலிப்பு வந்துருச்சு. கீழ விழுந்து கையையும், காலையும் இழுத்து அவன் துடிச்சத பாத்து, வாத்தியாரு பயந்துபோயிட்டாரு. என்ன செய்றதுன்னு தெரியாம இங்கிட்டும், அங்கிட்டுமா ஓடுனாரு. இரும்பு சேர மடக்கி வேகவேகமா கொண்டுவந்து அவன் கையை புடுச்சு சேருமேல வச்சு பாத்தாரு. வலிப்பு நிக்கிற மாதிரி தெரியலை. சுத்தி நின்னுக்கிட்டு இருந்த எங்களையெல்லாம் ஒருபார்வை பாத்தவரு, அப்படியே தூக்க முடியாம அவன தூக்கிக்கிட்டு ஹெட்மாஸ்டர் ரூமுக்கு ஓடுனாரு
ஒருவழியா ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி, துரைமுருகனுக்கு சரியாயிருச்சு. திரும்ப பள்ளிக்கூடம் வந்தப்ப, அவன பாத்ததும், வாத்தியாரோட ரெண்டு கண்ணுலயும் முட்டிக்கிட்டு நின்ன தண்ணி சொல்லிருச்சு..., எங்க சார் எப்படிப்பட்டவருன்னு.., அவன் தலையில மெல்ல தடவிக்கொடுத்து, “போய் உக்காரு” ன்னாரு.
முழு பரீட்ச்சை லீவு முடிஞ்சு எல்லாரும் ஏழாவதுக்கு போயிட்டோம். சிவசாமி சார பாக்கனும்னு தோணுச்சு. ஆறாங்கிளாசுக்கு போனோம். அங்க வேற வாத்தியாரு உட்கார்ந்திருந்தாரு
சார்.. சிவசாமி சார் வரலைங்களா?
ஓ.. நீங்க அவருகிட்ட படிச்ச பசங்களா..?
ஆமா சார்...
“விசயம் தெரியாதா உங்களுக்கு. சிவசாமி சாருக்கு குடலிறக்க நோய் இருந்திருக்கு. அதுக்கு ஏற்கெனவே அடிவயித்துல ஆப்ரேஷன் பன்னியிருக்காரு. இந்த பாதிப்பு இருக்குறவுக சொம தூக்கக்கூடாது.
ஆனா, கொஞ்ச நாளுக்கு முன்னாடி கனமா எதையோ தூக்கியிருக்காரு. அதுல அடிவயிரு ஜவ்வு கிழிஞ்சு, குடல் பிதுங்கிருச்சு. அதோட வேலைக்கும் வந்திருக்காரு.
கடைசியில வேதனை அதிகமாகி ஆஸ்பத்திரியில பாத்தும் பலனில்லாம போச்சு. பத்து நாளுக்கு முன்னாடி போயி சேந்துட்டாரு பாவம்”
அவரு சொல்லி முடிக்க
நெலகொலஞ்சு நின்ன எங்க காதோரம்
காத்துல வந்த வெத்தல வாசம் சொல்லுச்சு
“சிவசாமி சார் இருக்காரு!”