“இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்களுடன் சமரசம் செய்து கொண்டு, பதவியில் நீடிப்பதை விட, பிற்பட்டோரின் நலனுக்காக என்னுயை பிரதமர் பதவிதான் தடை என்றால் அதனை இழக்கவும் தயாராகி விட்டேன்” என்று நாடாளுமன்றத்தில் கம்பீரமாக முழக்கமிட்டவர் விஸ்வநாத பிரதாப் சிங் என்கிற வி பி சிங்.
நல்லவிலை கொடுத்துத்தான் இலட்சியங்களை வாங்க வேண்டும் என்பார்கள். மண்டல் கமிஷன் பரிந்துரையை நான் அமலாக்கம் செய்வதன் மூலம் என் தலைமையிலான அரசு கவிழும் என்றால் அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று உறுதியுடன் பேசியவர் வி.பி.சிங்!. சுதந்திரம் பெற்று 43 ஆண்டுகள் ஆன பிறகும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் காலம் காலமாக அரசு நிர்வாகத்தில் உரிய வகையில் பங்கு பெற முடியாத சூழலை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார். தூசி படிந்த நிலையில் கவனிப்பாரற்றுக் கிடந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை சட்டமாக்க முடிவு செய்தார்.
1990 ஆம் ஆண்டு நவம்பர் 11-ல் நாடாளுமன்றத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை தாக்கல் செய்தார். பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அரசு வேலை வாய்ப்பு மற்றும் கல்வி பெறுவதற்கான மூலவித்துதான் அந்த கமிஷனின் பரிந்துரை. உயர்சாதி ஆதிக்கவர்க பிரிவினருக்கு எதிராக இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு இருப்பதால் அதனை நேரடியாக எதிர்க்க முடியாமல், எப்படியாவது வி பி சிங் ஆட்சியை கவிழ்க்க விரும்பியது சனாதனக் கூட்டம். அதற்காக அத்வானி ராமரின் பெயரைச் சொல்லி ரதத்தில் ஏறினார் என்பதும் கடந்த கால வரலாறு.! இந்த ரதம் பாபர் மசூதியை இடிக்கும் இடத்தில் செல்லும் என்பதை முன்கூட்டியே உணர்ந்தார்
400 ஆண்டு கால புகழ்மிக்க பாபர் மசூதியை இடிக்க வேண்டாம், அதே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கமே தனி இடம் ஒதுக்கி, அரசின் பணத்திலேயே நிதிகள் வழங்கி ராமருக்கு கோயில் கட்டுவோம் என்று கண்ணியத்துடன் அறிக்கை தந்து, மதச்சார்பின்மையை காப்பாற்ற முனைந்தார் வி.பி.சிங்! இன்று உச்சநீதிமன்றம் பாபர் மசூதியை இடித்தது தவறு எனச் சுட்டிக் காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. வி.பி.சிங் ஆட்சி குறுகிய காலம்தான் நடைபெற்றது என்றாலும், விரிந்த பார்வையுடன் ஆட்சி நடைபோட்டது. இன்று காவிரி நதிநீர் பிரச்சனை ஓரளவு முடிவிற்கு வந்திருக்கிறது என்றால் அதற்கான அடிக்கல்லைப் போட்டவர் வி.பி.சிங்தான். காவிரி நடுவர் மன்றத்தை அமைத்த காரணத்தினால்தான் இன்று தமிழகம் கர்நாடக மாநிலத்தின் பிரச்சனையை எதிர்கொண்டு வெற்றிபெற முடிந்தது. அது மட்டுமல்ல அண்டை நாடான இலங்கையின் இனப் பிரச்சனையில் அவசர முடிவாக ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவம் இலங்கைக்குச் சென்றது. ஈழமக்களும், சிங்களவர்களும் விரும்பாத சூழலில, 1,100 இந்திய ராணுவ வீரர்கள் மடிந்த நிலையில் இனியும் இந்திய அமைதிப்படை அங்கிருப்பது சரியல்ல என்கிற முடிவை மேற்கொண்டு படையை வாபஸ் பெற உத்தரவிட்டவர் வி.பி.சிங்.
மக்கள் நலம் பேணும் தலைவர்கள் எவருடைய சிபாரிசின் பேரிலும் உருவாக மாட்டார்கள். அவர்களின் தனித் திறமைகள் மற்றும் குணநலன்களுக்கு ஏற்பத்தான் உருவாகிறார்கள். அதற்கேற்ப வி பி சிங், கல்லூரியில் படிக்கின்றபொழுதே மாணவர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகிறார். வசதியான மன்னரின் குடும்பத்துப் பிள்ளை என்கிற அந்த மேல்தட்டு எண்ணங்கள் கொஞ்சம் கூட இல்லாமல் மிக எளிமையான முறையில் அனைத்து தரப்பு மாணவர்களிடமும் அன்பொழுகப் பழகி, அவர்களின் பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பாக மாணவர் சங்கத் தலைவர் பொறுப்பு வி.பி.சிங்கிற்கு அமைகிறது. இதே சமகாலத்தில் வன்மை இல்லாமல் மென்மையான முறையில் இருப்பவர்களிடம் நிலத்தை கேட்டு இல்லாதவர்களுக்கு வழங்கும் நடைமுறையை வயதான மனிதராக இருந்த வினோபா உருக்கினார். பூமிதான இயக்கம் ஒன்றினைத் தொடங்கி இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில், தடிஊன்றி நடந்த அந்தப் பெரியவர் உத்திரப் பிரதேசத்திற்கு வருகை தருகிறார். மன்னரின் பரம்பரையில் பிறந்த வி பி சிங், வினோபாவின் கோரிக்கையை ஏற்று மனமுவந்து தன் முன்னோர்களின் 100 ஏக்கர் நிலத்தை புன்சிரிப்புடன் வழங்குகிறார் வி.பி.சிங்.
தன்னுடைய 38 வது வயதில் 1969-ல் உ.பி.யின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகிறார். பிறகு 1971-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆகிறார். வி.பி.சிங்கின் தோற்றப் பொழிவு, அதிர்ந்து பேசாத தன்மை இந்த குணநலன்களோடு அனைவருடன் கணிந்து பேசுதல் போன்ற மனப்பாண்மையை நேரில் கவனித்த பிரதமர் இந்திரா காந்தி தன்னுடைய அமைச்சரவையில், துணை வர்த்தக அமைச்சராக அமர்த்திக் கொண்டார். மிகச் சிறப்பான முறையில் மத்திய அமைச்சரவையில் செயல்பட்டாலும், உ.பி மாநில அரசியலில் இவரின் பங்களிப்பு அவசியமாகவே இருந்தது. முக்கியமாக 1980களில் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களால் நிகழ்த்தப்பட்ட கொலை, கொள்ளைகளுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்கிற தீர்க்கமான முடிவுடன் பிரதமர் இந்திரா காந்தி, வி.பி.சிங் அவர்களை உத்திரப்பிரதேசத்தின் முதல் அமைச்சராக பதவியில் அமர்த்துகிறார். முதல்வராகப் பதவியேற்ற வி.பி.சிங் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். உங்களின் உடனடித் திட்டம் என்று எதை முதன்மைப் படுத்துவீர்கள் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உ.பி. மக்களின் அமைதி இன்மைக்கும் அச்சத்திற்குக் காரணமாக இருக்கும் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் அட்டூழியத்திற்கு ஒரு முடிவுகட்ட வேண்டும் என்பதுதான் எனது உடனடி நடவடிக்கையாக இருக்கும் என்கிறார் வி.பி.சிங். ஆனால் வேறொரு விபரீத நிகழ்வொன்று நடைபெற்றது. வி.பி.சிங்கின் சொந்தச் சகோதரரான சந்திர சேகர் பிரதாப் சிங்கை கொலை செய்து, அவரின் சடலத்தை முதல் அமைச்சரின் வீட்டு வாசலிலேயே கொண்டு வந்து போட்டனர் சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள். இந்த சம்பவத்தால் உ.பி. மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அதிர்ந்து போனது. தற்போதைய பெரும்பாலான அரசியல் தலைவர்களைப் போல வாய்ச்சவடால் பேசி நிலைமையை சமாளித்து முதல்வர் பதவியில் ஒட்டியிருக்க விருப்பமில்லாத வி.பி.சிங் தன்னுடைய முதல்வர் பதவியினை ராஜினாமா செய்ய முடிவெடுத்தார். “என்னுடைய சொந்தச் சகோதரரையே காப்பாற்ற முடியாத என்னால் எப்படி என் மாநிலத்து மக்களை காப்பாற்றப்போகிறேன்” என்று சொல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். கருமமே கண்ணாக இருந்து செயல் பட்ட திரமைசாலிகளை ஒரு போதும் ஓய்வெடுக்க காலம் அனுமதிக்காது என்பது போல, 1984-ல் ராஜீவ் காந்தி பிரதமரான போது நிதிஅமைச்சராக பொறுப்பேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர்தான் ஆனாலும் அவரின் சிந்தனை முழுவதும் விளிம்புநிலை மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை நோக்கியே சென்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் அரசாங்கத்திற்குப் போட்டியாக கறுப்புப்பண முதலாளிகள் நடத்தி வரும் நிழல் அரசாங்கத்தை ஒழித்துக் கட்டினால்தான், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என்று நம்பினார் வி.பி.சிங். அதிரடியாக கள்ளச் சந்தைகளை ஊக்குவிக்கும் தொழில் அதிபர்களின் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் எவ்வித அரசியல் குறுக்கீடும் இன்றி நேர்மையான முறையில் சோதனையிட ஆணையிடுகிறார். சோதனையின் போது கணக்கில் வராத கட்டுக்கட்டான பண மூட்டைகள் மற்றும் சொத்து குறித்த ஆவணங்கள் கைப்பற்றப் படுகின்றன. அன்றைக்கே அம்பானி நிறுவனத்தின் பல முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்தன. இதில் புகழ்பெற்ற நடிகர் அமர்தாப் பச்சனின் வீடும் தப்பவில்லை. அம்பானியின் பாலிஸ்டர் தொழிலுக்கான மூலப்பொருளாக இருக்கும் “டெரிப்தாலிக்” அமில இறக்குமதியின் மீது வரிகள் போடப்பட்டன. ஒரு அரசாங்கமானது உழைக்கும் சாமானிய மக்களின் மீது எவ்வளவுதான் தாக்குதலைக் கொடுத்தாலும், அரசாங்கத்திற்கு ஒரு பாதிப்பும் வராது. ஆனால் பொருளாதார ஆதிக்க வர்கத்தினரின் மீது சிறுநகக் கீரல்கள் ஏற்பட்டாலும் அதன் விளைவு அரசாங்கத்தையே ஆட்டிப்படைக்கும். அல்லது அந்த துறையின் அமைச்சர் தூக்கி எரியப்படுவார். அதன் முதல் கட்டமாகத்தான் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து வி.பி.சிங் விலக நேர்ந்தது. பிறகு பாதுகாப்புத்துறை அமைச்சராக மாற்றப்படுகிறார். போர்பஸ் பீரங்கிகள் வாங்கியதில் முறைகேடுகள் என்கிற ஆவணங்கள் வி.பி.சிங் கைகளில் வருகிறது. இதை அறிந்த ராஜீவ் காந்தி சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கிறார். இந்த விடுதலைதான் இந்தியாவின் பிரதமராக வி பி சிங் உயர்வதற்கு உதவியது. நாட்டில் 51 சதவீதம் கொண்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக காகா கலேல்கர் என்பவர் தலைமையில் நேரு ஆட்சியில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் அறிக்கையை நேருவால் நாடாளுமன்றத்தில் தாக்கல்கூட செய்ய முடியவில்லை. பிறகு 1979 ஆம் ஆண்டில் பிந்தோஷ் பிரசாத் மண்டல் என்பவர் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. பி பி மண்டல் கமிஷன் என்கிற இந்தக்குழு பரிந்துரை செய்ததுதான் பிற்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு. இதன் மூலம் ஓபிசி உருவாக்கி இன்று லட்சக்கணக்கான குடும்பத்து பிள்ளைகள் அரசாங்க பதவியில் உள்ளனர். இந்தியாவின் புகழ் பெற்ற பிரதமர்களாக இருந்த நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ஆகியோர்களால் செய்ய முடியாத பிற்படுத்தப்பட்ட நலனை 11மாதம் மட்டுமே பிரதமராக இருந்த வி பி சிங் செய்து காட்டியது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
குறிப்பு: ஜூன் 2020 மாதாந்திர பரிசு பெற்ற படைப்பு.