நான் என் நண்பனிடம்
சொன்னேன் கை நீட்டி
நண்பா அதோ பார் அவன் தோளில் சாய்ந்திருக்கிறாளே அந்த அழகிய பெண்
அவள் தான் நேற்று இது போலவே
என் தோளில் சாய்ந்திருந்தாள் ..... ஆம்
என் நண்பன் சொன்னான்
அவள் நாளை இது போலவே என் தோளில் சாய்ந்திருப்பாள் தெரியுமா ?
அதோ பார் அவனருகில் எத்தனை நெருக்கமாக அமர்ந்திருக்கிறாளோ.
அதே நெருக்கத்தில் நேற்று என்னோடும் அமர்ந்திருந்தாள்
அவன் சொன்னான்
அதே நெருக்கத்தில்
அவள் நாளை என்னோடு அமர்ந்திருக்கக் கூடும்
பார்த்தாயா அவன் கோப்பையிலிருந்து
எச்சில் ஓயினை அவள் பருகுவதை
நேற்று என் கோப்பையிலிருந்தும்
இது போலவே தான் பருகினாள்
என்றேன்
நாளை இது போலவே
என் கோப்பையிலிருந்தும்
அவள் பருகக் கூடும் என்றான்
நான் கத்தினேன்
அதோ பார் அவன் கண்களுக்குள்
நுழைந்தே விடுபவள் போல
அத்தனை காதலோடும் தகிப் போடும்
விழிகள் விரிய அவனை உற்று நோக்குகிறாளே
அது போலவே தான் அவள் நேற்று என்னை
அவள் நாளை அது போலவே என்னையும் நோக்குவாள்
என் நண்பன் சொன்னான்
கேட்டாயா உயிரையே கரைத்து விடும் குரலில்
அவன் காதில் ஒரு காதல் பாடலை
அத்தனை இரகசியமாய் கிசு கிசுக்கிறாளே
இதே இதே இரகசியப் பாடலைத் தான்
அவள் நேற்று என் காதோடு
நாளை என் காதில் இதே பாடலை
அவள் கிசுகிசப்பாள் என்றான்
அதோ பார் அவனை எப்படி உயிரோடு சேர்த்து
தழுவிக் கொண்டிருக்கிறாள்
அது போலவே தான்
அவள் நேற்று என்னை
நாளை அது போலவே அவள் என்னையும்
தழுவிக் கொண்டிருப்பாள் பாரேன் என்றான்
நான் சொன்னேன் என்ன வித்தியாசமான பெண் அவள்
அவன் மெதுவாக சொன்னான்
நண்பா வாழ்க்கையைப் போலவே
ஆண்கள் அவளை எடுத்து சொந்தம் கொண்டாடுகிறார்கள்
ஆனால் அவளோ மரணத்தைப் போலவே
ஆண்கள் அத்தனை பேரையும் வெல்கிறாள்
பிறகு சூன்யத்தைப் போல
அனைவரையும் ஆகர்ஷித்து விடுகிறாள்
மூலம்:கலில் ஜிப்ரான்