நூல் பெயர் : காதல் அசுரன் கிளைவ்
நூல் வகைமை : நாவல்
ஆசிரியர் :
எம்.எம்.தீன்
பதிப்பு :
முதற் பதிப்பு - 2025
பக்கங்கள் :
364
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 500
காதல்
என்பது உள்நிலையில் நிகழ்வது. ஆனால் நாம்தான் அதை வெளியே தேடி வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இருத்தலின் தன்மை மிக மிக இனிமையாகவும், அழகு நிறைந்ததாகவும்
இருக்கிறதெனில், காதல் மனம் இருக்கிறது என அர்த்தம். உணர்ச்சிகள் இனிமையுடன் இருந்தால்,
இயற்கையாகவே காதலோடு இருக்கிறோம் என்றும் சொல்லலாம். அப்படி காதலோடு இருந்தால், பார்ப்பது
என்னவாக இருந்தாலும், அது ஒரு ஆணாக, பெண்ணாக, குழந்தையாக, மரமாக, விலங்காக, பறவையாக
அல்லது சுவாசிக்கும் காற்றாக இருந்தாலும்கூட, அன்புடன் எதிர்கொள்ள முடியும் என்பதே
அதன் ஆகச்சிறந்த பண்பு. காதல் செய்ய போகிறோம் அல்லது காதலை அடையப் போகிறோம் என்று நினைத்தால்,
அது ஒருபோதும் நிகழப் போவதில்லை. ஆட்படுவதற்கு சம்மதிக்கும்போதுதான், அங்கே காதல் எழும்.
உண்மையில், காதல் என்பது எப்போதும் அணைத்துக்கொள்வது, எதையும் விலக்குவதல்ல. அப்படி
எதற்கும் விலக்கு அளிக்காமல் வாழ்ந்து மறைந்த, இந்திய மற்றும் பிரிட்டிஷ் வரலாற்றில்
மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக விளங்கியவரும், குமாஸ்தா முதல் ராணுவத்
தளபதி வரை உயர்ந்தவரும், காதல் மன்னருமான ராபர்ட் கிளைவ் பற்றி ஏராளமான தகவல்கள் இணையத்தில்
இருந்தாலும் அவரது காதல் வாழ்வைப் பற்றி முழுமையாக சொல்லும் எந்த நூலும் தமிழ் இலக்கியத்தில்
இதுவரை வந்ததில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்ப, ராபர்ட் கிளைவ் அவர்களின் வெற்றியின்
சரித்திரங்களுடன் காதல் சாகசங்களையும் உள்ளடக்கிய
வரலாறுகளை ஒன்று திரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘காதல் அசுரன் கிளைவ்’ நூல். இதில்
உள்ள கதையும் காட்சியமைப்பும் வாசிப்பவரின்
மனதுக்குள் ஊடுருவி, ஆங்கிலேயர்களின் வெற்றியின்
ரகசியத்திற்குப் பின்னாலிருக்கும் வரலாற்றைப் புரிய வைக்கும், காதல் காட்சிகளில் கொஞ்சம்
உருக வைக்கும், பல சாகசங்களில் நிறைய உறைய வைக்கும் என்பதே இந்நூலின் பலம்.
திருநெல்வேலி மாவட்டம், அரிகேசவநல்லூர் என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வாழ்விடமாகவும்
கொண்ட எழுத்தாளர் எம். எம். தீன் அவர்களுக்கு இது
பத்தாவது நூல். இதற்குமுன் இவர் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்ட நீர்ப்பரணி
எனும் நூல் இலக்கிய உலகில் மிகுந்த கவனம் பெற்றது. முதுகலை ஆங்கில இலக்கியமும், சட்டமும்
பயின்ற இவர், திருநெல்வேலி நீதிமன்றங்களில் 32 ஆண்டுகளுக்கு மேலாக வழக்கறிஞராகப் பணி
புரிந்து வருகிறார். இலக்கியம், வரலாறு ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.. அவரது முதல்
சிறுகதை தொகுப்பு “எம் ஜி ஆருடன் பேசிக்கொண்டிருக்கிறேன்”
என்பதாகும். “அவளின் தீண்டல்” மற்றும் “தன்னூத்து ராசா” மற்ற சிறுகதை தொகுப்புகளாகும்.
“மறவர்மன் குலசேகர பாண்டியன்” எண்ணும் வரலாற்று நூலும் எழுதி உள்ளார்... அவரது முதல்
நாவல் “யாசகம்“ ஆகும். அதன் பிறகு “சந்தனத்தம்மை” “கல்லறை” போன்ற நாவல்கள் எழுதி உள்ளார்.
“கலை இலக்கிய பெருமன்ற” விருது, “சௌமா” இலக்கிய விருது, எஸ் ஏ ஆர் விருது, “ஜீரோ டிகிரி”
மற்றும் “கவிக்கோ” விருது உட்பட எண்ணற்ற விருதுகள் பெற்றுள்ளார். மேலும் படைப்பு இலக்கிய விருது இருமுறை பெற்றவர்
இவர் என்பது குறிப்பிடத்தக்கது.