நூல் பெயர் :
தீசஸின் கப்பல் (சிறார்
இலக்கியம்)
ஆசிரியர் :
ராம் பிரசாத்
பதிப்பு : முதற்பதிப்பு -
2024
பக்கங்கள் :
138
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 190
தத்துவம்-கலை-இலக்கிய நோக்குக்கும், அறிவியல் நோக்குக்கும்
உள்ள முக்கியமான மைய கருவைச் சுற்றியும், தத்துவதர்க்கமும் அகக்காட்சியும் கற்பனையும்
உள்ளுணர்வும் சார்ந்து வருங்காலத்தில் இப்பிரபஞ்சம் எப்படி இயங்கும் என்ற எல்லைகளை
வகுத்தும் எழுதப்படுகின்ற அறிவியல் புனைகதைகளே அபுனைவு எனப்படும். பொதுவாக ஒரு அறிவியலாளருக்கு
மொழியியல் சார்ந்தோ, குறியீட்டியல் சார்ந்தோ, பின்நவீனத்துவம் சார்ந்தோ அடிப்படை அறிமுகம்
இருக்க வாய்ப்புகள் குறைவு. மானுடவியல் தரப்பில் இயங்கும் எழுத்தாளர்கள் கலைஞர்கள்
அறிஞர்களுக்கும் பெரும்பாலும் அறிவியலின் அறிதல்முறை சார்ந்த புரிதல் இருக்கும் என்ற
வாய்ப்புகளும் குறைவு. இதனால் அறிவியலில் நிகழும் பாய்ச்சல்கள் ஒரு அறிவியக்கத்தின்
வளர்ச்சியின் படிநிலையாக அல்லாமல் பெரும்பாலும் வெறும் தகவல்களாகவே ஒரு பொது வாசகருக்கு
இன்று வந்து சேர்கிறது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கும், அறிவியலை மொழியோடு இணைப்பதற்கும்தான்
இன்று அறிவியல் புனைக்கதைகள் எழுதப்படுகின்றன. ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும்
அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடுகிறது.
அடிப்படையிலேயே ஒரு அறிதல் முறை என்ற ரீதியல் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள
முரண், அறிவியல் புனைவின் கட்டுமானத்திலும் வடிவிலும் கதைச்சமைப்புகளிலும் பரிணமிக்கிறது.
இந்த அழகிய முரணில் பிறந்த குழந்தையே அறிபுனை வடிவம். இத்தகைய அறிபுனை வருங்காலத்தின்
வெளிச்சம் என்பதால் அதன் தனித்தன்மைகளை சிறுவயது முதலே நுகர வேண்டுமென்ற நோக்கில் சிறார்
இலக்கியமாக உருவாக்கப்படிருப்பதே ‘தீசஸின் கப்பல்’ நூல்.
மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகவும் அமெரிக்காவை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி ராம்பிரசாத் அவர்களுக்கு இது பதினைந்தாம் நூல். கணிணி மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றும் இவர் சமூக வலைதளங்கள் மற்றும் இன்றைய இலக்கிய உலகில் தன் படைப்புகளால் நன்கு அறியப்பட்டவர். தமிழ், ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் சரளமாக இந்திய மற்றும் அமெரிக்க உலகளாவிய அறிவியல் புனைவிலக்கிய வெளியில் இயங்கும் இவர் படைப்பு பதிப்பகம் மூலம் வெளியிட்ட “வாவ் சிக்னல்” என்ற விஞ்ஞான சிறுகதை நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் “சிறந்த சிறுகதை நூல் விருது” பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.