நூல் பெயர் : ஆகாசம் நீல நிறம் (கவிதைகள்)
ஆசிரியர் :
விக்ரமாதித்யன்
பதிப்பு :
இரண்டாம் பதிப்பு - 2024
பக்கங்கள் :
162
வெளியீட்டகம் :
இலக்கிய படைப்பு குழுமம்
வெளியீடு :
படைப்பு பதிப்பகம்
விலை :
ரூ 230
கடந்தகாலத் தலைமுறையின் தோள்மீது நின்றுகொண்டு நிகழ்காலத் தலைமுறை இன்னும் நீண்டதூரம்
பார்க்க முடிகிறது; பயணிக்க முடிகிறது என்றால், அது இலக்கியத்தின் மூலம் நிகழ்ந்த அற்புதமேயன்றி
வேறில்லை. ஒரு தோல்வியில் இருந்து ஒரு வெற்றிக்கான பாடத்தைக் கற்க வேண்டும் எனப் பல
அறிஞர்கள் வலியுறுத்திய காலத்தில் ஒரு வெற்றியில் இருந்தே ஒரு வெற்றிக்கான பாதையை இலக்கியத்தின்
மூலம் பெற இயலும் என தீர்மானித்தவர்கள் கவிஞர்கள். கவிதை என்பது மனித உணர்வுகளின் ஆழத்தை
ஊடுருவி ஆழமான சிந்தனைகளை வெளிப்படுத்தும் கலை வெளிப்பாட்டின் எழுத்து மண்டலம். மானுட
சமூகத்தின் சிக்கலான நிலப்பரப்புகளுக்கு தனிநபர்கள் செல்லக்கூடிய நம்பிகையை விதைக்கிறது
இலகியமும், அதில் தோன்றிய கவிதைகளும். கவிதை பெரும்பாலும் சுருக்கமான வெளிப்பாட்டின்
மூலம், துல்லியமான அர்த்தத்தை வெளிப்படுத்த வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்கிறது.
மொழியின் இந்த பொருளாதாரம், ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவத்தைக் கொண்டிருப்பதை
உறுதிசெய்து, ஒவ்வொரு வரியையும் சக்திவாய்ந்ததாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும்
வைத்துக்கொள்கிறது. அப்படிப்பட்ட வரிகளை எழுதி நம்பிக்கைத் தந்த நம்பிராஜன் எனும் விக்ரமாதித்யன்
அவர்களை கவிஞன் என இலக்கிய உலகில் இனம்காட்டியது நகுலன்தான். பாரதி நூற்றாண்டு விழாவையொட்டி
‘அன்னம்’ நவகவிதை வரிசையில் ஒன்றாக வெளிவந்து, அங்கீகாரம் பெற்று, இலக்கிய உலகத்துக்கு
விக்ரமாதித்யன் அவர்களை அறிமுகம் செய்து வைத்ததே ‘ஆகாசம் நீல நிறம்’ எனும் இந்நூல்தான்.
தென்காசியை வசிப்பிடமாகவும் நம்பிராஜன் எனும் இயற்பெயர் கொண்டவருமான படைப்பாளி
விக்ரமாதித்யன் அவர்கள் இதுவரை 40க்கும் மேற்பட்ட நூல்கள் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் ஏற்கனவே பதிப்பித்த இவரின் முதல் கவிதைத் தொகுப்பான இந்த நூலை நம் படைப்பு பதிப்பகம்
மூலம் மறுபதிப்பு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2008ஆம் ஆண்டின்
‘விளக்கு இலக்கிய விருது’, 2014ஆம் ஆண்டிற்கான ‘சாரல் விருது’, ‘கவிஞர் வாலி விருது’,
2019ஆம் ஆண்டுக்கான படைப்புக் குழுமத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ மற்றும்
2021ஆம் ஆண்டின் விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.