கள்ளம் கபடமற்ற உள்ளம் குழந்தைகளுக்கானது. குழந்தையின் உள்ளம் என்பது கடவுளின் இல்லம். போலித்தனமான புன்னகையை உதிர்க்கத் தெரியாதவர்களில் உண்மையானவர்கள் குழந்தைகள். ஒரு குழந்தை தன்னுடன் பழகும், பயிலும் சக குழந்தையை அரவணைக்கும் தருணத்திலிருந்தே சாத்தியப்படும் சகோதரத்துவம். சாதி மதம் மறந்து, பேதங்கள் களைந்து, தீண்டாமை துறந்து அன்பெனும் ஆலயமணி ஒலிக்கப்படும் தருணமும் இதுவே. குழந்தைப் பருவத்தில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள்தான், எதிர்காலத்திலும் பிரதிபலிக்கும். எதிர்காலத்தில் உருவாகப் போகும் தலைவர்களும் இவர்களே, எதிர்காலத்தை உருவாக்கும் தலைவர்களும் இவர்களே. ஆதலால் குழந்தைப் பருவத்தில் நல்ல பழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். அதுவும் இலக்கியத்தின் வழியே பாடலாகக் கொடுப்பது அவர்கள் மனதில் ஆழப் பதிந்துவிடும் அல்லது ஆழ் மனதிலேயே கூட பதிந்து விடும். இப்படிப்பட்ட ஆழ்மனதின் எழுத்தை எல்லாம் உளி கொண்டு செதுக்கி அதை உணர்வுகளின் ஊடாக ஒன்றுதிரட்டி சிறார் பாடலாக உருவாக்கப்பட்டிருப்பதே 'சிற்றில்' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கவிதையும் குழந்தையின் இருள் மனதில் ஒரு பேரொளியைப் படரவிட்டுக் கொண்டிருக்கும் என்பது இத்தொகுப்பின் பலம்.
புதுச்சேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட படைப்பாளி 'ப.தனஞ்ஜெயன்' அவர்களுக்கு இது ஏழாம் தொகுப்பு. இவர் இதற்கு முன்பு படைப்பு பதிப்பகம் மூலம் ஆறு நூல்களை வெளியிட்டு இருக்கிறார். அது பலராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவரது பல படைப்புகள் பல முன்னணி பத்திரிக்கைகளில் பிரசுரமாகி வருகின்றன. படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் மாதாந்திர சிறந்த படைப்பாளி என்ற தனித்துவமான அங்கீகாரத்தை இரண்டு முறை பெற்றவர். மேலும் படைப்பின் உயரிய விருதான கவிச்சுடர் விருதையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.