எல்லோருடைய வாழ்விலும் சில சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். சம்பவங்கள் என்பது நிகழ்வது அல்லது நிகழ்த்தப்படுவது. சம்பவங்களின் தொகுப்பு ஒரு கதையாக உருவாகும். சுவாரஸ்யங்களின் அளவுக்கேற்ப கதைகளின், கதை மாந்தர்களின் தன்மையும் மாறுபடும். அந்தத் தன்மைக்கேற்ப அது கதையாகவோ குறுநாவலாகவோ நாவலாகவோ மாறக்கூடும். நாவல் போன்ற பெரிய சம்பவங்களைச் சுருக்கி சிறிய அளவில் கதையாகப் பின்னப்படுவதே குறுநாவல் . வாழ்வின் அனைத்து நிகழ்வுகளையும் சுருங்கச் சொல்வதில் எப்போதும் வாகை சூடி நிற்கும் இந்த குறுநாவல்கள் . இப்படிப்பட்ட சம்பவங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே 'நிலமடந்தை' நூல். இதில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் வாழ்வையும் வாழ்வியலையும் கிராமியச் சூழலில் நடக்கும் குடும்ப ரீதியான மனப்போராட்டங்களையும் நமக்குள் காட்சிப்படுத்திச் செல்லும் என்பதே இந்நூலின் பலம்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கலுங்குப்பட்டி என்ற ஊரை பிறப்பிடமாகவும், சென்னையை வாழ்விடமாகவும் கொண்ட படைப்பாளி சத்தியபானு அவர்களுக்கு இது முதல் நூல். இன்றைய இணைய ஊடகங்களில் தனது இலக்கியப் பங்களிப்பால் நன்கு அறியப்பட்டவர். மேலும் கவிதைகளிலும் சிறுகதைகளிலும் எண்ணற்ற பல பரிசுகளையும் அங்கீகாரத்தையும் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது