இயற்கையாகவே எல்லோரது வாழ்விலும் கதை என்பது ஓர் அங்கமாக
இருக்கும். நம்மைச்
சுற்றி இயங்கும் கிரியா ஊக்கியாக எப்போதும் இக்கதைகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் நாம் சந்திக்கும் எல்லாச் சூழல்களும் ஒரு கதையைச்
சுற்றியே நகரும் அல்லது அந்தச் சூழ்நிலையே ஒரு கதையாக மாறும். காணும் காட்சியின் வாயிலாக நாம் கற்றுக்கொள்ளும், கற்றுக்
கொடுக்கும் நகர்வு கதையாக உருமாறும். நம்மை நாமே தேடும் நேரம்
கதை சொல்லியின் வாயிலாகவே கண்டுபிடித்துக் கொள்வோம். இப்படிப்பட்ட
இயல்பான வாழ்வியலின் அடையாளமான உறவுகளை எல்லாம் வாழ்வின் கதை மாந்தர்களாக மாற்றி,
அதைச் சூழலின் தன்மைக்கேற்ப காட்சிப்படுத்திப் பார்க்கும் சிறுகதைகளாக
ஒன்றுதிரட்டி உருவாக்கப்பட்டிருப்பதே ‘மாயக்கா’ தொகுப்பு. இதில் உள்ள ஒவ்வொரு கதையும், வாசிப்பவரை தாமே கதாபாத்திரமாக இருப்பதுபோல உணர வைப்பதும், காட்சிக்கேற்றவாறு அந்தந்தச் சூழலை அசைபோட வைப்பதும் இத்தொகுப்பின் பலம்.
மதுரையைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட
படைப்பாளி அ.முத்துவிஜயன் அவர்களுக்கு இது, எட்டாவது தொகுப்பு. இவரின் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள்,
படைப்பு பதிப்பகம் மூலமே வெளிவந்து பலரது கவனம் பெற்றன. இணையத்தில் படைப்பு உட்பட பல தளங்களிலும் இவரின் கதைகள் தேர்வு செய்யப்பட்டு
பதிவாகிக் கொண்டிருக்கின்றன. படைப்புக் குழுமத்தில் இவர் பதிவிடும்
சிறுகதைகளைச் சுடச்சுட வாசிக்க ஒரு வாசகர் கூட்டமே காத்திருக்கும். மேலும், படைப்புக் குழுமத்தால் வழங்கப்படும் ’மாதாந்திர சிறந்த படைப்பாளி’ என்ற தனித்துவமான அங்கீகாரத்தைக்
கவிதைக்காகவும் சிறுகதைக்காகவும் இருமுறை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.