சுயம்பு
கவிச்சுடர் சுயம்பு ஒரு அறிமுகம்
*********************************
கவிதைகளின் வரிகளின் நீளம் அகலம் அவசியமில்லை. ஆழம் மிக முக்கியம். படைப்பாளி சுயம்புவின் கவிதைகளும் மிகுந்த பொருட்செறிவை கொண்டதுதான்.
நம் படைப்பு குழுமத்தின் ஆரம்பம் முதல் இயங்கிவரும் நமது கவிஞர் சுயம்பு அவர்கள்தான் இந்த மாதத்திற்கான கவிச்சுடர் விருதினை பெறுகிறார். அவருக்கு இந்த விருதினை அளிப்பதில் படைப்புக் குழுமம் பெருமை கொள்கிறது.
10ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் கவிஞர், திருநெல்வேலி லெப்பைகுடியிருப்பு எனும் கிராமத்தை சேர்ந்தவர். குடும்பச்சூழல் அவரை மேற்கல்விக்கு அனுமதிக்கவில்லை என்பது காலத்தின் கட்டாயம் என்றாலும், தமிழின் மீதும் கவிதையின் மீதும் உள்ள பற்றினால் சுயம்புவாகவே கவிதைகளை எழுதத் தொடங்கியவர். தற்போது சென்னையில் சொந்தமாக டிஜிட்டல் பிளக்ஸ் தொழில் செய்துவரும் கவிஞர், ஓவியம் வரையும் தனித்த ஆற்றலுமுள்ளவர்.
அவரது சில கவிதைகளை ஆய்வு செய்வோம்...
---------------------------------------------------------------------
புத்தன் என்று யாரை சொல்வது ? அரங்கம் ஒன்று, அந்தரங்கம் ஒன்று... எல்லோருக்குள்ளும் இருவேறு முகங்கள்! முகத்திரை கிழியும் வரைதான் ஒப்பனைக்கு மரியாதை இருக்கிறது... இந்தக்கவிதையும் அப்படியான தோலுரிப்புதான்.
நான்
நிறையக் காதலும்
கொஞ்சம் காமமும் கலந்தவன்...
சில நேரங்களில்
கடவுளை துரத்தும் மிருகமாகவும்
மிருகத்தைத் துரத்தும் கடவுளாகவும்
பரவி கிடக்கிறேன்....
சிலப்பதிகாரம்....சீவக சிந்தாமணியென்று
படித்த காப்பியங்களுக்குள்
மறைந்திருந்துதான்
கொளுத்த சிந்தாமணியின்
ராத்திாி ரகசியங்களையும் வாசிக்கிறேன்....
எனது மறைவு பிரதேசங்களில்
தேநீா் கோப்பைகளை மிஞ்சும்
மதுக் கோப்பைகளும் உண்டு.....
மதுக் கோப்பைகளை மிஞ்சும்
மயிலிறகுகளும் உண்டு......
எனது பருவ முகாம்களில்
பட்டாம் பூச்சிகளுக்கிணையா
பெண்களின் சில காந்த விழிகளும் உண்டு
சில கந்தக ஸ்பாிசங்களும் உண்டு
வீட்டின் முகப்பறையில் கூட
மல்லி வாசனையுடன் கலந்து
சில சிகரெட் வாசனைகளும்
புகைந்து கொண்டுதானிருக்கிறது.....
படுக்கையறைக்குள் பிரவேசிப்பீா்களானால்
சில பிரேத நாத்தங்களை மறைப்பதற்காய்
பல ரோஜா இதழ்களைப் பிய்த்தொிந்திருக்கிறேன்.....
தலையணைக்குள்
மறைத்து வைத்திருக்கிறேன்
அமிலத்தில் எாித்த
ஓராயிரம் ஒவியக் கூடுகளையும்
ஈராயிர ஒவியத் தூாிகைகளையும்.....
சிதைந்த ஒரு வீணையும்
சிதையாத ஒரு புல்லாங்குழலும்
என் இசையுணா்வின் அடையாளமாய்
இன்னமும் மிச்சமிருக்கின்றன.....
இன்னுமென் மெளனத்தைக் கொஞ்சம்
நெருக்கமாகக் கலைப்பீா்களானால்.....
உங்களுக்குப் புாிந்து விடும்....
உங்கள் முகத்திரை கிழிகிற வரையிலும்
உங்களில் நானும் ஒருவனென்று.....!
- சுயம்பு -
மகளின் உறக்கத்தைக் கடவுளின் மறு பிரசவமாகப் பார்க்கும் ஒரு எளிய தந்தையின் ஆதங்கம் என்னவெல்லாமிருக்கும்! தன் பிணத்தையே அவளிடமிருந்து மீட்டுவதாகச் சொல்கிறான். அவளின் அழகை எதுவும் மிஞ்சிவிடாது என்பது அவனது ஆழ்ந்த நம்பிக்கை... யாரும் சப்தமிடாதீர்கள் மகள் உறங்குகிறாள்...
என் மகள் தூங்குகிறாள்
யாரும் சத்தமிடாதீர்கள்,,,,
என் மனைவியோடு
பேச வந்த தோழிமார்களே,,,!
கதவடைத்துக் கொண்டு
வெளியில் சென்று பேசுங்கள்,,,,,
என் மகள் தூங்குகிறாள்,,,,
உங்கள் சீரியல் பற்றிய
சீரியஸ் பேச்சு
என் மகள் புரண்டு படுக்கையில்
இசைக்கும் கொலுசு ராகங்களை
வெறும் இரைச்சலாக்கி தருகிறது,,,,
வெளியில் சென்று பேசுங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,,
உன் வீட்டில் என்ன குழம்பு?
என் வீட்டில் இந்தக் குழம்பு?
பேசாதீர்கள்,,,
என் மகள்
தூக்கத்தின் இடையில் நெழியும் போது
ஒலிக்கும் புல்லாங்குழல் மெல்லிசையை
கேட்க விடாமல் துண்டிக்கிறது
உங்கள் சத்தங்கள்,,,,
ஆகையால், பேசாதீங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,,
என் புடவையின் நிறங்கள்
கொஞ்சம் தூக்கலாகவும்
உன் புடவையின் நிறங்கள்
கொஞ்சம் இறக்கலாகவும்
அய்யோ,,! பேசாதீர்கள்,,
என் மகள் தூங்குகிறாள்,,,,
தொட்டிலுக்குள் தூங்கும்
இந்தக் குட்டி வர்ணத்தை விடவா
வாங்கிவிடப் போகிறீங்கள்
உயர்ந்ததோர் வர்ண நிறங்களை,,,,,,?
ஆகையால் பேசாதீங்கள்
என் மகள் தூங்குகிறாள்,,,,
அவளுக்கு
அவனோடு ,,,,இவளுக்கு இவனோடு
சட்டம் அனுமதித்த பிறகு
உங்களுக்கென்ன ஊர் வம்பு,,,,,
உலக வம்பு,,,,,,
என் காது பட எதுவும் கனைக்காதீர்கள்,,,,
என் மகளின் தூக்கத்தை
நிலா பதிவிறக்கம்
செய்து கொண்டிருக்கிறது,,,,
ஆகையால்,,,,,
யாரும் சத்தமிடாதீர்கள்,,
என் மகள் தூங்குகிறாள்,,,,,
அவளுக்குள்ளிருந்துதான்
இறந்து போன
என் பிணத்தைத் தட்டி எழுப்புகிறேன்,,,,
கொஞ்சம் பொறுங்கள்,,!
எனக்கடுத்த பிணமாய்
கடவுள் காவலிருக்கிறான்,,,,
அவனும் கொஞ்சம்
உயிர்தெழட்டும்,,,,,
ஆகையால் சத்தமிடாதீர்கள்
அவளது தூக்கமென்பது,,,
கடவுளின் மறு பிரசவம்,,,,,,
- சுயம்பு -
படிப்பறிவை தவறவிட்ட தந்தைக்குத்தான் தெரியும் அதன் வாசனை. மகனைக் கடிந்துகொள்ளும் கை நாட்டு அப்பனை, அவரின் இறப்பிற்குப் பிறகு பாக்கெட்டில் வைத்திருந்த கடிதமொன்று நெகிழ்த்துகிறது... இதுதான் அந்தக்கடிதம்!
எப்போதும்
படி, படி என்று
நச்சரித்துக் கொண்டிருக்கும்
அப்பாவுக்கும் எனக்கும்
கீரி, பாம்பு உறவுதான்,,,,
அப்பா இறந்த போன ஒருநாளில்
இது அப்பா சட்டை பையில் இருந்ததாக
அந்தக் கடிதத்தை நீட்டினாள் அம்மா,,
வெற்றுக் காகிதத்தில்
எனது பெயர் எழுதி
அடியில் அப்பாவின்
கைநாட்டு மட்டுமே இருந்தது,,,,,
அவர் பெயரை மறந்து
என் பெயரை மட்டுமே
எழுதி பழகிய
அப்பாவின் கல்வியை,,,
அறிந்த பிறகுதான்,,,,
எனது கல்வியை
கற்க தொடங்கினேன்,,,,
என் நேசத்தின் ஆழ வெற்றிடத்தில்,,,,,
அப்பாவின் பெயரெழுதி,,,,
- சுயம்பு -
சுயம்புவின் கவிதைகளில் இஃதொரு சிறந்த கவிதையென்று அறுதியிட்டுச் சொல்லலாம். மகன் தந்தை பாசம் பற்றிய கவிதைதான் இஃதென்றாலும்... ஒரு தந்தையாக மகனுக்குச் சில விசயங்களையும் பொருள்களையும் தருவதாகச் சொல்லி விரியும் இந்தக்கவிதை, கடைசியில் தனக்கான வேண்டுகோள் ஒன்றையும் மகனிடம் வைக்கிறது...
கொஞ்சம் வேப்பஞ் சாறும்
கொஞ்சம் தேன் சாறும்
நானுனக்கு கலந்து தருவேன்
மகனே...நீ...!
அருந்த பழகிக்கொள்...!
கொஞ்சம் நட்சத்திரங்களும்
குட்டி நிலவும் , சூாியனும்
நானுனக்குச் சிருஷ்டித்துத் தருவேன்....
மகனே...நீ.....!
வானமாய் விாிய பழகிக்கொள்...!
கொஞ்சம் நீா்த் துளிகளும்
கொஞ்சம் தடங்களும்
நானுனக்கு உண்டு பண்ணித் தருவேன்
மகனே....நீ...!
பெரும் நதியாய் உருவாகக் கற்றுக்கொள்....!
கொஞ்சம் விதைகளும்
கொஞ்சம் நிலமும்
நானுனக்குச் சேகரித்துத் தருவேன்
மகனே....நீ...!
விருட்சமாய்க் கிளை பரப்பக் பழகிக்கொள்....!
கொஞ்சம் பனித்துளிகளும்
கொஞ்சம் வியா்வைத் துளிகளும்
நானுனக்குச் சேகாித்துத் தருவேன்
மகனே....நீ...!
பேரானந்தம் பழகிக்கொள்.....!
கொஞ்சம் தூக்கமும்
கொஞ்சம் இரவுகளும்
நானுனக்கு நிரப்பித் தருவேன்
மகனே....நீ..!
கனாக்களைப் பிரசவிக்கப் பழகிக்கொள்...!
ஒரு கையில் கேடயமும்
மறு கையில் வீரவாளும்
நானுனக்கு படைத்து தருவேன்
மகனே....நீ...!
போா்முறை பழகிக்கொள்..!
கொஞ்சம் அறிவும்
கொஞ்சம்அனுபவமும்
நானுனக்கு சோ்த்து தருவேன்
மகனே....நீ...!
வாழ்க்கையை வடிவமைக்கப் பழகிக்கொள்....!
கடைசியாய்..
என் மரணத்தையும்
கொஞ்சம் சொட்டு கண்ணீா்த்துளிகளையும்
நானுனக்குப் பாிசளிப்பேன்
மகனே....நீ....!
இந்தப் பிடிவாதக்கிறுக்கன்
எனையறியாமல் உனக்கேதும்
தீங்கிழைத்திருந்தால் மன்னித்து
ஒற்றை முத்தமிட்டு வழியனுப்பு....!
- சுயம்பு -
என்னதான் ஒப்பனையைப் பூசி வெளி உலகிற்குப் பிரமாதமாய்க் காட்டிக் கொண்டாலும் கிராமத்திற்குச் சென்றவுடன் அங்குக் காணும் நிதர்சனம் நம்மைக் கரைத்துவிடும்... ஒரு புழுக்கமான கவிதையை அழகாகச் செதுக்கியிருக்கிறார்....
செத்த பல் துலக்கி
செத்த குளியலிட்டு
செத்த மேக்கப்பிட்டு
அவசர அவசரமாக
பஸ் ஏறி
அம்மாவை பார்க்கச் சென்றால்.....
வழக்கம் போல்
வாய் திறந்த குடிசைக்கு
கொஞ்சம் ஒலை ......
சதை கரைந்த ஒல்லிகுச்சி சுவருக்கு
கொஞ்சம் மண் பூச்சி வேலை.....
ஆங்காங்கே கொஞ்சம்
தரையில் மழை பெய்த குழியடைத்தல்......
கரையானாித்த கதவுக்கு
கொஞ்சம் ஒட்டையடைத்தல்.......
பூட்டாத நாராங்கிக்குக் கொஞ்சம்
எண்ணெய் விட்டு தட்டி தட்டி
அதன் கீச்....கீச்.........குறைத்தல்
பண அனுப்பும் சுனக்கத்தில்
அக்கம் பக்கத்தில்
அம்மா வாங்கும் கடன்
கொஞ்சம் கொடுத்தல்.........
பாழடைந்த அரிசி பானையை
தூசிதட்டி கொஞ்சம் அரிசி நிரப்பி....
அதன்கூடக் கொஞ்சம்
மஞ்சா மசலான்னி
புளி உப்புன்னி வாங்கி அடைத்தல்........
இப்படிச் சொல்லிக்கொண்டே போகும்
நிலையிருக்கும் எனக்கெல்லாம்
ஒரு தடவையாவது
தீபாவளி கொண்டாடிடனுமென்பது
பேராசையெனினும்.............
என் சிறு ஆசை நிறைவேறுவது.....
இத் தீபாவளியில்தான்.......
இல்லையென்றால் ஏது
நயிந்த சேலைக்கு ஈடாய்
அம்மாவுக்கொரு புதுச் சேலை.........?
- சுயம்பு -
தாயிடம் மகளின் சேட்டைகள் அப்பாவைப்போல் இருக்கிறதாம்... ஆனால் ஒன்று மட்டும் அதில் இல்லை என்று சொல்லும் இந்தக் கவிதை அன்பின் ஆழம் நிறைந்தது....
அடுப்பாங்காி எடுத்து
அப்பாவை போல்
மிடுக்கு மீசையொன்றை
வரைந்து கொண்ட மகள்
திருட்டு பூனையாய்
அடுப்படி நுழைந்து பின்னாடியே சென்று
அப்பாவை போல்
அம்மாவை கட்டிபிடிக்கிறாள்.....
அப்பாவை போல்
அம்மாவை கொஞ்சுகிறாள்
அப்பாவை போல்
அம்மாவை முத்தமிடுகிறாள்...
சட்டெனக் கோபம் வந்து
அப்பாவை போல்
அம்மாவை அதட்டுகிறாள்....
சண்டையிடுகிறாள்....பாத்திரங்களை
அங்குமிங்குமாகத் தூக்கியடிக்கிறாள்....
அப்பாவை போல்
அம்மாவை கன்னத்தில் அறைகிறாள்...
எல்லாமே அப்பாவை போல்
நடித்துக் காட்டிய மகள்
அதுவரை அம்மாவிடம் அப்பா கேட்காத
ஒரு வாா்த்தையைக் கேட்டு விட்டு வந்தாள்.
அம்மா சாப்டியாம்மா
- சுயம்பு -
நாகரீகத்தை நோக்கி ஒரு சமூகம் நகர்ந்து கொண்டிருக்கிறது... அதன் ஒப்பனைகள் அடர்த்தியானது... அதன் கனவுகள் கவர்ச்சியானது... ஏன் கண்ணீரும் கூடப் போலியானது... சம்பந்தமில்லாமல் நகரும் இந்த அவலத்தை இந்தக் கவிதையால் இப்படித்தான் சொல்ல முடியும்.
கண்ணீருக்கு
தொடா்பில்லாமல்
என் விழிகள் அழுதுகொண்டிருக்கின்றன....
வார்த்தைகளுக்கு
தொடா்பில்லாமல்
என் உதடுகள் பேசிகொண்டிருக்கின்றன....
முகங்களுக்கு
ஒப்பில்லாத ஒப்பனைகளை
முகமெடுத்துப் பூசிக்கொள்கின்றன.......
பாதங்களுக்கு
தொடா்பில்லாத
பாதைகளைத் தேடி
என் கால்கள் போய்கொண்டிருக்கின்றன.......
தூரிகைகளுக்கு
ஒவ்வாத ஒவியங்களை
எனது விரல்கள்
வரைந்து கொண்டிருக்கின்றன..............
காயங்களுக்கு
தொடா்பில்லாமல்
என் இரத்தங்கள்
வழிந்து கொண்டிருக்கின்றன....
உணர்வுகளுக்கு
தொடா்பில்லாமல்
என் மனம் காதல்
செய்துகொண்டிருக்கின்றன.....
இப்படிதான்
நவீன காலத்தின் சூட்சமம்
புரியாத யாவருக்கும்
ஒன்றையொன்று தொடா்பற்றதாகவே
போய்விடுகிறது.................
ஆகையால்....!
நான்
நகர்ந்து கொண்டிருக்கிறேன்
என் பிணத்துக்குத் தொடா்பில்லாத
ஒரு சுடுகாட்டை நோக்கி......
- சுயம்பு -
இன்னமும் கவிஞரின் சில சிறப்பான கவிதைகள்:
நீண்ட நாட்களுக்குப் பிறகு
பள்ளி தோழியைச் சந்தித்த மகிழ்ச்சியில்
கடந்த காலங்களையும் ,
கடந்து வந்த பாதைகளையும்
சிறு தேநீா் கோப்பைகளுடன்
பகிர்ந்து கொண்டோம்......
படிக்கையில் கட்டிய நாடக வேசங்களில்
அதிகமாய்த் துாியோதனாகவும்,
இராவணனாகவும்,நம்பியாராகவும்
வில்லன் வேசம் கட்டிய ஜானகிராமன்
இன்று நிறைய
அநாதை ஆசிரமங்களை நடத்தி
சிறந்த சமூகச் சேவகருக்கான விருதுகளுடன்
மதிப்புற வாழ்ந்துகொண்டிருக்கிறான்.......
நடிக்கும் நாடகங்களிளெல்லாம்
விலைமாது கதாபாத்திரமாகவே
அமைந்து விடுகிற சீதாலட்சுமிக்கு
இன்று அரசாங்க உயர் பதவியிலுள்ள
கூடப் படிச்ச சுந்தரராமனுடன்
திருமணம் முடிந்து
மிகுந்த செல்வாக்குடன் பேரதிஷ்டகார
சீதாபிராட்டியாகவே வாழ்கிறாள்.......
அனைத்து நாடகங்களிலும்
பிச்சைகார வேசம் கட்டிய பிச்சைமுத்துதான்
இன்று சிட்டிக்குள்
நாலு நகைகடைகளுக்குச் சொந்தக்காரன்........
கூலிக்கு மாறடிக்கும் தொழிலாளியாய்
வேசம் கட்டிய மாறன்தான்
இன்று அரசாங்கமே சலியூட் அடித்து
வியக்கும்படியான தொழிலதிபர்...
எப்போதும் மக்கு வேசம் கட்டுவாளே
கடைசிப் பென்ஞ்ச் கார்த்திகா
இன்று நாம் படித்த பள்ளியிலே
பணி புாிகிறாள் ஆசிரியராக .......
நல்ல வாட்டசாட்டமாக இருந்ததாலே
எந்த நாடகமென்றாலும் கார்த்திகேயனுக்கு
காவல் அதிகாரி வேடம்தான்.....
இன்று பொறுக்கி, பிக்பாக்கெட்,
கஞ்சா வியாபாாின்னி அவன்
வாழ்க்கையே திசைமாறி போச்சி....
அப்போதே வரதட்சனையையும்,
மதுக்கடைகளையையும்
எதிர்த்து போராடும் சமூக ஆா்வலனாக
புரட்சி வேசம் கட்டிய கல்யாண சுந்தரம்
இன்னும் கல்யாணம் ஆகாத
முதிா் கண்ணன் கோலத்தில்
மதுக்கடையே மாா்க்கமென
மயங்கி கிடக்கிறான்.......
பாவம் கல்யாணி.....!
கல்யாண பொண்ணு வேசம்ன்னாலே
கணக் கச்சிதமாய்ப் பொருந்தி போன
அவள் இன்னமும் முதிா்கன்னிதான்...
கடைசியாய்
அடிக்கடி ராமன் வேசம் கட்டிய நானும்
சீதை வேசம் கட்டிய நீயும்
தேச தூா்நாற்றங்களாய்
காலச் சுழற்சியில்
சந்திக்கக் கூடாத இடத்தில்
சந்தித்துக் கொண்டோம்!......
விலைமாதா் கூட்டத்தில் உன்னையும்
வாடிக்கையாளன் கூட்டத்தில் என்னையும்......
எல்லாம் பகிர்ந்து முடித்த நேரத்தில்
காலியான தேநீர் கோப்பை
கண்ணீரால் நிரம்பியிருந்தது.........
- சுயம்பு -
உன் ஆடைகளில்
சிறப்பானதை ஒன்றை எடுத்து
உடுத்திக் கொள்....
இன்று
நம் திருமண நாள்.....
வா .....
கோயிலுக்குச் சென்று
இறைவனுக்கான அா்ச்சனையை
அங்குப் பசித்திருப்போாின்
தட்டிலிட்டு திரும்புவோம்......
பின்பு ....
சாலையோர நடைபாதைக்குச் செல்வோம்
பாதையிருந்தும்
நடையின்றித் தவிக்கும் சிலாின்
சிறிது நேரம்
நடை கோலாகி மகிழ்வோம்......
பின்பு .....
சாலையுள் சுரங்க பாதைக்குச் செல்வோம்
சுரக்காத கருணையோடு
கடந்து போகும் மக்களின்
அலட்சிய விழிகள் மறுதலித்த
மாசற்ற ஊனங்களின்
உயிர் புண்களின் சிலதை
புண்ணாற்றி வருவோம்......
பின்பு ....
சாலைகளில் திாிந்தலையும்
புத்தி சுவாதினமான
மங்கையரோ....மாா்க்கையனோ
அவர்களின் அழுக்காடை அகற்றி.....
புத்தாடை பாிசளிப்போம்......
பின்பு. .....
இரயில் நடைபாதைகளுக்குச் செல்வோம்.....
விழி தொலைந்தும்.....
மொழி தொலையாத பாடகா்களின்
ஸ்வரங்களின் கடைசித் தேய்மானத்தில்
உயிரெழும் பசி கோரத்தைக் கொஞ்சம்
அடக்கியாண்டு வருவோம்.....
ஒவ்வொரு வருட
திருமணநாளின் போதும்
கணவனின் உயாிய எண்ணம் குறித்து
கலங்கி போய் நின்ற மனைவி.....
சற்றும் சலிப்படையாமலே
தன் ஆடைகளில் சிறப்பானதை
ஒன்றை எடுத்து
கணவனிடம் நீட்டினாள்.....
போன வருடத்தை விட
இந்த வருடம் கிழிசலில் கூடரெண்டு
கூடி போச்சி.....
கொஞ்சம் தைத்து வாருங்களென்று......!
- சுயம்பு -
அழகான சவப்பெட்டியொன்று
செய்து வைத்திருக்கிறேன்
மரணத்தின் கண்களை
மயக்கும் வடிவிலான
அந்தச் சவப் பெட்டிக்குள்ளேதான்
எனக்கான உலகத்தை
புதைத்து வைத்திருக்கிறேன்......
தரையில் நின்று வானமளந்த
கனாக்களின் ருத்திரத்தையும்
வானத்தில் நின்று மண்ணை நுகரும்
பாிமாணத்தின் இயலாமையையும்
அந்தச் சவப்பெட்டிக்குள்தான் சருகுகளாய்
உதிா்த்து வைத்திருக்கிறேன்
சமூக ஒழுங்கினங்களைக் கண்டு
கொதிப்படைந்து கொந்தளிக்கும்
என் குருதியின் கோபங்களையெல்லாம்
குப்பையாய் அள்ளி
அந்தச் சவப்பெட்டி முழுவதும்
நிரப்பி வைத்திருக்கிறேன்.....
சிலா் அன்பினால் அடித்த ஆணிகளையும்
சிலா் புன்னகையில் கொடையளித்த
துரோகங்களையும் பெயா்த்தெடுத்து
சவப்பெட்டியில் திணிக்கிறேன்
அது கொள்ளவு தாண்டி வழிகிறது....
கழிவென்ற கலாச்சாரங்களில்
கழிசடைகளாய் ஊறிப்போன
நவீன குமாரா்களையும்
நவீன குமாரத்திகளையும்
ஆசீா்வதியும் கா்த்தாவே என்ற
பிராத்தனைகளும் அந்தச் சவப்பெட்டியின்
உள்ளாழங்களின் ஒரங்களில்
முனங்கி கொண்டுதான் இருக்கிறது....
அதிகார பிலாத்துகளின் வஞ்சகத்தினால்
கெளரவிக்கப்பட்ட
என் புறமுதுகில் சவுக்கடியையும்
அகமுகத்தில் எச்சிலையும்
சிறு ஈரம் குலையாமல்
காய்ந்து கொண்டுதானிருக்கிறது.....
அந்தச் சவப்பெட்டியின்
வயிற்றுக்குள் ஒாிடத்தில்.......
கருச்சாமம் தீண்டும் நள்ளிரவில்தான்
அந்தச் சவப்பெட்டிக்குள் சென்று
அனைத்தையும் கலைந்து பாா்த்து
ஜீவ முக்தி அடைந்து
வெளியில் திரும்புகிறேன்....
நியாயங்களைப் புறந்தள்ளிய
துன்மாா்க்கா்களை அடக்கம் செய்யும்
ஏற்பாட்டில் முன்னொருநாளில் வடிவமைத்த
இந்தச் சவப்பெட்டிதான் பின்னொருநாளில்
என் நீள அகலத்திற்கு
பொருத்தமானதாகி விட்டது.....
பாவங்களை இரட்சித்த இரட்சகருக்கே
சிலுவை கோர படிமங்கள்தான்
பாிசென்னும் போது
அந்தச் சவப்பெட்டி எனக்குப் பொருத்தமானதில்
வியப்பொன்றுமில்லை.....
- சுயம்பு -
அது
மனித கறிகளைப் புசிக்கும்
மறைவு பிரதேசம்
நான் எனக்குள்ளிருக்கும்
ஒர் முகமூடியினை
அணிந்து கொண்டு செல்கிறேன்.....
விரல் நகம் பாலிஷ் போடுற படியேதான்
விரல்கள் நறுக்கப்படுகின்றன.....
நெற்றி வியர்வை துடைத்த படியேதான்
முகத் தோல்கள் உாிக்கப்படுகின்றன....
தலை கோதி சீராக்கிய படியேதான்
மண்டையோடு கழற்றபடுகின்றன
நேசமுத்தம் பாிமாறியபடியேதான்
உதடுகள் கடித்துத் துப்பபடுகின்றன.....
வர்ணம் பூசிய படியேதான்
நிறங்கள் அழிக்கப்படுகின்றன.....
சதைகளைத் தழுவியபடியேதான்
இரத்தம் பிழியபடுகின்றன....
உடைகளைக் கழற்றுவது போல்
உடல் தோல்களை
எளிதாக உாித்துவிடுகின்றனா்....
அம்மணம் அவர்களின் தேசிய ஆடை
மெளனம் அவர்களின் தேசிய மொழி
புன்னகை மட்டும்
நிறங்களுக்கேற்ப மாறுபடுகிறது...
என்னால்
எளிதாகச் சொல்லிவிட முடியவில்லை
அந்த மாமிச மந்தையினை....
சிவப்பு விளக்கென்று....!
அவர்களின் இரத்தமாகவே
ஊறிப்போனது எனக்குள்.....
----------------
படைப்பாளி சுயம்பு அவர்களது எழுத்துப் பணி மென்மேலும் வளர கவிச்சுடர் என்னும் படைப்பின் உயரிய விருதினை அவருக்கு அளித்துப் பெருமைப் படுத்துவதில் படைப்பு குழுமமும் பெருமை கொள்கிறது.
வளர்வோம் வளர்ப்போம்,
படைப்பு குழுமம்.
#கவிச்சுடர்_விருது