"என் வீட்டில் ஜன்னல்களே இல்லை பாவமென உச் கொட்டுகிறீர்களா நல்லவேளை உங்களிடம் சொல்லவில்லை எனக்கு வீடேயில்லை பரிதாபத்துடன் கடந்துவிடுங்கள் எனக்கினி நாடே இருக்கப்போவதில்லை." இந்தச் சிறப்பான வரிகளுக்குச் சொந்தக்காரர், கவிதைகளில் நவீனம் செய்யும் 'வலங்கைமான் நூர்தீன்' அவர்கள்தான், இந்த மாதத்திற்கான 'கவிச்சுடர்' விருதினைப் பெறுகிறார். நமது படைப்புக்குழுமம் கவிஞரை மிகவும் பெருமையுடன் வாழ்த்தி வரவேற்கிறது! தஞ்சைத்தரணியின் வலங்கைமான் பகுதியை சேர்ந்தவர் நூர்தீன் அவர்கள். யாரைப்போலவும் இல்லாமல், தனக்கென வரிகளை அமைத்துப் பேசுவதில் தனிச் சிறந்தவர். ஏற்கனவே , 'ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது தளம்' மற்றும் 'பாகன் திரும்பும்வரை' என்ற இரண்டு கவிதைத்தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். வளைகுடா நாடான ஷார்ஜா வில் மருந்தாளுநராக வேலை செய்துவரும் கவிஞர், பள்ளிப்பருவம் முதல் தொடர்ந்து பத்திரிக்கைகளில் கவிதைகளை எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது சினிமாவில் பாடலாசிரியராகவும் விளங்கும் கவிஞர்; திரைத்துறையில் கதை விவாதம் மற்றும் வசனங்களிலும் பங்காற்றி வருகிறார்.. இது மட்டுமில்லாமல், யூடிப் சானல்களில் பாடல்கள், வெப் சீரியல்களில் பாடல்கள் எனவும் எழுதிக் கொண்டிருக்கிறார். கவிஞர் அவர்கள், முகப்பு பாடல் எழுதி, சுதிப் மற்றும் அமலா பால் நடித்த பொய்யாட்டம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றியும் பெற்றது.. இவரது கவிதைகளைப் பாலஸ்தீனக் கவிஞர் தர்வீஷூடன் ஒப்பிட்டு சிறப்பிக்கிறார், கவிஞர் பழனி பாரதி அவர்கள்.. இனி அவரது கவிதைகளின் மேய்ச்சல் நிலத்திற்குள் செல்வோம் : தினமும் தன் இல்லம் தேடி வரும் , காகத்தின் வருகையில் சிலாகித்துப் போகும் கவிஞன் , அதன் அடையாளங்களில் புதையாமல் தவித்தாலும், அதனழைப்பு அவனுக்கு நெருக்கத்தில் வந்து மகிழ்ச்சியைத் தந்துவிட்டுப் போகிறது... அதன் வருகை திடிரென்று நின்றவுடன் கவிஞன் காகமாகக் கரைவது இந்தக் கவிதையின் அழகு... தினமும் மதியம் ஒரு மணிக்கு என் பால்கனியில் வந்தமர்கிறது அந்தக் காகம் துணிகள் காயும் நைலான் கயிற்றிலிருந்தவாறே மேலும் கீழும் இடமும் வலமும் தலையை உருட்டியவாறே நான் இருப்பதை உறுதிச்செய்துகொள்கிறது. என்னிடம் என்ன எதிர்பார்த்துவருகிறது இக்காகம் ஒரு சிறு கவளம் சோற்றுருண்டையைத்தவிர. ஜோடியாகவோ கூட்டத்துடனோ வருவதில்லை சில நாட்களில் உணவருந்தாமலே கூடப் பறந்துவிடும். தினந்தோறும் வருவது ஒரே காகம்தானா...? ஐயம் எனக்கும் எழாமலில்லை நான் அதற்கு எந்த அடையாளத்தையும் வைக்கவில்லை நிறத்தைத்தவிர ஆனாலும் அஃது என்னைக் கண்டடைகிறது. ‘கா...கா...’வென அலகால் கரைவது என் செவிகளில் ‘வா...வா...’ அறைகிறது என்னை எங்கேயோ அழைக்கிறது காகம் அது கரைந்ததில் ஒரு கரிசணமிருந்தது ஓர் ஏக்கமிருந்தது. கடந்த சில நாட்களாகக் காகம் வருவதில்லை அதற்கு என்மீது என்ன கோபமோ இல்லை வேறெதும் சம்பவித்துவிட்டதா தெரியவில்லை நான் வீட்டில்தான் இருக்கிறேன் மனசு அங்கலாயித்துப் பறக்கிறது ஒவ்வொரு மரமாக காகக்கூட்டங்களில் தேடித்தேடி விரிகிறது இதயச்சிறகுகள். மதியம் மணி ஒன்று. இன்றும் வரவில்லை காகம் ‘க்கா...க்கா...’ அறையிலிருந்து துயரத்தில் கரைகிறேன் சத்தம் மட்டும் ஏனோ பால்கனியிலிருந்து வருகிறது. @@@ இராத்திரியை கவிதையில் கடத்த நினைக்கிறான் கவிஞன். மழையென்ற இனப நுகர்விற்குள் நுழைந்தாலும்... இரவுக்கே உரித்தான அசட்டு அச்சங்களைப் படிமங்களாக்கி நகர்த்தும் வரிகளில் நுழைந்து பகல் விடிகிறது! இதோ அதற்கான கவிதை... 'இந்த ராத்திரி அத்தனை கருப்பாயிருக்கிறது நட்சத்திரங்களையும் நிலாவையும் காணவில்லை கருமேகங்கள் சூழ்ந்திருக்கலாம் ஒரு சின்ன மின்னல் ஒளிக்கீற்று பளீரிட்டு மறைந்ததில் மழை வருவதற்கான அறிகுறியை செவிகளில் நுழைத்து உறுதிப்படுத்தியது சில்காற்று. தவளைகளின் பாடல்களைக் கேட்பதற்கு ஆளில்லாத இந்தச் சாலையில் உறங்கும் அந்தத் தூங்குமூஞ்சி மரத்தில் யாருக்காக விழித்திருக்கிறது ஒற்றை ஆந்தை தூரத்தில் கேட்கும் இடிக்கு வலதும் இடதும் தலையை அசைக்கையில் இருளையும் அசைத்துப்பார்க்கிறது. குளிர் இரவைத்தின்கிறதா குளிரை இரவு தின்கிறதா எதன் பசியைப் போக்க சடசடத்து கொட்டும் தூறல்கள் தேரைகளின் வாய்களை அடைக்கையில், சினம் கொண்டு சாலையின் மறுபுறத்திற்கு நெளியும் பெரும் அரவம் இரவையும் குளிரையும் விழுங்கிக்கொண்டே நகர்கிறது மேக நுரைத்தள்ளி வானம் நீலம்பாரிக்கும்போது உயிர்பெற்று அசையும் வரிகளில் கண் விழிக்கிறது பகல்.' @@@ ஒரு நிரபராதியின், தண்டனை மரணத்தை விவரிக்கும் கவிதையில் , நீதிதேவதையின் துக்கத்தையும் , தொப்புள் கொடி அறுபட்ட அதே நாளில் தூக்குக் கொடியில் தொங்குவதாக நம்மை நெகிழ்த்துகிறது.. இப்போது அவனுக்கான வாழ்த்துகள் ... பிறந்த நாளுக்கா? அல்லது இறக்கும் நாளுக்கா ? கவிதையிடம் கேட்கலாம்... நீதித் தேவதையின் கண்களிலிருந்து அவிழ்ந்து விழும் துணியையும் அதன் கண்களில் இரத்தமாகப் பூக்கும் கண்ணீர்த்துளிகளையும் யாரும் கவனிக்கவில்லை. இன்னும் சில மணித்துளிகளே உள்ளன. கடைசி ஆசையைக் கேட்கும்போது முதல் ஆசையைச் சொல்கிறான். உதடுகள் பிதுக்கி கண்களால் பேசிக்கொண்டார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில் கைகளைப் பின்னால் இறுக்கி வெளுத்த முகத்தை கருப்பு துணியால் மூடியிருந்தார்கள். தைரியமாகத் தூக்குமேடை ஏறுகிறான். சுருக்கு அவன் கழுத்தில் விழுகிறது நொடிகளில் பலகை கீழிழுக்கப்பட்டு ஊடகங்களுக்கு முன்னால் தொங்கவிடப்போகிறார்கள் அவன் ஜனித்த நாளும் மரித்த நாளும் இன்றாகப்போகிறது. சட்டத்தில் ஓட்டைகள் இருந்தென்ன பயன் தப்பிக்க வேண்டுமெனில் குற்றவாளியாகயிருக்கணும். தொப்புள் கொடி அறுபட்டநாளிது கழுத்தில் சுருக்குக் கொடி இறுக்கும் நாளுமிது. அவன் சாவதற்கு முன் நீங்கள் சொல்லிவிடுங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை... அப்படியே சொல்லிவிடுங்கள் இறந்த நாள் வாழ்த்துகளையும் அது மட்டுமே முடியும் உங்களால். @@@ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மக்களுக்காக வாழ்கிறார்களா? - உலக நாடுகளே ஒருவித அச்சத்துடன் வாழும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொண்டே , அடிதட்டு மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப் படுகின்றன... உரிமைகள் பறிக்கப் படுகின்றன.. இன்னமும் சொல்லப்போனால், நீ இந்த நாட்டின் குடியே இல்லை என்று வெளியேற்றும் சூழல் அபயாம் சூழ்ந்து நிற்கிறது... பாதிக்கப்பட்ட ஒருவனின் குரலாக இந்தக் கவிதை, கவிஞனின் வழியே வழிகிறது... (1) என் வீட்டில் ஜன்னல்களே இல்லை பாவமென உச் கொட்டுகிறீர்களா நல்லவேளை உங்களிடம் சொல்லவில்லை எனக்கு வீடேயில்லை பரிதாபத்துடன் கடந்துவிடுங்கள் எனக்கினி நாடே இருக்கப்போவதில்லை. (2) எனக்கு வாக்கில்லை எனக்கு ரேசனில்லை எனக்கு இடமில்லை எனக்கு ஆதார் இல்லை எனக்கு அடையாளமும் இல்லை ஆனால் உயிர் இருக்கிறது அதில் திமிர் இருக்கிறது. (3) எங்கே போகச்சொல்கிறீர்கள் எங்கேயும் செல்லப்போவதில்லை என்ன செய்துவிடுவீர்கள்...? வனமிழந்த விலங்குகள் மதம் பிடித்தலையும் நாடிழந்தாலும் மனிதம் பிடித்தலைவோம். (4) நீர் அழியப்போகும் நாட்டில் மாடுகள் வளருங்கள் தாகமெடுத்தால் குடிப்பதற்கு மாட்டு மூத்திரம் நாற்றமெடுத்தால் குளிப்பதற்கு மனித ரத்தம். (5) இனம் அழி மொழி ஒழி மாணவர்களை நோக்கி துப்பாக்கியை நீட்டு வெடித்துச் சிதறும் குரல்களில் அடங்கட்டும் தோட்டாக்களின் சப்தம். @@@ காமத்தியின் தேகம் காமாந்தகர்களின் தீனியாகிறது... போதைகளின் வரிசையில் அவள் ஆலாபனை! மீட்டும் போது இசைக்குறிப்புகள் உணர்ந்து இசைக்கிறாள்... பியானோ என்ற கருவியாக... நள்ளிரவு மதுபான அரங்க மேடையில் பழைய பியானோவிற்கு முன் அமர்ந்திருப்பவளுக்கு சரீரம் முழுவதும் இசைக்குறிப்புகள். வாசித்துக்கொண்டிருக்கும் விழிகளிலிருந்தெல்லாம் கசிந்துக்கொண்டிருக்கும் காமத்தின் இசை. செவிகளுக்குப் புலப்படாத அத்தனை அர்த்தஜாம முனகல்களையும் பதிவுசெய்கிறாள் நடனமாடும் தன் கை விரல்களில். துடித்துக்கொண்டிருக்கும் இதயங்களின் இரத்த அழுத்தம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கும் இரவு பகலாகக் கருப்பு வெள்ளை பித்தான்கள். @@@ பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்கள் ஒருவித மயக்க ஒப்பனைக்குள் நுழைந்துக் கொள்கிறார்கள்... கலாச்சாரம் அவர்களின் வீட்டிற்குள்ளிருந்து வெளிவர வெட்கப்படுகிறது. நாகரீகம் என்ற போர்வையில் டேட்டிங், பப் என்று மோகிக்கிறவர்களை நையாண்டி செய்யும் கவிதை... அவர்கள் திருமணம் ஒரு சடங்க்கு மட்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிறது... கழுதைத்தோலில் செய்யப்பட்ட அந்த ஹேண்ட்பேக்கை அமேஷானில் ஆறாயிரம் ரூபாய்க்கு ஆசை பேராசையாக வாங்கியவள் ஒரு புறம் புடைத்த புட்டங்களைப் போலவும் மறுபுறம் தின்று கொழுத்த தொப்பையைப்போலவும் பிதுங்கி வழியுமதை பொதியாய் சுமந்தலைகிறாள் உள்ளே திணிக்கப்பட்ட அத்தனையும் ஆன்லைனில் வாங்கிய அழகுசாதனப் பொருட்களும் ஏமாற்றிக்கொண்டிருக்கும் மல்டி லெவல் மார்க்கெட்டின் உடல் எடை குறைப்பதாய் நம்பும் 840 மருந்துகளும். ஐ.டி. நிறுவனமொன்றில் இரவு வேலை முடித்து பகற் பொழுதுகளில் தூங்கிய நேரம்போக கார்ப்பரேட் மால்களில் கெ.எஃப்.சி களிலும் டோமினோ பிட்ஸாக்களிலும் வங்கி அட்டை தேய்த்து பருக்கிறாள் வார விடுமுறை நாட்களில் பப் களில் தள்ளாடி மாதமிருமுறை மிருகத்தனமான பன் புணர்தலுக்கும் தயாராகிவிடுகிறாள் மாதந்தோறும் தவறாமல் நாப்கின்கள் வாங்குவதற்காகவே தினமும் மறக்காமல் ஹார்மோன் மாத்திரையும் விழுங்குகிறாள் போதை தெளியாத ஒரு ஞாயிறில் எல்லாப் பொருத்தமும் பொருந்தியதாக மின்னஞ்சலில் வந்து விழுகிறது அமெரிக்க ஜாதகம் ஸ்கைப்பில் அலசி ஆராய்ந்து ஆரத்தழுவிக்கொண்டார்கள் ஜீன்ஸ் டி-ஷர்ட் களைந்து காஞ்சிப்பட்டில் கலாச்சாரத்தைத் தூக்கிக்கொண்டு இவள் விமானமேறிய அன்றுதான் ஸ்டிராய்டு ஊசிகளைச் சதைகளில் ஏற்றிக்கொண்டு நான்கு பெண்களுடன் உல்லாசிக்கிறானவன் டேட்டிங்கில். @@@ கவிஞரின் மற்றும் சில கவிதைகள் : பழுதடையப் போகும் புராதான பியானோவை வாசித்தவன் அரித்த சதுர மரச்சட்டகத்திற்குள் சிலந்தி வலையாய் தெறிப்பிட்ட கண்ணாடிக்குள் இசைக்குறிப்புகளைப் பழுப்பேறிய புன்னகையில் மறைத்திருந்தான் விழிகள் ஒளிர்த்து வால்கள் விறைத்துத் திரியும் பூச்சைகளும் சடசடத்து இறகுகள் உதிர்த்து குறுக்கும் நெடுக்குமாய் முனகொலியில் புக்கும் கலப்பின புறாக்களும் செம்மர உத்திரங்களைத் தாங்கிப்பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் வௌவால்களும் இருட்டை இன்னமும் தின்று தீர்த்தப்பாடில்லை பூட்டுடைத்து உள்பிரேவிசிக்கப் பேடிக்கும் பாசிப் பச்சையம் பூசிய நிசப்த மாளிகைக்குள் நடுங்கவைக்கும் குளிரும் நடுங்கும் இரவும் தாழ் திறவாமல் அமானுஷ்யத்தின் இசையைத் தேடி நுழைகின்றன இருள் வெண்மையாகவும் வெளிச்சம் கருமையாகவும் விம்மப்போகும் விசைகளாக வீரியம் சற்றும் குறையாமல் நிழற்படத்தில் புன்னகைத்தவன் முகம் இறுகும் இவ்விரவு இன்னும் இன்னும் நீளப்போகிறது @@@ எனது கங்கை ~~~~~~~~~~ அத்தனை தூரம் பயணம் செய்து அங்குப் போய் விழுந்துதான் பாவங்களைக் கழுவ வேண்டுமோ...? காசி வரை போகக் காசிருப்பின் நான் ஏன் சாக வேண்டும்? கஞ்சிக்கும் வழியில்லாமல் காணி நிலத்தையும் கந்துவட்டிக்காரனிடம் ஏமாந்த விவசாயி நான். அணை திறக்கப்பட்டதற்கும் கன மழைக்கும் அதிசயமாய் ஆற்றிலோடும் வெள்ளம். சுழிகள் நிறைந்த அப்பகுதியில்தான் குதிக்கப்போகிறேன். சிறிது நேரத்தில் என் சடலம் மிதக்கப்போகும் இதுதான் எனக்குப் புண்ணிய நதி. @@@ ஏதேன் தோட்டத்தில் பாப்பிச்செடிகள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு குறுமிளகு அளவுள்ள ஓப்பியத்தில் என்ன இருந்துவிடப்போகிறது. பாப்பிச்செடிகளின் தோட்டத்திலிருந்து முதிர்ந்த காய்களில் மேலிருந்து கீழாகக் கிழிக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட இருண்ட திட திரவம் தோலாக்களாக உருண்டைகளாகச் சுற்றுகிறது குறுமிளகு அளவிவில்தான் உருட்டி விழுங்குகிறான் அதற்குள் அப்படி என்ன இருந்துவிடப்போகிறது நீங்கள் இருக்கிறீர்கள் நாங்கள் இருக்கிறோம் பெருங்கடல் ஒன்று சீறுகிறது தீப்பிழம்புகளைக் கக்கும் எரிமலைகள் வெடிக்கிறது அளக்கதிகமான ரிக்டேரில் உலுக்கும் பூகம்பம் சமுத்திரம் பிளந்து வானுக்கு எம்பிக்குதிக்கும் பேரலைகள் வேகமாகச் சுழலும் அவன் சிரசு பூமி உருண்டையாகிறது அவன் சூரியனில் புகை பிடிக்கிறான் நிலாவில் ஆசுவாசமாகச் சுவாசிக்கிறான் செவ்வாயில் நீர் அள்ளி பருகுகிறான் ஏராளமான நட்சத்திரங்களுக்கு மத்தியில் நின்று சிரிக்கிறான் ரேஷன் கடையில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கிறார் கடவுள் ஆதாரை அடகு வைத்து முண்டியடிக்கும் கூட்டம் கைகளை நீட்டிக்கொண்டே அவசரப்படுகிறது நகைப்புடன் சாத்தானின் கடைக்குள் நுழைபவனிடம் சொர்க்கத்தின் திறவுக்கோல் நீட்டப்படுகிறது கசகசா செடிகளின் காய்களிலிருந்து வடியும் திரவங்களைச் சேமித்துக்கொண்டிருக்கிறார்கள் ஆதாமும் ஏவாளும் யார் தீண்டியிருக்கக்கூடும்...? நீலம் பாரித்துக்கிடக்கிறதே ஆதி சர்ப்பம் அதோ மூலையில் பட்டுப்போன ஆப்பிள் மரத்தினடியில் அபின் மயக்கத்தில் கிறங்கிக்கிடக்கும் கடவுளுக்கு சாட்சாத் சாவி வைத்திருப்பவனின் சாயல். @@@ மண்வாசணை வீசும் மஞ்சணத்தி பூக்கள் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஆவாரம்பூ மணக்கும் இரவொன்றில் மழை விடாமல் அடித்துப் பெய்கிறது. மண்வாசனையைத் தாண்டிய மலரின் வாசம் எதைச் சொல்லிவிடப்போகிறது அவனுக்கு. மின்சாரம் தடைபட்டு காரிருள் போர்த்திய அவ்விரவில் தொடையிடுக்கில் இரு கைகளையும் திணித்து போர்வைக்குள் உறங்குபவனின் சொப்பனத்தில் நித்திரையில் துர்கனவுகளைச் சுமந்து செல்லும் யுவதிகள் பிரபஞ்சத்தின் பேரழகிகளாக இருக்கிறார்கள். சுந்தர ஸ்திரிகளின் கூந்தல் முடிச்சுகளிலிருந்து உதிர்ந்து விழும் பல்வேறு மலர்களனைத்தும் கோர மரணத்தின் சவங்களிலிருந்து பிடுங்கி பிடுங்கி தொடுக்கப்பட்டவைகள். பிரேதங்களிடம் நறுமணங்களைத் தொலைத்திருந்த அந்த மயான பூக்களைத்தான் தன் முகத்தில் நாசித்துவாரங்களற்றவன் ஒன்று விடாமல் பொறுக்கி சேகரித்துப் பின்தொடர்கிறான். நித்திரைகளில் நடந்து கொண்டிருந்த யுவதிகளில் இறுதியில் சென்றவளின் கபாலத்திருந்த கடைசி மலரும் உதிர்ந்து விழ சடுதியில் மறைகிறார்கள் பேரிருளில். உதிரிப் பூக்களைப் பொறுக்கியவன் பட்டுப்போன நுனா மரத்தின் அருகிலிருந்த சவக்குழியில் இறங்கி படுத்துக்கொள்ளவும் கிளைகளிலிருந்த வௌவாள்கள் நிசியில் பிரிகின்றன. மழை இன்னும் விட்டப்பாடில்லை தலைக்கனக்க வியர்வையில் நனைந்தவன் பதறி எழுகிறான் மரங்கள் வரையப்பட்ட போர்வையிலிருந்து சிதறும் சில மஞ்சணத்தி பூக்களிடமிருந்து இப்போது மண்வாசனை வீசுகிறது. @@@ ரயில் கச்சேரி ~~~~~~~~~~~ ரயில் வேகமெடுக்கவும் பார்வையிழந்த தம்பதியர் பாடத்தொடங்கியிருந்தனர். அவர்களின் குரல்கள் நினைவூட்டிக்கொண்டிருந்ததன திரைப்படங்களையும், நாயகன், நாயகியரையும், இசையமைப்பாளர்களையும் மற்றும் பாடகர்களையும். ராகங்கள் செவிகளறைய ஜிகினா கனவுகளுக்குள் மூழ்கினர் பயணிகள். கனவுகள் காணவும் கண்கள் வேண்டுமோ...? வாழ விழியற்றவர்களின் கச்சேரியில் ஒலித்துக்கொண்டிருக்கும் அனைத்துமே அவர்களின் பஞ்சப் பாடல்கள். @@@ கிழிசல் துணியில் படரும் ஈரம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ குருதி வடியும் நாட்களில் புணர்தலுக்கு அழைப்பவன் ரத்தக்கவுச்சியை நாசிகளில் சுவைக்கிறான் நாபியின் கீழ் உருளும் வாதைகள் கிழிபட்ட ரணங்களால் நனைகிறது விடாய் நாட்களிலும் விடாமல் முயங்குபவன் மனம்பிறழ்ந்த வகையைச் சேர்ந்தவனாகிறான் முடிந்ததும் அவசரமாக விலகுபவனின் தாகம் தீர்த்த நீரெல்லாம் உதிரமாகத் தொண்டைக்குழியில் இறங்குகிறது போகத்தின் எதிர்பார்ப்புகளின் பிரளயங்களில் சக்தி கூடி வலிமைக்கிட்டும் திவசமொன்றில் அவளுக்குச் சாத்தானின் கோரப்பற்கள் முளைத்தது. அலறி குறிபொத்தும் கிழிசல் துணியில் படரும் ஈரம் கருஞ்சிவப்பு நிறத்தில் அவனுக்கு விடாயாகிறது. வேறொருத்தி ~~~~~~~~~~ நெரிசல் மிகுந்த பேருந்தில் மார்புரசப்பட்டு பிருஷ்டத்தில் தேய்க்கப்பட்டு கூந்தலில் புதையும் சிகரெட் முகங்களைச் சகித்து அக்குள் வியர்வை நுகரும் நாசிகளுக்குள்ளும் நுழைந்து இருக்கைகளின் கண்களுக்குள் இடுப்பை பதியனிட்டு வழிந்து கசங்கி நசுங்கி நிறுத்தத்தில் பிதுக்கி தள்ளிவிடப்பட்டபின் அலங்காரத்துடன் வேறொருத்தி ஏறுகிறாள். அவளுக்காகவும் ஆரம்பித்து வைக்கிறார் நடத்துனர் வேகமாக விசில் ஊதி. கொஞ்சம் கதவை திறந்துவிடுங்கள் தோழர் ௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦ மழை அடித்துப் பெய்யும் நள்ளிரவில் அடர் கருப்பு பியானோவின் முன்னமர்ந்து பகல் இரவு பித்தான்களில் உங்கள் விரல்கள் முழுநேரக் குடிகாரனைப் போல் தள்ளாடிக்கொண்டிருக்கிறது. நிசப்த இருளைப்போல வழியும் சப்தம் அறையில் பரவி படர்ந்திருக்கிறது அச்சமேற்றும் அமானுஷ்ய இசையிலிருந்து இவ்விரவு தப்பிக்கவேண்டும் தோழர். சற்று இசைப்பதை நிறுத்தி அறைக்கதவை திறந்துவிடுங்கள் குடையோடு நிற்கும் நான் நனையாமல் அழைத்துச்செல்கிறேன். நான் போய் எழுப்பவேண்டும் எனதறையில் உறங்கிக்கொண்டிருக்கிறது பகல். @@@ போதிமரத்தின் இழுபலகைகள் ~*~*~*~*~*~*~~*~*~*~*~*~* கௌதமனை கொன்ற வழக்கில் மரணதண்டனை பெற்ற சித்தார்த்தனிடம் நீதிமன்றத்தில் கடைசி ஆசை கேட்கப்பட்டது தூக்குமேடையில் தன் கால்களுக்குக் கீழே போதிமரத்தில் இழுபலகைகள் அமைக்குமாறு வேண்டினான் முகத்தில் கறுப்புத்துணி அணிவித்து மேடை ஏற்றப்பட்டவுடன் உத்தரவுக்குப் பிறகு காலுக்கடியில் பலகைகள் நகர கழுத்தில் கயிறு இறுகி பிணமாகத் தொங்கிக்கொண்டிருந்தார் புத்தர். @@@ அது மட்டும் கொஞ்சம் தூரம் ~~~~~~~~~~~~~~~~~~~~ வனங்கள் தொட்டிகளுக்குள் செடிகளாக நதிகள் கண்ணாடி பெட்டிகளில் வண்ண வண்ண மீன்களோடு அலங்கார மலைகள் சிறிய மின் மோட்டாரால் இயங்கும் சலசலக்கும் அருவியோடு பொழியும் மழை குளியலறையில் பொருத்தப்பட்டுள்ளது ஷவராக சுவற்றில் பதிக்கப்பட்ட எல்.ஈ.டி. க்களில் தினமும் திரையிடப்படுகிறது வெளிவராத படங்கள் தானியங்கி ட்ரெட் மில்லும் நகராத சைக்கிளும் உபயோகிக்காத உடற்பயிற்சிகூடங்கள் கையடக்கத் தொடுதிரைகளில் அசையாமல் விளையாடலாம் அனைத்தையும் படுத்துக்கொண்டே மடிக்கணினி யில் இணைய வர்த்தகம் அலுவலகமாக அலைபேசியில் அழைத்தால் போதும் அவசரமாக வந்துவிடும் ரசாயன கலவை அவசர உணவுகளும், நோயுண்டாக்கும் மருந்துகளும், அழகழகாக அங்கங்கள் காட்டும் உடைகளும். பெட்டி வீட்டிற்குள் தான் அடங்கிவிடுகிறது மொத்த உலகமும். வாழ்ந்துவிடலாம் உள்ளேயே. ஆனால் நகரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தள்ளியேயிருக்கிறது மயானம். @@@ மழை நசநசக்கும் இரவு *~*~*~*~*~*~*~*~*~*~* எப்போது வேண்டுமானாலும் அணையலாம் நடுங்கும் குளிரில் எரியும் ஒற்றைத்தெருவிளக்கு யாரையும் தேடவில்லை ஆனால் எச்சரிக்கிறது தூரத்தில் கேட்கும் கூர்க்காவின் விசில் அமானுஷ்ய இருளில் ஒளிரும் பூனையின் கண்களுக்கு சினேகமாகும் வெட்டும் மின்னல்கள் குடைபிடிக்காமல் சைக்கிள் மிதிப்பவனின் கால்களில் சேற்றுப்புண் வராமலிருக்க சுற்றிய பச்சை பாலீத்தீன் பைகள் ஏ.டி.எம் வாயிலின் நாற்காலியில் கொட்டாவிகளுடன் காவலாளி அவனருகில் வாலாட்டும் தெரு நாய் ஃப்ளாட் ஃபாரத்தில் உறங்கப்போகும் பிச்சைக்காரன் பத்திரப்படுத்துகிறான் செங்கல்லின் அடியில் தன் ஆதாரை. @@@ பூனைகளின் சூரியன்கள் ~~~~~~~~~~~~~~~~~ அது பூனைகள் நிறைந்த வீடு ஆளுக்கொரு பூனையென வளர்க்கிறார்கள் எல்லாப் பூனைகளும் அடர் கருப்பில் அடையாளம் காண்பதில் குழப்பமில்லை அவரவர் பூனை அவரவர்களை அடையாளம் கண்டுகொள்கிறது வீடு முழுக்க இறைந்துகிடக்கும் மியாவ்’க்களைப் பொறுக்க இந்த யுகம் போதாது வெளியில் சென்று வீடு திரும்புபவர்களுக்கு சில மியாவ்களைப் பூனைகள் மிச்சம்வைத்திருக்கிறன பூனைகள் மனிதர்கள் போல எல்லாவற்றையும் தின்பதில்லை ஒரு பூனைக்கு மீனை பிடித்திருக்கிறது ஒரு பூனை பால் மட்டுமே குடிக்கிறது இரண்டு பூனைகள் பிஸ்கட் சாப்பிடுகின்றன மற்றொரு பூனையும், மூன்று குட்டிப்பூனைகளும் குழந்தை உணவான செரிலாக் மட்டுமே விரும்புகின்றன கறுப்பாய் இருப்பதில் அவைகளுக்குக் கவலையில்லை இந்தப் பூனைகள் பகல் நேரத்திலும் இரவைப் போலவே கும்மிருட்டாய் இருக்கின்றன ராத்திரி விளக்கணைத்து எஜமானர்கள் உறங்கியதும் ஒளிரும் பூனைகளின் மஞ்சள் கண்கள் இரவின் சூரியன்’களாய் வீடு முழுக்க மேய்கின்றன கறுத்த பூனைகள் ஒவ்வொன்றும் பூனைகளின் கண்களுக்கு மஞ்சள் வெய்யிலாய்ப் பிரகாசிக்கின்றன. அவைகளின் இருள் நிறமெல்லாம் இப்போது உறங்குபவர்களின் கண்களுக்குள் அடர் கருப்பாய். @@@ கொழுத்த ஜீரணத்தின் அஜீரணம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஒரு ஜோடி தங்க மீன்களுக்கு இரண்டு ஜோடி கண்கள் செவ்வக கண்ணாடி பெட்டிக்குள் கிணறு, குளம், வாய்க்கால், ஏரி, நதி, சமுத்திரம் என எதுவுமே அறியாத மீன்களுக்கு பரீட்சயமானது தொட்டிக்குள் அடைப்பட்ட நீர் மட்டும்தான் மாலை நேரங்களில் ஓய்வுக்காக உடல்களைக் கூழாங்கற்கறில் இருத்தி கண்களை மட்டுமே நீந்தவிடுகின்றன கண்ணாடி பெட்டிக்கு வெளியே செவ்வகப்பெட்டியை விட்டு சதுர அறையை மேயும் மீன்களின் கண்களில் குழந்தைகள் விளையாடுகிறார்கள் தொடுதிரை அலைபேசிகளில் பேசிக்கொண்டேயிருக்கிறார் அம்மா யாருடனோ வலது செவியைப் பொத்தியிருக்கிறது புத்தம் புது மொபைல் பார்க்கிறார், சிரிக்கிறார் அப்பா அடிக்கடி முகபாவனைகளை மாற்றுகிறார் லேப்டாப்பின் பதினாலு அளவு திரைக்கு ஏற்றவாறு சோடாப்புட்டி கண்ணாடி மூக்கின் மத்தியில் நடனமாடுகிறது மாலை இரவாகி இருட்டத்தொடங்குகிறது அறை வாழ்க்கை வால்களையும் தன் துடுப்புகளையும் அசைத்து நகரும் அவைகளுக்குச் சிறு மூளையும் இருக்கிறது தங்களைக் கண்ணாடிகளுக்குள் அடைத்தவர்கள் அவர்களை அவர்களே சுவர்களுக்குள் அடைத்துக் கொண்டதாக நினைக்கின்றன தொட்டி உயிர்களுக்கு அவ்வளவாகப் பசிப்பதில்லை இருந்தாலும் நேரம் தவறாமல் அவைகளுக்கு உணவை கொட்டுகிறார்கள் ஆனால் நேரம் தங்கள் எஜமானர்களை தின்று கொழுத்து ஜீரணிப்பதுதான் அஜீரணமாகிவிடுகிறது மீன்களுக்கு. @@@ வாய் பிளந்த சர்ப்பம் ~~~~~~~~~~~~~~~ யாமத்தில் கூடலுக்கு விளித்து குழாவி குழைந்த குறுஞ்செய்தியொன்று ப்ளிங்க் ப்ளிங் கென வந்து விழுந்நேரத்தில் ஆண்ட்ராய்டில் மற்றொருவளை தடவிக்கொண்டிருந்தான் நிசியில் விழித்த காமம் பசியைக் கிளற குளிர் விறைத்த இரவில் விரைந்து தாவிய ஈருளியின் ஃபோம் இருக்கை அலைபேசியில் அணைத்தவளின் ஸ்பரிசமாயிருந்தது கதவிடித்து உள்ளே நுழைந்தவனை ஆலிங்கனத்தில் கதவடைத்து இழுத்துச் செல்லுமவளுக்குப் பாம்பு புற்றின் நிறம் மோகத்தின் அடுப்பில் இரண்டு விறகுகளும் சிக்கிமுக்கி கற்களாகி பற்றிப் படர்ந்து தேகங்கள் எரித்து வியர்வை உருக்க அவள் சமுத்திரமாகிறாள் இருளின் மங்கிய விளக்கொளியில் வற்றிய நதியாக எழுமவனின் விழிகளில் உறைகிறது வாய்ப்பிளந்த சர்ப்பம் போல் யோனி வண்ண சொப்பனங்களில் நச்சுப் பாம்புகள் நெளிகின்றன நீலம் பாரித்துக் கிடக்கின்றன ஒப்பாரி கவிதைகள் @@@ பசி நிறைந்த இரவுகள் ~•~•~•~•~•~•~•~•~•~ காரிருள் அப்பிய இக்கரிய இரவில் மழைநீர் தேங்கிய வற்றிய குளத்தின் உடைந்து சிதிலமடைந்த படிகட்டுகளிலொன்றில் மனம் பிறழ்ந்து, நைந்த அழுக்காடை அணிந்தவளின் வாயில் பழைய பன்னை திணித்து வன்புணர்கிறானவன். அகோரப்பசியில் காமத்தின் ருசியறியாதவள் மறுத்து எதிர்க்க திராணியற்றவளாகிறாள் முயங்கியது முற்றுப்பெற முனகியெழுமவன் சிவப்பேறிய கண்களுடன் முழுபோதையிலிருக்கிறான். தாகம் தீர்ந்தவன் லுங்கியை சரிசெய்து சைக்கிளை மிதிக்க, அது தள்ளாடியபடியே ஓடுகிறது பரட்டை தலையைச் சொறிந்தவாறு குளத்திலிறங்கி அழுக்கு நீரை அள்ளி பருகுகிறாள். அடுத்தப் பசிக்கு இன்னொரு இரவு தேவையாயிருக்கிறது இன்று வந்தவனோ வேறொருவனோ வருவான் பழைய பன்னோ... நைட்கட பரோட்டாவோ... மனம் பிறழ்ந்தவள் ருசியும் இழந்தவளாகிறாள். குளத்தில் தேங்கிய நீர் ஓரிரு நாட்களில் வற்றிவிடும் வன்புணர்பவர்களின் வன்மம் வற்றப்போவதில்லை சில இரவுகளில் வெறுங்கை வீசியும் வருவார்கள். ***