வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்தைந்தாவது இதழ் உங்கள் கண்முன்
பரந்து விரிந்திருக்கிறது.
2023ஆம் ஆண்டில் வெளியான சிறந்த நூல்களுக்கான படைப்புக் குழும
விருதுகள் இவ்இதழில் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை, மொழிபெயர்ப்பு,
சிறார் இலக்கியம் என்ற வகைமைகளில் தகுதியான இலக்கியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.
படைப்புக் குழுமம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது, படைப்புச் சுடர் விருது, இலக்கியச்
சுடர் விருது பெறுவோர் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன. விருதாளர்கள் குறித்துப்
பிற படைப்பாளர்கள் மற்றும் வாசகர்களின் கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
இலக்கிய இசங்கள் குறித்த அமிர்தம் சூர்யாவின் கட்டுரைத் தொடரில்
மேஜிக்கல் ரியலிசம் பற்றிய அறிமுகம் இவ்இதழில் இடம்பெற்றுள்ளது. களச்செயற்பாட்டாளர்
பாலபாரதியின் சமூகம் சார்ந்ததான கவிமுகத்தைக் `கவிதைக்குள் கலந்திருக்கும் கதை` வழியாக
வெளிக்காட்டியுள்ளார் மு.முருகேஷ். சங்க இலக்கியங்களில் எல்லாமுமாக நின்று எதையும்
நிகழ்த்தும் தோழி கதாபாத்திரம் குறித்த தேடலின் விடையாக `நம் புலப் பெயல் நீர்` பகுதி
அமைந்துள்ளது. குலதெய்வங்கள் பற்றிய ஆராய்ச்சியை `வானவில் வண்ண மின்னல்` பகுதியில்
நிகழ்த்தத் தொடங்கியுள்ளார் ஆதிரன். வீரமங்கைகள் பகுதியில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையாரின்
பணிகள் விவரிக்கப்பட்டுள்ளன. தி பியூட்டிஃபுல் கண்ட்ரி என்ற திரைப்படத்தின் அலசல் இடம்பெற்றுள்ளது.
கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை என இம்மாதத் தகவு நிறைந்திருக்கிறது.