வணக்கம். படைப்பு ‘தகவு’ எழுபத்திமூன்றாவது இதழ் உங்கள் கண்முன் பரந்து விரிந்திருக்கிறது.
தமிழின் தகுதி மிக்க படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ள
மொழிபெயர்ப்பாளர் ஷைலஜா
ரவீந்திரனுடனான நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது. உலக சினிமா பகுதி, உலகத் தரத்தில்
அமைந்த தமிழ்த் திரைப்படம் ஒன்று குறித்து அலசியுள்ளது. கலகம், கட்டுடைத்தலால் எழும்
பின்நவீனத்துவம் குறித்த அமிர்தம் சூர்யாவின் கட்டுரை, யாமத்தில் தனித்திருக்கும் உள்ளத்தின்
இலக்கியச் சித்தரிப்பு குறித்த மானசீகனின் விவரிப்பு, உலகை விட்டு நீங்கினாலும் கவிதையுலகை
விட்டு என்றும் நீங்காத நா.முத்துக்குமாரின் கவிதைப்பணி குறித்த மு.முருகேஷின் கட்டுரை,
உலகத்தை இயக்கும் அதிகாரம் என்னும் வலுவம் பற்றிய ஆதிரனின் பார்வை, உப்புவேலி நூலின்
வாசிப்பனுபவம், தமிழறிஞர் க.ப.அறவாணன் கவிஞர்
விக்ரமாதித்யனுக்கு எழுதிய கடிதங்கள் ஆகியன இவ்இதழில் வெளியாகியுள்ளன. ஹைநூன்பீவி நினைவு
சிறுகதைப் பரிசுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெற்ற மூன்று சிறுகதைகள், கவிதைகள் என
இவ்இதழின் பகுதிகள் அமைந்துள்ளன.