வணக்கம்.
படைப்பு ‘தகவு’ முப்பத்துமூன்றாம் மின்னிதழ் உங்கள் கண்முன்
பரந்துவிரிந்திருக்கிறது.
மண்ணின் மணத்தோடு எழுகின்ற படைப்புகள்தான் ஒரு மொழிக்குரிய
நிஜமான படைப்புகளாய் நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்துநிற்கின்றன. தன்
மனிதர்களுக்காக எழுதும் மனிதன் எழுத்தாளன் என்ற நிலையைக் கடந்து
அச்சமூகத்திற்கான சேவகனாகிறான். எழுத்தாளர் சோ.தர்மனின் படைப்புகள்
அனைத்துமே அவர் நேசிக்கும் மனிதர்களுக்கானவை. சமூகம் சார்ந்து அவர் சொல்ல
விரும்பிய கருத்துக்களே படைப்புகளின் கருக்களாகியிருக்கின்றன. எழுத்தாளர்
சோ.தர்மனின் நேர்காணல் இவ்இதழில் வெளியாகியுள்ளது.
நல்ல எழுத்துக்களைத் தேடிப் பிடித்துத் தமக்குள் கரைத்துக்கொள்ளும்
வாசகர்களின் இயக்கம் இலக்கிய உலகம் பெற்ற வரம். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த
சில நூல்களுக்குள் தம்மை இழந்த நல்ல வாசகர்கள் நம்மையும் கைப்பிடித்து
வாசிப்பனுபவத்துள் இழுத்துச் செல்லும் ‘வாசிப்பு 2020’ என்ற பகுதி
இடம்பெற்றுள்ளது. கவிஞர் விக்ரமாதித்யனுக்குக் கவிஞர் கலாப்ரியா எழுதிய
கடிதங்கள், பிருந்தாசாரதியின் ஹைக்கூக்கள், திரைப்படப் பார்வைகள், குறத்தியம்மன்
நாவலுக்கான விமர்சனம் எனப் பல பகுதிகள் இவ்இதழில் உள்ளன.
இன்னும் சிறுகதைகள், கட்டுரைகள், தொடர்கள், அனுபவங்கள் என உள்ள
அனைத்துப் பகுதிகளையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்.