ஜவ்வாது முஸ்தபா
சிறுகதை வரிசை எண்
# 319
பித்அத்.(மூட நம்பிக்கை)
மகன்,மருமகள் வருகைக்காகக் காத்திருந்தாள் சுலைஹா.
2022 ஆங்கில மாதம் ஜீலை தேதி ஒண்ணு,இஸ்லாமியரின் வருடத்துவக்கம் முஹரம் மாதத்தின் தேதியும் ஒண்ணு அன்று. "இப்படி இரண்டு தேதியும் ஒன்றாக வருவது அரிது.இருந்தாலும்,நம் மக்களுக்கு சரியில்லாத காலம்.மொத்தத்திற்கு எல்லாப் பக்கமும் எல்லோருக்கும் இது சரியில்லாத காலம்.இயற்கை சீற்றம் பேரழிவு தரும் இன்னும் சொல்லப் போனால் பேரழிவு என்பது மனிதன் மடிவது மட்டுமல்ல மனசும் தான்.கையில் இருப்பு தங்காது,நாடோடியாய்... எண்ணங்கள் வந்து இருக்கிற இடத்தை விட்டு மறு இடத்திற்கு தாவும்,உடலும் சீராக இருக்காது பார்த்து கவனமா இருக்கனும்"என்று மூர்சித்(மந்திரம் படிப்பவர்) சொன்னதிலிருந்தே சுலைகாவுக்கு மனசு ஒரு நிலை இல்லை.ஏதோ இழந்தவைப் போலவே இருந்தாள்.மூர்சீத் சொன்னது போல சிரியா,துருக்கி நாடுகளின் பல்லாயிரக் கணக்கான மக்களை இயற்கை அழித்த விசியமும்,மீண்டும்...மீண்டும் அங்கு ஏற்பட்ட சிறு நில நடுக்கமும் அவளை மிக பாதித்திருந்தது.அந்த சம்பவத்தில் அங்குள்ளவர்களுக்கு ஏற்பட்ட உயிர்பயம்,உயிரை விட்டவர்கள் அந்த நேரத்தில் எப்படியாப்பட்ட மனநிலையில் இருந்து இருப்பார்கள் அத்தனை ஒரு காட்சியாக அவள் மனதில் நின்று வாட்டிக் கொண்டு இருந்தது.அவள் நிலை தெரியாமல் அவள் மகள் பர்ஹான வேறு,
ஆப்கானிஸ்தானில் உண்டான சிறு நில நடுக்கம் தஜ்கீஸ்தான்,பாகிஸ்தான் தொடர்ந்து அதே நேரத்தில் டெல்லியிலும் உணரப் பட்டதாகச் செய்தியைச் சொன்னாள்.இன்னும்,சுலைகாவுக்கு உள்ளுக்குள் பயம் அதிகமானது."காலம் ஏன் இப்படி பயமுறுத்துகிறது?மூர்சித் சொன்னதெல்லாம் நிஜம் தானா?நடந்தேத் தீருமா?"என்று முகத்தில் அந்த பயத்தை வைத்துக் கொண்டே திரிந்தாள்.அவள் வேலைச் செய்யும் வீட்டிலும் அது குறித்தே பேச்சும் இருந்தது.ஒரு காலத்தில் ஸ்க்கைலாப் ராக்கெட் கட்டுபாடு இழந்து எங்கு விழுமென்றத் தெரியாத ஊகத்தில் ஒரு பதட்டத்தோடு மக்கள் இருந்தார்களோ அது போலவே அவளுக்குள் குறையாதச் சிந்தனை இருந்தது.அவளே அவளை நிமிர்த்திக் கொள்ள முடியாமலும் இருந்தாள்.
சிந்தனையை ஒரு முகப் படுத்துவதில் அவளால் முடியவில்லை.கள்ளிச் செடிக்குள் தன் உடலைத் தூக்கிப் போட்ட மாதிரி தவித்துக் கொண்டு இருந்தாள்.நில நடுக்கமும், தேதிகளும் ஒன்றாக வந்தால் இப்படித் தான் இருக்குமா?தூங்கும் போது ௯ட கண் மூடி இருந்தாலும் சிந்தனை அவளை தூங்க விடாமல் செய்தது.எனக்கு மட்டும் தான் இப்படியா?இல்லை, எல்லோருக்கும் உள்ளுக்குள் என்னைப் போல் தானா ?நாம் பார்ப்பவர்கள் எல்லோரும் அழுத்தம் இல்லாமல் சிரித்துக் கொண்டு தானே இருக்கிறார்கள்?எனக்கு மட்டும் ஏன் இப்படி ஆகிறது?யாருக்கும் வரும் கஷ்டத்தை நினைத்தோ,இறப்பை நினைத்தோ பயமில்லையா? நடக்கும் சம்பவங்களும் அவர்களை உறுத்த வில்லையா? அவளுக்குள் பல கேள்விகள் அவளை அமைதியாக இருக்க விடாமல் துரத்திக் கொண்டே இருந்தது.
"ஏம்மா...நான் சொன்னதையே நெனைச்சுட்டு இருப்பியா? எது நடக்குமோ அது நடக்கும். நமக்கும் மட்டும் எதும் தனியாக வரப் போறது இல்லையே?எல்லார்த்துக்கும் உண்டானது தானே அது"
"இல்லடி...மூர்சீத் சொன்ன மாதிரியே எல்லாம் நடக்குது.எனக்கென்னமோ பயமா இருக்குது.வேலை செய்யற வீட்டல இது தான் பேசுனாங்க"
"அதொரு உறுத்தல்,அவுங்களும் உன்ன மாதிரி இருப்பாங்க போல.நீ நெனைக்க மாதிரி எதுவும் நடக்காதும்மா"
"அடிப்போடி,எப்பவும் ரம்ஜானுக்கு
சேலைத் துணியோட அரிசிப் பருப்பு ஆறு மாசத்துக்கு வர்ற மாதிரி தருவாங்க.இந்த வருசம் ஒரு பை அரிசி,ஒரு செட் துணி தான் கொடுத்து இருக்காங்கெ.இதை வெச்சு நா என்ன செய்ய?காலம் எப்படி மாறுதுனு உனக்குப் புரியலையா?"
அதுக்கு மேல் மகள் பர்ஹான அம்மாவிடம் பேசவில்லை.அம்மாக்கு எப்படிப் புரிய வைப்பதென அவளுக்கு குழப்பமாக இருந்தது.மழை,பனி,வெயில்,காற்று எல்லாம் முன் காலத்தில் நிர்ணயத்தபடி வருகிறது.இயற்கை நாசம் எதிர் பாராமல் நேர்வது,அதுவும்,ஏதோ நாட்டில் சொல்லப் பட்ட நாள்காட்டி வழியில்
நடப்பதாக எப்பையோ படித்த நினைவு அவள் நினைவுக்கு வந்தது.எதை நம்புவது,விடுவது புரியாமல் தவித்தாள்.இந்த இரண்டு நாளுக்கு முன்னும்,மனசு சரியில்லையென்று அதே மூர்சித்திடம் அம்மா போய் வந்து சொன்ன விசியம் அவளுக்குத் தலை சுற்றியது.
"உன் தலை மகனுக்கும்,நீ கட்டிக் கொண்டு வந்த மருமகளும் தலைப் புள்ளையாக இருப்பதால் இந்த வருசம் ரம்ஜான் மாசம் அஞ்சு வெள்ளி வருது, வீட்டுக்கு ஆகாது,கம்முனு ஆண்டவன் கிட்டத் துவாப் பண்ணி இந்த பிறையை அவுங்க கழுத்துலக் கட்டு"என்று சொல்லி அனுப்பிய அந்த மூர்சித் மேல் கோபம் அவளுக்கு கோபம் வந்தது.உள்ளுக்குள் ஆயிரம் கவலையுடன் வருபவர்களை மேலும் அச்சத்தை தருவது இந்த மட்டமான மூர்சித்களின் வேலை.அவர்களின் வயிற்றைக் கழுவ ஏதோவொன்று சொல்லி அப்பாவிகளை மேலும் குழப்பி விடுவது அவர்களின் தந்திரம்.
"நா விசாரித்த வரை,அப்படி எல்லாம் ஒண்ணும்மா.அஞ்சு வெள்ளி( ஜும்மா) நல்லது தானே"
என்று எடுத்துச் சொல்லிய மகளின் பேச்சை சுலைஹாக் கேட்கவில்லை.அப்பா காணமல் போய் ஒரு வருடத்திற்கு மேலாக ஆகி விட்டது.
"மனசு சரியில்ல,ராத்திரித் தூங்கும் போது கனவுல ஏதோ அவுளிமாரு வந்த மாதிரி இருக்கு.எதுக்கும் நான் கவ்க்௯ர் மஸ்தான் தர்ஹாவுக்கு போய் இரண்டு நாள் இருந்து விட்டு வருகிறேன் என்று போனவன் திரும்பவில்லை.எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.போலீஸ் ஸ்டேனில் தாக்கல் செய்தும்,சுற்றியுள்ள ஒவ்வொரு பள்ளி வாசலும்,தர்ஹாக்களிலும் தேடிப் பிரயோஜமில்லை.அப்போதிலிருந்தே அம்மா ஒரு மாதிரி ஆகி விட்டாள் என்றே நினைத்துக் கொண்டாள்.
குர்ஆனுக்கடியில் பிராத்தனை செய்து மூர்சித்திடம் வாங்கி வைத்த நிலாப் பிறைப் பதிந்த சின்ன வெள்ளித் தகட்டை வெளியே எடுத்தாள் சுலைஹா.அதைப் பார்க்கும் போது அவள் மனசு நிறைந்து போனது.வரச் சொல்லிய மகன்,மருமகள் இருவரையும் இன்னும் காணமென காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளை துன்புறுத்துவதாக உணர்ந்தாள்.இந்த வாய் நோன்பு அதுவும் வெள்ளிக்கிழமை. எப்பேர்ப்பட்ட பரக்கத்தான நாள்.இப்படியொரு நாள் கிடைக்க ஆயிசுபுரா காத்திருந்தாலும் கிடைக்காதே...நோன்பு திறக்கும் நேரமும் நெருங்கிக் கொண்டு இருக்கிறது.அவள் இருப்புக் கொள்ளாமல் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள்.
அம்மா பொறுமை இல்லாமல் அப்படி இப்படியுமாய் நடந்து கொண்டு இருப்பது பர்ஹானா அம்மாளை விந்தையாகப் பார்த்தாள்.அவளுக்கு வெளா காட்ட முடியாத எரிச்சலும் இருந்தது.
"அம்மா...இந்த பிறையை கழுத்தில் கட்டிக்கிட்ட எப்படி நல்லது நடக்கம்னு நீ நினைக்கற.இதெல்லாம் பொய்மா"
சற்று கோபத்ததோடு,சுலைஹாவின் போக்கு பிடிக்காமல் பர்ஹான சத்தம் போட்டாள்.
"ஏன்டி,கண்திஷ்டிப் படக்௯டாதுனு கால்ல கறுப்புக் கயிறு கட்றாங்க.கையில வேற கட்டிக்கறாங்க.தாவீஸ் வேறப் போட்டுக்கறாங்க.அதெல்லாம் சரியா"
"அம்மா அதெல்லாம் ஒரு மன ஆறுதலுக்கு தான்"
"அதே மாதிரி இதுவும் அப்படித் தாண்டி.கொஞ்சம் கம்முனு இரு.நல்ல நாள்ல கோபத்தெ கிளறாத"
"எத்தன பித்தொழிப்பு வந்தாலும் நீயெல்லாம் மாறமாட்டம்மா"
"ஆமாண்டி,பித்தொழிப்புனு எல்லாம் புது...புதுசா சொல்லிட்டு திரியறானுக.வீட்ல பாத்திஹா ஓதக் ௯டாது,நபிமார்கள் மேல ஷலாம் சொல்லக் ௯டாது,தர்ஹாவுக்கு போகக் ௯டாது சொல்றாங்கள்ள தொழும் போது சூரத்துல் பாத்திஹாங்கற ஒரு சுராவ ஓதாமத் தொழுகை நடத்த முடியுமா இல்ல அய்யுஹன் நபினு சொல்லாம தொழுகைய முடிக்க முடியமா.தொழுகையில நல்லவன் கெட்டவன்,போக்கிரிக எல்லாம் இருப்பானுக எல்லாத்துக்கு சலாம் சொல்லித் தொழுகைய முடிக்கும் போது நபிமார்கள் மேல சலாம் சொன்னா தப்பாடி.பித்தொழிப்பாம் பித்தொழிப்பு.அவுங்கள யாரையாவது எம் பக்கத்துல வரச் சொல்லு நா பேசறேன்"
அம்மா சுலைஹா ஆவேசமாய் பேசியதை பர்ஹானவால் நம்பவே முடியவில்லை.ஒண்ணும் தெரியாதவளாட்டம் இருந்தவள் இவ்வளவு பேசியது ஆச்சரியமாக இருந்தது. உண்மையில் தேதிகள் ஒன்றாக இணைந்து வந்ததும்,அதைத் தொடர்ந்து அங்கங்கே ஏற்பட்ட இயற்கை அழிவுகளுக்கும் சம்மந்தம் இருக்குமா?ஒரு ஆணுக்காக பத்து இருபது பெண்கள் போட்டிப் போடும் போது தான் உலகம் அழியும் அல்லது மொத்த கலாச்சாரமும் மாறி மக்களே அவருக்குள்ளே அடித்துக் கொண்டு மடிவார்கள் என்று கேட்ட விசியமெல்லாம் உண்மையாகுமா?என்று பர்ஹான யோசிக்க...யோசிக்க அவள் தலைக்குள் ஆயிரமாயிரம் பறவைகள் ஏதோ அசம்பாவிதம் நடக்கும் கத்துவது உணர்ந்தாள்.இனி அம்மாவிடம் விவாதம் பண்ணி ஒண்ணும் ஆகப் போவதில்லை.இந்த பித்தொழிப்புகள் மனிதம் உருவாகும் போதே தோன்றி விட்டதாக நினைத்துக் கொண்டாள்.ஒரு பக்கம் பாலும்,ஒரு பக்கம் விஷமும் இருக்கட்டும்.எது யாருக்குத் தேவையோ அதை அம்மா மாதிரி இல்லை என்னை மாதிரியும் எடுத்துக் கொள்ளட்டமென்று புலம்பும் மனதை சற்று அமைதிப் படுத்திக் கொண்டாள்.
வீட்டு முன், மகன் வண்டி சத்தம் கேட்டவுடன் சுலைஹா முகத்தில்
அவள் எண்ணம் நிறைவேறும் சந்தோசம் வெளிப் பட்டது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2023 - பட்டியல்