logo

படைப்பு 'விருது & அங்கீகாரம்'

Showing 181 - 200 of 454

Year
Award
   

மாதாந்திர பரிசு

 • நீ சு பெருமாள்

0   265   0  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • மு.ச. சதீஷ்குமார்

0   255   0  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • வே.மு. ஜெயந்தன்

0   271   0  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • கோ. சிவராஜன்

0   384   0  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • தக்ஷன்

0   376   1  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • வசந்தன்

0   330   0  
 • June 2020

மாதாந்திர பரிசு

 • விஜய் ஆனந்த்

0   272   0  
 • June 2020

கவிச்சுடர் விருது

 • கவிஞர் ஜே. பிரோஸ்கான்

0   894   1  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • பூங்கோதை கனகராஜ்

0   503   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • மின்மினி விமலா

0   360   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • ஜே.கே. பாலாஜி

0   320   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • ரவி குமாரசாமி

0   316   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • க. தங்கபாபு

1   292   2  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • பெ. அந்தோணிராஜ்

0   319   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

0   335   0  
 • May 2020

மாதாந்திர பரிசு

 • அ.முத்து விஜயன்

0   299   0  
 • May 2020

கவிச்சுடர் விருது

 • கவிஞர் தோழன் பிரபா

2   955   15  
 • April 2020

மாதாந்திர பரிசு

 • நிலா கிருஷ்ணமூர்த்தி

0   337   0  
 • April 2020

மாதாந்திர பரிசு

 • செந்தாரப்பட்டி இரா. செல்வகுமார்

0   325   0  
 • April 2020

மாதாந்திர பரிசு

 • குழலி குமரேசன்

0   337   0  
 • April 2020

மாதாந்திர பரிசு

நீ சு பெருமாள்

View

மாதாந்திர பரிசு

மு.ச. சதீஷ்குமார்

View

மாதாந்திர பரிசு

வே.மு. ஜெயந்தன்

View

மாதாந்திர பரிசு

கோ. சிவராஜன்

View

மாதாந்திர பரிசு

விஜய் ஆனந்த்

View

கவிச்சுடர் விருது

கவிஞர் ஜே. பிரோஸ்கான்

"வெயில் கவிதையொன்றை எழுதுவதற்கு முன்னர்
ஒரு ஐஸ் குச்சியை
ரசிக்கும் குழந்தையை
நான் அருந்தி முடிக்க வேண்டும்."

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருதினை பெருமையுடன் பெறும் கவிஞர் ஜே. பிரோஸ்கான் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள்!


படைப்பாளி ஜே.பிரோஸ்கான் இலங்கையில் கிழக்கு மாகாணம் .திருகோணமலை மாவட்டம் .கிண்ணியா பிரதேசத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ஒரு சாதாரண மீன் பிடியாளர். தமது வறுமை நிலையிலும் அவர் தனது பிள்ளையின் திறமைகளை தடுக்காமல் அவர்களது திறமையின் பாதையில் பயணிக்க கைகொடுத்தவர்.

எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் உயர் தரம் வரை கல்வி கற்றவர்.தற்போது கிண்ணியா பொதுநூலகத்தில்  பணியாற்றி வருகின்றார். தனது இலக்கிய பயணத்தை கடந்த 20 வருடங்களாக கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, குறுந் திரைப்படம், இலக்கிய அமைப்பு,செய்திப் பத்திரிகையென பயணித்துக் கொண்டிருக்கிறார்.
அத்துடன் "மரண நேரம்" என்ற குறுந் திரைப்படத்தை இந்த ஆண்டு வெளியிடுள்ளார்  குறிப்பிடத்தக்கது.

இதுவரை 10 நூல்களை வெளியீடு செய்துள்ளார்.பல சர்வதேச தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படைப்பாளி பரிசு (2018 ஆம் ஆண்டு), அனைத்துலக கவிதை தினப் போட்டியில் சிறப்பு விருது, கொடகே தேசிய சாகித்திய விருதும் மற்றும் சரத் ஜயக் கொடி தேசிய கவிதைக்கான இரண்டு விருதும் பெற்றுள்ளார்.

அவரது வெளி வந்த பத்து நூல்களும் வெளி வரக் காத்திருக்கின்ற நூல்களும்.

1 இதுவும் பிந்திய இரவின் கனவுதான்
2 தீ குளிக்கும் ஆண் மரம்
3 என் எல்லா நரம்புகளிலும்
4 ஒரு சென்ரீ மீட்டர் சிரிப்பு பத்து செகண்ட் கோபம்
5 காக்கைச் சிறகினிலே நந்தலாலா(சிறார் இலக்கியம்,தேசிய நூலாக்கல் திணைக்களத்தினால் பரிசு பெற்று பதிப்பு செய்யப்பட்டவை)
6 ஆண் வேசி
7 மீன்கள் செத்த நதி
8 என் முதுகுப் புறம் ஒரு மரங் கொத்தி
9 நாக்கு
10 ஜே.பிரோஸ்கான் கவிதைகள் ஆங்கில மொழி பெயர்ப்பு (வர இருப்பவை)
இது தவிர
11 மாய இரவும் மந்திரப் புன்னகையும்
12 உன் முத்தத்திற்குப் பட்டப் பெயர் கசையடி
13 மூன்றாம் பரம்பரையின் திமிரு
14 சுடுதல் தீர்ந்து போகாத நெருப்பு(குறுங் நாவல்) போன்றவை நூலாக வர இருக்கிறது குறிப்பிடத் தக்கது.

தனது பயணத்தில் இலக்கியம் மட்டுமின்றி தாய் அல்லது தந்தையை இழந்த பள்ளி குழந்தைகளையும் வறுமைக் கோட்டில் வாழும் குழந்தைகளையும் இனம் கண்டு இலவசக் கல்வி கொடுப்பது போன்ற சமூகப்பணியிலும் ஈடுபடுத்திக் கொண்டு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றவர். 

கவிஞரின் கவிதைகள் வாழ்வின் கணத்தோடு பயணிக்கக் கூடியவை. சொற்சிலம்பங்கள் காட்சிமைகளின் வடிவாகுவது அழகு! கவிஞரின் சில கவிதைகளை இங்கு கவனிப்போம் வாருங்கள்! 
.
வாழ்வின் படிநிலைகளின் ஓட்டத்தை இங்கு மலைப்பாம்பு ஒன்றும் ஆப்ரிக்க பட்டாம் பூச்சியொன்றும் தன் மீது படிமங்களாகச் சுமந்து கொண்டு இந்த கவிதை வனத்தில் சமரிடுகின்றன! பட்டாம் பூச்சி எழுதி வைத்த அந்தக் குறிப்பு ஒரு மரண வாக்கு மூலமாக இருக்க வாய்ப்பில்லாதற்கு கவிஞரின் மகள் ஓர் அழகிய பட்டாம் பூச்சியை வரைந்து வந்து நிற்கும் இந்தக் கவிதையும் அழகுதான்!


ஆப்ரி்க்க கதைகளில் வாழும் பட்டாம்பூச்சி

ஒரு மலைப் பாம்பின பசியொன்றை
ஒரு ஆப்ரிக்க பட்டாம்பூச்சி
எழுதிச் செல்கிறது.
பாம்பின் தீரா பசிக்கென என்னை
அது காடெங்கிலுமாக
துரத்திய அந்த சம்பவத்தை
எனது கடைசி நிமிடமென
பட்டாம்பூச்சி உயிரின் வலிமை பற்றி
தனது சக பட்டாம்பூச்சிகளுக்கு
எழுதி வைத்த மடலைத் தான்
இப்போது நான் படித்துக் கொண்டிருக்கிறேன்.
பட்டாம்பூச்சி இறந்ததாக அது எந்த
இடத்திலும் குறிப்பிடவில்லை
ஆனால் இது எனது இறுதி நிமிடமென
அது சொல்லியதில் இறந்ததாக
சேதி ஆப்ரிக காடுகளில் பரவியது
பட்டாம்பூச்சிகள் இப்போது
ஆப்ரிக காடுளில் வாழ்ந்துவிட
முடியாததை நினைத்து அங்கிருந்து
தமது பூர்வீகத்தை இழந்து
புறப்படுகின்றன
இச் சேதி ஆப்ரிக்க மலைப்புகளுக்கு
வருவதாக மடல்
குருதி படிந்த தொடர் புள்ளியில்
முடிந்திருந்ததை பார்த்த எனக்கு
இதன் முடிவு என்னாவாக இருக்குமென
யோசித்துக் கொண்டிருக்கிறேன்
மகள் தனது நோட்டுப் புத்தகத்தில்
சில பட்டம்பூச்சிகள் தேனருந்தி
மகிழ்வதாக ஒரு ஓவியத்தை
வரைந்து என் கைகளில் தந்து
சிரிக்கிறாள்.
அவள் சிரிப்பின்  சப்தத்தில்
ஆப்ரிக்க பாம்புகள்
செத்து இருக்குமென கவிதையை
முடித்து வைக்கிறேன்.
..

அங்கேயே இருக்கிறாய்
.....................................
தன்னம்பிக்கை கவிஞனின் மொழி! தடைகளை அவன், தன் எழுத்துகளுக்கு சிறகு கொடுத்து கடந்து விடுவான்! முட்டுக் கட்டை போடுகிறவன் முடங்கிக் கிடக்கும் வெற்ரு கட்டை என்று சொல்லும் இந்தக் கவிதைதான் எத்துணைச் சிறப்பு!

                   
நீ போடுகின்ற
முட்டுக் கட்டைகளையெல்லாம்
அவ்வப்போது
தாண்டி வருகின்ற வேளை
இன்பம் தவிர்த்து
அந்த எல்லையை
நோக்கியே நடக்கிறேன்.
உறுதிமிக்க அந்தப்பயணம்
தோற்பதில் உனக்குயிருக்கும் ஆர்வத்தை
என்னால் தகர்த்து விடுமளவுக்கு
நம்பிக்கை சிறகை விரித்து
நான் பறக்கிறேன்.
நீ
இருந்த இடத்திலேயே
தலை உயர்த்தி
வானைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
...........................

நிசி பிசாசுகளின் சந்தை தினம் ஒரு வித்தியாசமான பாடு பொருள்!
"இரவின் நடு நிசியென்றாலே / பிசாசுகளின் சந்தை தினமென / சின்ன வயசில் / உம்மாச்சியின் கதை சொல்லக் கேட்டிருக்கேன்" என்று சொல்லும் கவிஞர் இரவின் நிசிதான் தவறுகள் கூட்டமிடுமிடம் என்று சூசகமாக சொன்னாலும் அவரின் பொருளில், உம்மாச்சி சொன்ன பிசாசுகள் மனிதனிழைக்கும் தவறுகளாக இருக்கலாம்! 


நிசி பிசாசுகளின் சந்தை தினம்

முற்றிலும் மாறுபட்ட இரவது
சப்தம் அடங்கிய நிசியில்
நிசப்தம்
என் பாதத்தின் சப்தத்தை
அந்த நீீலக் கண்களுடைய நாய்க்கு
பரிசளிக்கிறது.
நேற்று செய்த தவறிலிருந்து
நான் விடுபடுகிறேன்.
இரவு தவறுக்கானது என்பதில்
உடன்பாடிருந்ததில்லை.
திருட்டித்தனமான பயணத்தின்
ஒரு ஆதிக் கதை ஞாபகிக்கிறது
மதிலை தாண்டும் கடுவன் பூனையின்
கத்தலில் மாட்டிக் கொள்கிறது
தவறு.
இரவின் நடு நிசியென்றாலே
பிசாசுகளின் சந்தை தினமென
சின்ன வயசில் உம்மாச்சியின்
கதை சொல்லக் கேட்டிருக்கேன்.
இப்போது தவறு எனது
மாறுபட்ட இரவில் நடந்தேறுவதில்
உங்களுக்கு உடன்பாடிருக்காது என்பதால்
நான் இதனை ஒரு சாத்தானிடம்
கொடுத்து விட்டு படுத்துறங்க போகிறேன்.
முடிந்தால் தவறு செய்வதிலிருந்து
விடுபடுங்கள் என்றுதான் இந்தக்
கவிதையை முடிக்க வேண்டுமென்றில்லை.
...

"நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில் /மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன. என்பதில்தான் ஆண் வர்க்கத்தின் ஒரு மேம்பட்டக் கோடு ஆதியில் துளிர்த்திருந்ததை பட்டவர்த்தனமாகச் சொல்லும் கவிதை... தீர்வுகளை நோக்கி நகர்வது அழகு! மூன்றாம் பரம்பரையின் திமிரு

பெரும் இடைவெளியை
நிரப்பிச் செல்கிறது
ஒரு ஆதிக்கால நிகழ்வு.
நிரப்பப்படாமலிருந்த இடைவெளியில்
மூன்றாம் பரம்பரையின் திமிரு
படர்ந்திருந்தன.
வாப்பாவின் உம்மாவுக்கு
அந்த நிகழ்வில் உடன்பாடிருந்ததில்லை.
தாத்தாவின் கோபம் பற்றித் தான்
வாப்பும்மா நிறைய பேசி இருக்கிறார்
என உம்மா நேற்று சொல்லும் போது
தாத்தாவின் பழைய டயரியை
எடுத்து தூசி தட்டிய போதுதான்
அந்த பரம்பரை இடைவெளியை
என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது.
தாத்தாவின் கோபத்தில் நியாயம்
மறைதலாகி நிற்கிறது.
வாப்பும்மாவை பேச வைக்க முயற்சித்த
போது தான்
நான் உற்பட வீட்டில்
எல்லோரும் ஆதிக் காலத்துக்குள்
வாழ தூண்டப்பட்டோம்.
பெரியப்பா விட்ட பெரும் மூச்சு
இப்போது தான் அந்த இடைவெளியை
நிரப்பியது சம்மதத்தால்.
இப்போது நாங்கள் தாத்தாவுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது
பின்னோக்கிய கதை.
................

மலரொன்றின் நிர்வாணமென / நீ பதியனிட்டிருக்கும் / வியர்வை உப்பின் ஊழி / வாசனை நிறைந்த  உடலை / அடித்துச் செல்கிறது. காதலின் மொழிதலை சிறு பறவையென சிலிர்க்கும் கவிதை!

ஒரு சிறு பறவையென

நன்பகலின் சிவந்த மெல்லிய
இருள் பரவிய அந்த இடத்தில்
உன் ஒற்றைத் தொடுதல்
பெரும் தீக்காடென அனல் சொரியும்
கண்மூடா இரவொன்றில்
இறுகிய உலோகம் போல
ஒற்றை நரம்பு முறுக்கேறி
பொருத்திராத தாபத்தின் உச்சியில்
நான்.
அன்பில்
விருப்பில்
நேசத்தில்
முகிழ்ந்திருக்கும் போது
நீ மலர்க்காடு.
வெப்பம் பூசி என் உடலை
விடுபடச் செய்கிறாய்.
நகம் கற்றாழை முட்களாய்க் கீற
ரத்தம் ருசிக்கிறாய்.
துருவேறிய ரணம் வலி தராமல்
தாபத்தின் வெப்பத் தகிப்பைமென்று
ஒரு வனத்தின் அடர் பச்சை நிறத்தை
பூசிக் கொள்கிறது.
மலரொன்றின் நிர்வாணமென
நீ பதியனிட்டிருக்கும்
வியர்வை உப்பின் ஊழி
வாசனை நிறைந்த  உடலை
அடித்துச் செல்கிறது.
இப்போது
ஆதித் துளி
பெரும் வனத்தீயின் அனலில்
வெளி வருகிறது
ஒரு சிறு பறவையென.
....................

ஆக மிகச் சிறந்த கவிதையென்று இதனைச் சொல்லலாம்! வெய்யிலின் தாக்கத்தை மரங்கள்தான் போக்க முடியும். இங்கு கவிஞன் மரங்களில்லாத உலகை வரைய முற்பட, மகன் தாகத்தில் தவிக்கக் கூடாதென்று இள நீரோடு வரும் அம்மா,"நீ வரையும் உலகத்தை எந்த வண்ணங்களால் நிறைப்பாய்?" என கேள்விகளை வைக்கிறாள்! மரங்களில்லாமல் வரைந்த மலைகள் இறகுகள் பிடுங்கிய கோழியைப் போல் இருக்கிறதாம்! வியர்க்கத் தொடங்க மரங்களை வரைந்து விட்டு நீரில்லாத உலகத்தை வரைவதாக நீள்கிறது இந்தக் கவிதை! அதிலும் உள்ள இடர்களை வெளிச்சமிடும் இந்தக் கவிதை படைத்தவனின் பெருமையை மறையுககமாக சொல்வதாக எடுத்துக் கொல்ளலாம்! இறைவனின் படைப்பில் குறைகள் கிடையாது... அதனை துண்டிப்பவன் இங்கு மனிதனாகிறான்!

நீரின்றி அமையாது உலகு
.

இந்த கோடை வெயில்
என்னை அதிகம் மரங்களை நேசிக்க
வைத்து விட்டது.
மரங்கள் இல்லாத உலகை
நான் வரைய முனைகிறேன்
தாகம் எடுக்கிறது.
பக்கத்தில் பச்சை இளநீரோடு உம்மா
எனக்கொரு சந்தேகம் என்றார்
ஆ..
இல்லை மரங்கள் இல்லாத உலகத்தை
நீ எந்த நிறம் கொண்டு வரைந்து முடிப்பாய் என்றாா்.
இப்போது வர்ணங்கள் பற்றி யோசிக்க வேண்டியதாயிற்று.
முதலில் மலைகளை வரைந்து விட்டேன்
அதுவும் மரங்கள் இல்லாமல் சிறகு நீக்கிய கோழியைப் போல
நிர்வானமாக இருந்தது.
அப்போ மரங்களற்ற உலகம் இருக்கவே முடியாது
என்பதை உம்மா சொல்லிய போது
வியர்க்க தொடங்கியது எனக்கு.
அதை கை விட்டு விட்டு
நீரில்லா உலகை வரைய முனைகிறேன்.
முதலில் நிலத்தை வரைகிறேன்
பின்னர் மனிதனையும் அவனுக்கென
மிருகத்தையும் பறவைகளையும்
வரைந்து முடிக்கிறேன்.
இப்போது உலகம்
திறந்த வெளியாய் நீண்டு கிடக்கிறது
நிறங்களற்று.
நான் மனிதனுக்கான நிறத்திலிருந்தும்
பறவை மிருகங்களின் நிறந்திலிருந்தும்
வர்ணங்களை பறித்து
பூமிக்கு நிறமிடுகிறேன்.
இப்போது தாகிக்கிறது எனக்கு.
நீர் பற்றி யோசிக்கிறேன்
தாகத்தோடு நில்லாது மரங்களை
வரைந்து விடுகிறேன்.
மீண்டும் எனக்கு அசூர தாகமெடுக்கிறது
மிருகங்களுக்கும் பறவைகளுக்குமென
வரைந்த உணவை சாப்பிட்டுத் திரும்புகிறேன்
வரைந்த மரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக
கருகிக் கொண்டிருந்தது.
என்னால் வெயிலை குடிக்க முடியாது
தாகத்தை அடக்கவும் தெரியவில்லை
மரங்களுக்கென வரைந்த கடலை
அருந்துகிறேன்.
உயிர் பறிபோவதிலிருந்து நான் மீளும் போது
உயிரினங்களுக்கென நதியை வரைய
வேண்டியதாய் இருந்தது.
இப்போது வரைந்த மரங்கள் வனமாய்
வளர்ந்து நிற்கிறது.
வானத்தை மழைக்கென வரைகின்


வானத்தை மழைக்கென வரைகிறேன்.
மனசு இப்போது விடுபடுகிறது.
நான்
நீரின்றி அமையாது உலகு என்பதை
கருவாய்க் கொண்டு என் ஓவியத்தை
நிறைவு செய்கிறேன்.

.........

கவிஞரின் மற்றும் சில கவிதைகள்:


ஆறாயிரம் தலைமுறை

மது சாரம் வழியும்
ஆதித் தெருவில்
சொற்கள் சில
நிர்வாணப்பட்டு கிடந்தது.
அது
போதையில் மிதந்தும்
இசையில் நனைந்தும்
முறித்துக் கொண்ட தொடர்பின்
எல்லை மிக தூரமாக இருந்தது.
ஒரு பாதுகாவலனின் சொல்
அங்குமிங்குமாக அடி பட்டும்
மிதி பட்டும் சிதறுகிறது.
இப்போது பூமிக்கு கீழுறங்கும்
ஒரு சேதி.
சுவாசத்தைப் போல
ஆதித் தெருவெங்கும் பரவி
கலைக்கப்படும் அந்நிகழ்வு
நதியைப் போல விரிகிறது.
பெரும் சக்தியாகிய சொல்
காப்பாலனிடமிருந்து வந்ததென்பது
பயத்தின் சம்மதமல்ல
நேசிப்பின் உச்சமென
அடையாளம் காண முடிந்த
ஆதிப் பரம்பரையின்
ஆறாயிரம் தலை முறை நான்.
.

ஏழு வானம் தாண்டி கடவுள் இருக்கிறான்

நாள் தோறும் நடமாடி வருகிறான்
மனோ இச்சையின் நீள் கோட்டில்.
எனவே அவனிடம்
மனசுனுள் மோகம் ஒரு மலையென
தகித்து விட்டது.
அமர்ந்த இடத்திலிருந்து தன்னை உயர்ந்தவனாய்
இனம் காட்டி மனோ இச்சையின் கடவுளாகி,
பூமியில் பெருமை கொள்கிறான்.
அதை வெட்டியெடுத்து வீசிட
சைத்தான் ஒரு போதும் அனுமதித்ததில்லை.
தீங்கு பாவ நதியென வடிவு கொண்டு
மனோ இச்சையை கடவுளாக்கி கூடவே,
பறவைகளின் அமானுஷியத்தை வகுத்துக் கொண்டு,
மண்மீதிலான அதிகார ஆசையை
ஒரு பறவையின் சிறகில் பொருத்தி
தயாராகுன்றவன்
ஆகாயத்தையும் வென்று விடலாமென நினைத்து,
மரணம் வேண்டுகிறான்.
ஏழு வானம் தாண்டி கடவுள் இருப்பதை மறந்து.
.


ஆட்டிடையானும் ஓ நாயும்
#

கரடு முரடான பாதை கடந்து
மேய்ச்சல் நிலம் அடைகிறான்
ஆட்டிடையான்.
அங்காங்கே சிறு பச்சைப் புற்கள்
காய்ந்து சருகான பற்றைகளுக்கு நடுவில்
மறைந்து கிடக்கும் புற்களை
ஆசை ஆசையாக மந்தைகள்
தின்று பசி தீர்க்கும்
காட்சிகளை ரசித்துக் கொண்டிருக்கிறான்
ஆட்டிடையான்.
காட்டாறு போல வந்த ஓ நாய்
மந்தைகளுக்கு முன் நின்றன
பதறிய ஆட்டிடையானிடம்
தாகமென தனது முகத்தை காட்டிய
ஓ நாய்க்கு
தனக்கென வைத்திருந்த நீரைக்
கொடுக்கிறான்.
தாகம் தீர்ந்ததும் அது
மேய்ச்சல் நிலத்தை விட்டு
சாதூரியமாக நகர்கிறது.
மந்தைகளை  இப்போது அவ்விடத்திலிருந்து
நகர்த்திச் செல்கின்ற ஆட்டிடையானை
வழி மறித்தது பல ஓ நாய்கள்
இப்போது ஆட்டிடையான்
தனது தண்ணீர் பையை
எடுத்து பார்க்கிறான்
தண்ணீர் இல்லை.
ஓ நாய்கள் பாயத்தொடங்கின
மந்தைகள் மீது.
அங்குமிங்கும் ஓடும் மந்தைகளைப்
பார்த்து அங்கேயே நகராது
நின்று கொண்டிருக்கிறான் ஆட்டிடையான்
மனசு மட்டும் மந்தைகளை
தூர கலைத்துக் கொண்டிருந்தது.
..
ஆட்டு மந்தைகள் செல்லாத ஊர்

பருகி முடித்த ஒரு குவளை
பழ ரசத்திலிருந்து
தனியாக பிரித்தறிந்த
புத்தி ததும்பலை
அந்த இரவு வாசித்துக்  கொண்டிருந்தது.
இசையால் நிறைந்த ஒவ்வொரு
ஆதி உம்மத்தும்
தத்தமது சந்தோசங்களை
பகிர்ந்தளித்துக் குதூகலித்து கொள்கிறது.
மது நிரம்பி வழியும்
ஆண் தேவதைகள்
ஆளுக்காள் நடன மாதுக்களை
ரப்பான் இசைப்பது போல்
மெல்லமாக வருடி ருசிக்கிறார்கள்.
ஆட்டமாவு பெரும் ரொட்டிகளும்
தடை செய்யப்பட்ட மிருக மச்சமுமென
விருந்தளிப்பு விழா நடந்தேறுகிறது.
அவ் ஊரின் எதிர் வாசிகள்
அவசர அவசரமாக
ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்
ஊர் எல்லையில் பதாதைகளை.
இங்கே மனிதர்கள் வாழுகிறார்கள் ஜாக்கிரதையென.
மேய்ச்சலுக்கேனும் ஆட்டு மந்தைகள்
அவ்வூரை நெருங்கியதில்லை.
கறி இறைச்சிகளாக
செல்வதை விடுத்துமென
ஆட்டிடையானொருவனின்
அரேபிய கதையொன்று முடிகிறது.
.
..மனித மரம்

அவன் வியர்வையால் நிறைந்து
அந்த தெருவோரத்தில் வளர்ந்து
விரிந்து நிற்கும் வாகை மரத்தடியில்
நிழலுக்கென ஒதுங்குகிறான்.
மெது மெதுவாக காற்றை
வீசத் தொடங்கியது மரம்.
உடல் வியர்வையை விட்டு விடுபடுகிறது
களைப்பும் நீங்குகிறது.
மரத்தை பார்த்து நீ எவ்வளவு பெரிய
தர்மத்தை இந்த பூமியிலே நிகழ்த்தி விடுகிறாய்.
மரமே நன்றியென்கிறான்.
மரம் இப்போது இவனைப் பார்த்து
ஒரு கேள்வி கேட்கிறது
மனிதா நீ என் காற்றைக் கொண்டு
திருப்தி பட்டு விட்டாய்
அதனை நான் உணர விரும்புகிறேன்
ஓ அப்படியா அதற்கு நான் என்ன செய்ய
ஒரு நாள் மட்டும் நான் மனிதனாக
வாழ்ந்து விடுகிறேன்
நீ மரமாய் நின்று எனக்கு அந்த காற்றை
தந்து விடு என்கிறது
இருவரும் மாறிக் கொள்கிறார்கள்
மரம் மனிதனாகி கடைத் தெருவுக்கு வருகிறது.
கட்டிடம் நிறைந்த தெரு
மரங்களற்று வெயிலால் வரண்டு கிடக்கிறது
தாகமெடுக்கிறது தண்ணீர் போத்தல் ஐம்பது ரூபா
பசியெடுக்கிறது மதிய உணவு நூறு ரூபா
இப்படியாய் அந்த நாளை கழித்து விட்டு
அந்த மரத்திற்குள் ஒதுங்குகிறது
இப்போது காற்று மெல்ல மெல்ல வீசி
வியர்வையை துடைக்கிறது.
மனசு மனிதனிலிருந்து விடுபட
மரத்திடம் பேசுகிறது.
மரம் என்னால் மீண்டும் மனிதனாக
வாழ்வதற்கு விருப்பமல்லை
என்னை மன்னித்து விடு என்கிறது
மனிதாகிய மரம் இது ஏமாற்று வேளை
இது மனித குணம்
இதனை என்னால் ஏற்க முடியாது என்கிறது
அழுது புலம்பி மரமான மனிதன்
கதறுகிறான்.
மனசு இலகி மனிதனான மரம்
அவனுக்கு சொல்கிறது ஒரு நாள் அல்ல
ஒரு மணி நேரம்கூட நான்
மனிதனாக வாழ முடியாது
மனிதனை இழுத்து பறித்து மீண்டும்
மரமாகிக் கொள்கிறது
மனிதனாய் தூக்கி வீசப்பட்டவன்
ஒரு வனத்தை தேடிப் போகிறான்.
..
..
மழைத் தேநீர்  

இந்த மழையின் குளிரில்
உறையும் உடல்.
ஒரு டன் வெயிலை கேட்கிறது.

பிசிறி பாயும் கூதலை விரட்ட
நீ தேநீரோடு வருகிறாய்.
நான் அருந்துவதற்கு
தயாரில்லையென்ற போது
தனியாக சூட்டை பிரித்து தருகிறாய்
நான் பூசிக் கொள்கிறேன் உடல் முழுதும்.

கூல்  தேநீர் அருந்துவது
உனக்கான விருப்பம் என்கிறேன்
முணு முணுக்கிறாய்
நெருங்குகிறேன் சமிக்ஞையறிந்து.

மழை இப்படியே பெய்யட்டும்
திறந்து விடு ஜன்னலையென்கிறேன்.
சிரிக்கிறாய்
மின்னல் வெட்டி மறைகிறது.

இப்போது காற்று ஜன்னலை அசைக்கிறது
நீ மூடி விட்டு நகர்கிறாய்
இன்னொரு தேநீர் வேண்டுமென்கிறேன்.
..
என்னிலிருந்து நான்

ஒரு காத்திருப்பை
அந்த தனிமை ஏற்க மறுக்கிறது.

ஒரு தவிப்பை
காலம் தின்று நகர்கிறது.

ஒரு கோபம்
ஆதி உறவை துண்டிக்க வைக்கிறது.

இப்போது அந்த காத்திருப்பை
நான் தொடர்வதாய் எண்ணமில்லை.

மனசு தனிமையை ஆராதிக்க
காலத்தை நோக்கி நகர்கிறது.

அந்த இரவின் அமைதி
கோபத்தை விடுவிக்கிறது.

பின்னர்
விடுபட்ட காத்திருப்பை
நான் மீளவென
தனிமை என்னை
பிரதி செய்து விடுகிறது.

நான் காத்திருப்பை தொடர்கிறேன்
என்னிலிருந்து தனிமை
நீங்கி நகர்கிறது.


.. நீ கடந்த இரவு

நீ கடந்த அந்த இரவை தான்
நானும் கடக்க முயற்சிக்கிறேன்
அவ்வளவு சுலோபமாக அதனை
என்னால் செய்திட முடியவில்லை.
அந்த நிலா இரவு
தன்னை ரசிப்பதற்கென ஒரு பகுதியை
எடுத்துக் கொண்டது.
நிசியில் விழித்திருப்பதென்பதும் ஒரு கலைதான்.
தூக்கமே வராத கண்களை
திட்டுவதற்கில்லை.
நீ எப்படி கடந்து போயிருப்பாய்
பலவாறு யோசித்து இரவின்
இன்னொரு பகுதியை கழித்து விட்டேன்.
சோர்ந்து போன உடல் அப்போதும்
உறங்க தயாரில்லை.
இப்போது நட்சத்திரங்களுடன்
உரையாடலை தொடங்குகிறேன்.
மிகவும் சுவாரசியமாக எங்களது
உரையாடல் அமைந்திருந்தது.
மற்றொரு பகுதி நட்சத்திரத்தின் காமெடி
நக்கல் பேச்சோடு கழிந்தது.
இதுவே முதல் தடவையென்பதால்
நட்சத்திரத்தை ரசிக்க தவரவில்லை நான்.
இப்போது இரவிடம் பகல் வருவது பற்றி
கேட்கிறேன்
சேவலின் குரல்
சப்தமாக எனை வந்து சேர்கிறது.
இப்போது தெரிந்து கொண்டேன்
நீ எப்படி அந்த இரவை
கடந்து வந்தாய் என்பதை

View

மாதாந்திர பரிசு

பூங்கோதை கனகராஜ்

View

மாதாந்திர பரிசு

மின்மினி விமலா

View

மாதாந்திர பரிசு

ஜே.கே. பாலாஜி

View

மாதாந்திர பரிசு

ரவி குமாரசாமி

View

மாதாந்திர பரிசு

க. தங்கபாபு

View

மாதாந்திர பரிசு

பெ. அந்தோணிராஜ்

View

மாதாந்திர பரிசு

வீரசோழன்.க.சோ. திருமாவளவன்

View

மாதாந்திர பரிசு

அ.முத்து விஜயன்

View

கவிச்சுடர் விருது

கவிஞர் தோழன் பிரபா

'காற்றிற்கு
வியர்க்கும்போதெல்லாம்
பறவை
தன் சிறகால்
விசிறி விட்டுச்
செல்கிறது....'

- கவிஞர் தோழன் பிரபா

இந்த மாதத்திற்கான நமது படைப்பு குழுமத்தின் கவிச்சுடர் விருது பெறும் கவிஞர் தோழன் பிரபா அவர்களை வாழ்த்தி மகிழ்கிறோம்!

தாராபுரம் அருகிலுள்ள கள்ளிவலசுவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞரின் இயற்பெயர் ம.ஜெகதீஸ்பிரபு என்பதாகும். பிபிஏ படித்துள்ள கவிஞர் கூடுதல் தகுதியாக எம்.ஏ.ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேசன் படித்திருக்கிறார். அரசு ஊழியராக பணிபுரியும் கவிஞர் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவக்குமார் அவர்களின் நட்பின் ஊக்கத்தால் கவிதைகளை எழுதத் தொடங்கியுள்ளார்.

விகடன்,குங்குமம் இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. இது மட்டுமில்லாமல் படைப்பு குழுமத்தின் மாதாந்திர சிறந்த படப்பாளி விருதையும், 2018ல் அம்மையார் ஹைனூன் பீவி நினைவு கவிதைப் போட்டி, 2017ல் கவிக்கோ பிறந்த நாள் பரிசுப்போட்டி, 2018 கவிக்கோ பிறந்த நாள் பரிசுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி கவிஞரின் சில கவிதைகளையும் காண்போம்:

வாழ்க்கையே பலவித குறியீடுகளால் நிரம்பியதுதான்! அதனளவை, 'தன் உயரத்தை நூறால் பெருகி எழுப்பப்பட்ட சுவர்' என்பது உச்சம்! சிலந்தி வலையில் சிக்கியும் சிலந்தி விட்டு வைத்திருப்பதாக கவலையை அல்லது குடும்பத்தை சொல்வதிலும், பாசிகளின் உள் பக்க குளிர்ச்சியை வார்த்தைப்படுத்துவதிலும் கவிதை மேன்மை அடைந்துவிடுகிறது!

கவிதை:

என் உயரத்தை நூறால்
பெருக்கி எழப்பப்பட்ட சுவர் 
அந்த சுவற்றின் வெடிப்புகளின் வழியே
என் வாழ்க்கை வழிந்து கொண்டிருந்தது......

சிலந்தி வலையில் வலிந்து சிக்கிய
என்னை சிலந்தி இந்த நிமிடம் வரை விட்டு வைத்திருக்கிறது.......

சுவற்றின்துளையில் தழைத்த 
பெயரறியா செடியின் 
வேர்கள் நாளைக்குள் என் 
தொப்புளுக்குள் நீளலாம்.......

எண்ணி முடித்த மண் துகள்கள்
என் பாத ஸ்பரிசத்தால் கலவி
கண்டு பெருகின.. 
அவற்றுக்கு
பெயரிட்டுக்கொண்டிருக்கிறேன்......

 படிந்திருக்கும் பாசிகளின் உள் பக்க
உலர்ந்த பகுதிகள் 
என் மூச்சுக்காற்றால்
குளிர்கின்றன.....

பூமியின் அடி ஆழத்திலிருக்கும் தூய்மையான நீரில் பிரதிபலிக்கும் 
என் அகம் மகிழ்கிறது

இதற்காகத்தான்
ஒரு முறையாவதுதப்பிக்க வேண்டும்....
என்னை தினம் பல முகமூடி
பொருத்தி வேட்டையாடும்
இந்த பூமியிலிருந்து
ஒருமுறையாவது
தப்பிக்க வேண்டும்...

+++

தொலைந்த பணம் உருமாறும் வரலாறும் கவிதையாகும் அதிசயம்!

கவிதை:

யாரோ ஒருவர்
தவற விட்ட
பத்து ரூபாய்
பசித்திருப்பவனின்
கையில்
தேநீரும் வடையுமாக
மாறுகிறது....
குடிப்பவனுக்கு
ஊறுகாயாகிறது....
மீனவனுக்கு
ரெண்டு கொக்கிகள்
கிடைக்கிறது....
பேருந்து நடத்துனரிடம்
பயணச்சீட்டாக
மாறுகிறது...
ஆனால்
தொலைத்தவனுக்கு
பத்து ரூபாயாகவே
இருக்கிறது.

+++

பேருந்து காட்சிகள் கவிதையாவது சுவாரசியம்! பயணிகளே படிமங்களாவது அதைவிட சுவாரசியம்! இங்கும் இந்தக் கவிதை அப்படித்தான் மேலோங்குகிறது...

கவிதை:

பேருந்தின் 
சன்னலில்
வழியும் மழை நீர்
தெளித்து விளையாடுகிறாள்
பார்வையற்ற 
யுவதி....
நிறுத்தமில்லா
இடத்தில் 
வயோதிகனுக்காக
திட்டியபடியே
நிற்கிறது பேருந்து
உடனே ஒரு புகைப்பானை
பற்ற வைத்துக்கொள்கிறார்
ஓட்டுநர்.....
சாலையோரத்தில் 
புணர்ந்து கொண்டிருந்த நாய்களைக்
கடக்கிறது பேருந்தின்
கடைசி இருக்கை.
அந்த 
கடைசி இருக்கையில்
வீறிட்டு அழுகிற 
செவத்தகுழந்தைக்கு
சம்பந்தமேயில்லாத கருத்த தாய்
ஜெலுஸில் மாத்திரையை
இரண்டாய் உடைத்து ஒரு பகுதியை
குழந்தைக்கு ஊட்டுகிறாள்...
மீதத்தை
அவளுக்கும்
உங்களுக்கும்
எனக்கும் தருகிறாள்...
ஜீரணமாவதற்குள் 
வந்து விடுகிறது 
அவரவர்க்கான
நிறுத்தம்.

+++

சிக்னலில் கையேந்தி நிற்கும் குழந்தையொன்று சிகப்பு விளக்கையும் ரோஜா மலராகவே மாற்றிவிடுகிறாள்! கவிஞனின் இதயம் அவளிடம் பாசத்தில் வளைந்து போகிறது! நாளையும் அந்த சிக்னலுக்காக காத்திருக்கும் பூங்கொத்துதான் இந்தக் கவிதை! 

கவிதை:

நேற்றைய 
நெடுஞ்சாலை
சிக்னலில் கையேந்திய
குழந்தையிடம் பூஜ்ய ஸ்தானத்தில் 
நின்று
மெல்லிய சிரிப்பை 
கையில் திணித்த போது♪
குழந்தை பதிலுக்கு 
என்னை அதன்
புன்னகையால்
ஆசீர்வதித்த நொடியை♪
இன்னும் என்
நேரக்காட்டியில்
நிறுத்தி வைத்திருக்கிறேன்♪
நாளைய    
சிக்னலையும்
சிக்னலுக்கான  
சிவப்பையும்
சிவப்பிற்கான   
குழந்தையையும்..
குழந்தைக்கான   
சிரிப்பையும்..
இன்றே 
சேமித்துக்கொண்டிருக்கிறேன்♪
கடவுளுக்கு
வேண்டுதல் நிறைவேற்ற
காத்திருக்கும்
பக்தனைப்போல..
கடவுளின் தரிசனங்களும்
புன்னகையும்
சில நேரம் சிவப்பு
விளக்காலும் 
தீர்மானிக்கப்படுகிறது.

+++

எல்லையில் பயணிக்கும் இராணுவ வீரனுக்கு, அவன் துப்பாக்கிதான் பேச்சு துணை! அதுவே அவன் உணர்வுகளின் வடிவமும் கூட! வலியை மறக்கும் அழகான கவிதை!

கவிதை:

கரையொதுங்கும்
நுரைகளின் இசையை...
பழுத்த இலையின் மேல்
நகரும் காற்றின்
ஸ்பரிசத்தை.....
மொட்டு விரியா
பூவின் மென்மையை..
நிற்கும் குளத்தின்
மௌனத்தை...
யாருமில்லா
இரவின் ஆரவாரத்தை...
நீர் பனிக்கட்டியாகும்
குளுமையை...
நதியோடும் தடத்தில்
மின்னும் கூழாங்கற்களின்
வழுவழுப்பை...
மழை நீர் சொட்டும்
செம்பருத்தியின்
ருசியை....
தூக்கத்தில்
சிரிக்கும் குழந்தையின்
சிரிப்பை...
மலையில் பட்டு
எதிரொலிக்கும்
மலையின்மௌனத்தை...
அவள் தரும்
என் உயிர் தாங்கிய
முத்தத்தை...என அனைத்தையும்
உணர்ந்து கொண்டேயிருக்கின்றேன்
எல்லையில்
என்னுடன் பயணிக்கும்
என் துப்பாக்கியிடம்.

+++

கவிஞரின் சின்ன சின்னக் கவிதைகள் கூட ஆழம் நிறைந்ததாகவே இருக்கின்றன! முதியவனிடம் சொல்லும் வாழ்த்தில் கிடைக்கும் உணர்வு, பறவை பறத்தலை நிறுத்திய பின்பும் நினைவில் தொடரும் பறத்தல், வனத்தை கடைசியாக அசைத்து செல்லும் காற்று இப்படியென எண்ணற்ற சிந்தனைகளில் தன் தனித்துவத்தை நிலை நிறுத்துகிறார் கவிஞர்!

இதோ கவிதைகள்:

யாசகம்
கேட்கும்
குழந்தை....
இன்று பேருந்து
ஜன்னலோர
சாபமெனக்கு

***

கூழாங்கற்களின்
வடிவத்தையெல்லாம்
ஓடும் 
நதி நீர்தான்தான்
தீர்மானிக்கின்றன

***

யானை
பாதக்குழியில்
தேங்கிய நீர்
யாருக்கான 
நீர்த்தேக்கத்தொட்டி

***

தினமும்
கடந்து செல்லும் 
வழியில் தனிமையில்
இருந்த
அந்தச்செடியிடம்
ஓரிரு வார்த்தை அவசரமாக
பேசி விட்டுச்சென்றேன்
மாலையில் திரும்பி
வரும்போது எனக்காக
அந்தச்செடியே
பூத்திருந்தது.
ஏதேனும் ஒரு பெயருக்குள்ளும்
ஏதேனும் சில வண்ணங்களுக்குள்ளும்
சிறைபடாமல்.

***

வாழ்வை
தன்
போக்கில்
சுகித்து முடித்து
படுக்கையில்
கிடப்பவனின்
கண்களைப் பார்த்து
"வாழ்த்துகள் "
என்றபோது
கைகளை இறுகப்பற்றிக்கொண்டான்.
மொத்த உடலையும்
ஆரத்தழுவியதுபோல்
என் முதுகு 
பின் வாங்கியது.

***

நிறுத்தமில்லா
பறத்தலில்
கடல் கடந்த
பறவை பறப்பதை நிறுத்திய பின்னும்
பறப்பது போல்
நினைத்துக்கொள்ளுமாம்....
அது போல்  கடக்கிறது....
நீ
நீங்கிய
ஒவ்வொரு பகலும்.
நான் கடல்
நீ பறவை.

***

அணைத்தவுடன் 
விளக்கினுள்
ஔிந்து கொள்ளும்
வெளிச்சத்தைப்போல்
என்னில்
ஔிந்து கொள்கிறாய்....
நான்
ஔிர்கிறேன்.

***

சாலையில்
கிடந்த கல்லில்
காலை மோதி விட்டு
"கல்லு மோதிருச்சு"
என்று கல்லுக்கு
உயிர் கொடுத்துச்செல்லும்
பாமரனிடம்
வரம் கேட்டுத்தான்
நிற்கிறார்
கல்லுக்குள் இருக்கும்
கடவுள்...

***

திருவிழா 
முடிந்து தனித்த தேர் போல நிற்கும்
அவ்வனத்தின் நிழலை
கடைசியாக
அசைத்து விட்டுச்செல்கிறது காற்று......
விடைபெற்றுச்செல்லும்
நிழல்களும்
மாரிலடித்தழுவது போல்
வேரிலடித்துக்கொண்டழும்
ஒப்பாரிகளும்
நிலத்தின் படிமங்களாகும்
பொழுதில் 
இருட்டத் தொடங்கி விடும்
நிரந்தரமாக....
அது வரை
அடர்வனத்தை வெட்டி வாகனத்தில்
அடைத்து செல்லும் போதும்
மரங்கள் தந்த
பாவமன்னிப்பு மட்டும்
அலைந்து கொண்டேயிருக்கிறது
மரமாக
மழையாக
மா வனமாக.

***

முன்பொரு 
பெரு மழைக்கால பின்னிரவில்
கோவில் வேப்ப மரத்தடியில்
நின்றிருந்த அந்த உருவம்
மெல்ல நகர்ந்து இருளில் மறைய....
சாமி தானென முடிவாகி
ஊருக்குள் இன்னும் நடமாடிக்கொண்டிருக்கிறது..
அன்று மழைநீரில்
கொதித்த உலையிலிருந்து
கிளம்பிய மண் வாசனைக்கு
கிறங்கித்தான் கிடந்தது வயிறு..
கோவில் வேப்ப மரத்தடியே கிடந்த
தொரட்டியை வைத்து அம்மா
மூட்டிய அடுப்பு கொஞ்சம் வைராக்கியமாகத்தான் எரிந்தது..
தண்ணீர் 
நிறத்திலொரு  நாளை
பெய்து விட்டுப்போயிருந்தது
மழை..

***

ஆற்று மணலில்
தூங்கிக்கொண்டிருந்த
என்னை
ஆற்றுக்குள் தூக்கி
வீசிச்சென்ற கனவுக்குள்
கண் விழித்தேன்.
கால்களை கடித்துக் கொண்டிருந்த
மீன்களைப்பிடித்து 
செதில்களை பிய்த்தெரியத்
தொடங்கிய எனக்கு
மீன் வாசனையில் ஒரு
வாசனைத்திரவக்குடுவையைக்
கையில் திணித்து விட்டு
ஓடி மறைந்தன மீன்கள்..
காலையில்
கண் விழித்து பார்த்தபோது
சொறி சொறியாய் இருந்த கால்களைச்சுற்றிலும்
செதில் செதிலாக
பிய்க்கப்பட்டு
ரத்தம் வடிந்திருந்தது.
தலைக்கு மேலே
பறந்து கொண்டிருந்த
மீன் கொத்தி
வேறு திசை நோக்கி பறக்கத்தொடங்கியது....

***

பயணத்தின் இடையே
பயணத்திற்காக குறுக்கிடுகிறது
ஒரு யுவதியின் கைகள்....
வேகமாக கடந்து செல்லும்
ஏதேனும் ஒரு வாகனத்தில் இருக்கிறது அந்தக்கைகளுக்கான பயணம்....
பயணங்களின் முடிவுகள்
ரகசியமானவை...
கொதி நீரின் உச்ச வெப்பத்தில்
மேலெழும்பும் குமிழ்களின்
இசையைப்போல அல்லது
குமிழ்களின் கதறலைப்போல 
ஏதேனுமொன்றில் மறைந்திருக்கும்.
இந்தப்பயணத்தின் முடிவில்
யுவதியின் வீடு கடந்து 
சென்றவர்களின் உருவமற்ற
பாதங்களால் நிறைகிறது .
அங்கே தவறவிட்ட பேருந்தில் காத்திருக்கிறது
யுவதிக்கான பயணம்.

***
மேகங்களின்
பெயரெல்லாம்
தண்ணீரில் தான்
எழுதப்படுகின்றன...

***

View

மாதாந்திர பரிசு

நிலா கிருஷ்ணமூர்த்தி

View

மாதாந்திர பரிசு

செந்தாரப்பட்டி இரா. செல்வகுமார்

View

மாதாந்திர பரிசு

குழலி குமரேசன்

View

Showing 181 - 200 of 454 ( for page 10 )