வணக்கம். படைப்பு ‘தகவு’ முப்பத்தைந்தாம் மின்னிதழ் உங்கள் கண்முன் பரந்துவிரிந்திருக்கிறது. இந்த இதழின் பக்கங்கள் அனைத்திலும் பெண்களின் படைப்புகளே இடம்பெற்றுள்ளன. உழைக்கும் மகளிர் தினத்தைக் கொண்ட மார்ச் மாதத் தகவு இதழ்களை மகளிர் கைவண்ணத்தில் உருவாக்குவது நம் வழக்கமாகியுள்ளது.
‘முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’ என்னும் வீரிய வேட்கை வெளிப்பாட்டின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் நீட்சிதான் குட்டி ரேவதி உள்ளிட்டோரின் உடல் மையக் கவிதைகளாக உருபெற்றிருக்கின்றன. எந்த உடல் மறைக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனரோ அந்த உடல் வழியாகவே தம் மீட்சியை எடுக்கத் துடிக்கின்றன அக்கவிதைகள். தமிழ்ப் பெண் படைப்புலகில் குட்டி ரேவதி ஒரு குறியீடாகவே மாறிவிட்டார். கவிஞர் குட்டி ரேவதியுடனான நேர்காணல் இவ்விதழில் இடம்பெறுகிறது.
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி தன் படைப்புகள் உருவான தருணங்களைக் கட்டுரையாக வடித்திருக்கிறார். படைப்பு பதிப்பகத்தில் நூல் வெளியிட்டிருக்கும் பெண் படைப்புகள் குறித்த அறிமுகம் வெளியாகியுள்ளது. இன்னும் சிறுகதைகள், கவிதைகள், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள், அனுபவம் என உள்ள பெண்களின் படைப்புகள் அனைத்தையும் வாசியுங்கள்.. விவாதியுங்கள்.. பகிருங்கள்..