ம.முத்துலெட்சுமி
கவிதை வரிசை எண்
# 241
மாண்புமிகு மகளிர்
ஆதி சமூகத்தை வழி நடத்தியவள்
அடுப்பங்கரைக்குள் தள்ளப்பட்டாள்
நாடாண்ட அரசியவள் நடுத்தெருவில் நிறுத்தப்பட்டாள்
புலவராய் வாழ்ந்த மகள் புழுதியிலே வீசப்பட்டாள்
அறிவு பெற பள்ளி சென்றாள்
ஆசான்களின் அத்துமீறல்
பணிபுரியும் இடத்திலேயோ பாலியல் சீண்டல்கள்
கடவுளரின் சன்னதியில் கட்டாய வன்புணர்வு
வெறும் பாலுறுப்புதானாம் அவள்
ஆறோ அறுபதோ எப்படியிருந்தாலும்
காமம் தலைக்கேறிய வக்கிரக் கண்களால்
வன்புணர்வு எங்கேயும் எப்போதும்
அவளடைந்த உயரமெல்லாம் பெண்ணானதாலென
பொதுவெளியில் பகடிப்பேச்சு
அவளை அவமதிக்க நடத்தை கெட்டவளென
நாகரிகமில்லாக் குற்றச்சாட்டு
கூண்டையும் தூக்கிப் பறக்கிறாள்
பூட்டின் சாவியோ ஆணின் கையில்
அவள் எப்போதும் இருக்கிறாள்
தாயாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய்
ஆண் மட்டும் இருக்கிறான்
எப்போதும் ஒரு ஆணாய்
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்