சுகந்தி
கவிதை வரிசை எண்
# 233
யார் மலடு?
நட்டதெல்லாம் பலன் தருமா? மழை பொய்த்து
விதை மக்கி முளைக்காமல் போனதெல்லாம் எந்த கணக்கில் சேர்த்தாயோ?அந்தக் கணக்கில் சேர்த்து
விட்டாய் என்னையும்.. நாம் மாறி நானாகி
காலம் எழுதிய கணக்கொன்று எனக்கான கணக்காய் ..
மாறியதால் எதைக்கூட்டி எதைக் கழித்து பெருக்கி வகுத்தாலும் வாராத விடையொன்னு வந்ததோ புருசனே..
உன் வாரிசை கூட்டும் கணக்கில் இல்லை!
உன் வம்சத்தை பெருக்கும் கணக்கில் இல்லை!
உன் அன்பை வகுத்து உறவைக் கழித்த கணக்கானேன் ஓடிய பக்கமெல்லாம் உன் நாவுதிர்த்த "மலடி"என்ற சொல்லால் கொட்டிய விசமே
விறைத்து நின்று துரத்தியது நீலம் பாரித்து..
மறந்தும் நான் தேடவில்லை உன்னிடம் மனிதத்தை
ஆயினும் நான் வாழ்ந்தேன் மரணித்த உணர்வோடு. உன் கூடலெல்லாம் காமத்தின் கரைக் கடந்து
ஆண்மையை பிரகடனப் படுத்த நினைத்ததால் தானோ.
முகிழ்க்கவே இல்லை தாய்மையின் துளிர் என்னுள்...
வலி மறக்கும் நிவாரணியாய் நான் தேட!
வலி கொடுக்கும் காரணியாய் நீ மாற !
காதலோ கனிவோ ஏதுமின்றி பிள்ளைக் காய்க்கும் மரமென நாளும் நச்சரித்து நாசூக்காய் தந்து விட்டாய் மணவிலக்கு... அனுப்பவா என் பிள்ளையை
உன் வாசலின் கலையாத கோலத்தை கலைத்துவிட!
உறுதி மொழி
இந்தக் கவிதை இது வரை வேறு எந்த பத்திரிக்கையிலோ தளங்களிலோ வெளியாகவில்லை என உறுதியளிக்கிறேன்.
___சுகந்தி
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்