கவிஞர் எஸ்.மோகனா
கவிதை வரிசை எண்
# 232
மாண்புமிகு மகளிர்
********************
*"வீட்டுக்கு மகாலெட்சுமி பொறந்திருக்கா!" என்று
பொக்கைவாய் கிழவியின்
புன்னகையில்...
பிறப்பவள் பெண்!
சேலையில் தொட்டில் கட்டி
செந்தமிழில் பாட்டுகட்டி
தாலாட்டுபவள் பெண்!
அம்மாவுடன் இணைந்து
தத்தக்கா புத்தக்கா கோலமிட்டு
வாசலை அழகாக்குபவள் பெண்!
தம்பிக்கு...
அக்காயென்ற அன்னையாய்...
அண்ணனுக்கு தங்கையென்ற தாயாய்...
அப்பனுக்கு...
அவரைபெத்த
ஆத்தாவாய்...
சிறுவயதிலேயே
அவதாரமெடுப்பவள் பெண்!
முடியில்லா தலையில்
தோல்துண்டை முறுக்கி சடையாக்கி செம்பருத்தியை சொருகி நாலாபுறமும்
அசைத்து அசைத்து
ஆனந்தப்படுபவள் பெண்!
மண்ணிலே வீடுகட்டி...
கொட்டாகுச்சியில் சோறாக்கி
மண்சோறென்றும்...
கூட்டுக்குடும்பத்தின் அவசியத்தை
கூட்டாஞ்சோறென்றும்...
பெயர் வைத்து...
சிறுவயதிலேயே அம்மாவாய்...
வாழ்ந்துகாட்டுபவள் பெண்!
அடிவயிற்றில் கைவைத்து...
பச்சஓலைக்குள் பருவமடைபவள் பெண்!
நட்பிலே நல்ல தோழியாகவும்...
காதலிலே அழகுதேவதையாகவும்
வலம்வருபவள் பெண்!
திருமண பந்தத்திலே...
பிறந்தவீட்டு பெருமையையும்...
புகுந்தவீட்டு புகழையும்
எந்நாளும் காப்பவள் பெண்!
தாலிக்கொடியவும்
தொப்புள்கொடியவும்
தல்லாடும்வயதுவரை
தாங்கிபிடிப்பவள் பெண்!
*மங்கையராய் பிறந்திடவே- நல்ல
மாதவம் செய்திட வேண்டுமென்றதால்-நான் மாற்றுப்பாலீனமானேன்!
ஆம்!படைப்பிலே பிழை!
குரோமோசோம்களில் குழப்பம்...
ஆண்மைக்குள் பெண்மை...
உடலுக்குள் உள்ளம்நடத்திய
உணர்வு போராட்டத்தில்
வெற்றிகண்டது பெண்மை!
நங்கையானேன்!
திருநங்கையானேன்!!
உங்களில் நானும் ஒருத்திதான்!
எட்டுத்திசைக்கும் கேட்கும்படி....
ஒற்றுமையாய்
ஒளியெழுப்புவோம்- நாங்கள்
"மாண்புமிகு மகளிர்"என்று!!!
இப்படிக்கு
கவிஞர் எஸ்.மோகனாMsc.,
திருநங்கை சமூக ஆர்வலர்., சென்னை.
சர்வதேச மகளிர் கவிதைப்போட்டி - 2022 - பட்டியல்