logo
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்

மு.ராஜிலா ரிஜ்வான்

சிறுகதை வரிசை எண் # 158


பர்ஹானா ஐ.ஏ.எஸ். ____________________ "நான் கலெக்டராவேன் டீச்சர்" என்றாள் பர்ஹானா. "நீங்க பெரியவங்களான பெறகு என்ன வேலைக்குப் போகப் போறீங்க?" என்று ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பெரும்பாலான மாணவிகள் 'டீச்சராவேன், டாக்டராவேன்' என்றும் மாணவர்கள் 'மிலிட்ரில சேர்வேன், போலீசாவேன், டிரைவராவேன்' என்றும் சொன்ன பதில்களுக்கு இடையில் பர்ஹானா சொன்ன பதில் சற்று வித்தியாசமாக இருந்தது. எப்பவுமே முதல் மதிப்பெண் எடுக்கும் பர்ஹானா இப்படிச் சொன்னதில் ஆசிரியருக்கு ஆச்சரியம் ஏதுமில்லை. ஆசிரியரும் "வெரி குட். நீ கண்டிப்பா கலெக்டராத்தான் வருவ" என்றார். மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பர்ஹானாவிற்கு கலெக்டராக வேண்டும் என்கிற ஆசை மனதிற்குள் வந்தது. அப்பொழுது வைகை அணைக்கு பக்கத்திலுள்ள அவளது ஊரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது தேனி மாவட்ட ஆட்சியராக ஒரு பெண் இருந்தார். அவர் ஒவ்வொரு இடங்களாகப் பார்வையிட்டதையும், நிவாரணப் பொருட்கள் வழங்கியதையும் நேரில் பார்த்தாள் பர்ஹானா. மாவட்ட ஆட்சியர் அவள் படிக்கும் பள்ளிக்கு ஒருமுறை ஆய்விற்காக வந்திருந்தார். அவரின் நடை, உடை, பாவனை அனைத்திலும் இருந்த மிடுக்கு, கம்பீரம் பர்ஹானாவிற்கு மிகவும் பிடித்திருந்தது. அன்று முதல் தானும் அவரைப் போல கலெக்டராக வர வேண்டும் என்பதை மனதில் கொண்டு, தன் நோட்டு புத்தகங்களின் முதல் பக்கத்தில் பர்ஹானா IAS என்று எழுதத் துவங்கினாள். அத்துடன் அவளிடம் யாராவது 'உன் பெயர் என்ன ..?' என்று கேட்டால் "பர்ஹானா ஐ. ஏ. எஸ்" என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். வீட்டிலும் ஒரு துண்டைச் சேலை போல் கட்டிக்கொண்டு அந்தப் பெண் கலெக்டர் போல விளையாடிக் கொண்டிருப்பாள். பர்ஹானாவிற்கு மூன்று தங்கைகள். மூன்றாம் வகுப்பில் ஒரு தங்கையும், இரண்டாம் வகுப்பில் ஒரு தங்கையும், இரண்டு வயதில் ஒரு தங்கையும் இருந்தனர். பர்ஹானாவின் அம்மா ஆயிஷா அதே பள்ளியில் மாதம் 3000 ரூபாய் சம்பளத்திற்குத் துப்புரவு பணியாளராகப் பணிபுரிந்து வந்தார். அத்தா முபாரக் ஒரு சிறிய உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இரவு பணி முடித்து தாமதமாக வீட்டிற்கு வரும் முபாரக் உணவகத்தில் எஞ்சிய உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து, உறங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தைகளை எழுப்பி தன் கைகளாலேயே ஊட்டி பாசத்தைப் பொழிவார். ஆனால் குழந்தைகள் உறங்கியபின்பு, குடித்துவிட்டு ஆயிஷாவுடன் சண்டையிடுவதும், அவளை அடிப்பதும் வழக்கமாகக் கொண்டிருந்தார். அவரது வருமானத்தில் பாதி அவரது குடிக்கே சரியாக இருந்தது. ஆயிஷா ஒவ்வொரு நாளும் இரவு ஏன்தான் வருகிறதோ என்றும், தன் வாழ்வில் இரவு என்கிற ஒன்றே இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்றும் நினைத்துக் கொள்வாள். கணவன் சரியில்லாத பெண்களுக்கு இரவு நரகம்தான். மனதிற்குள்ளே மருகிக் கொண்டு இருந்தாலும் சில நேரங்களில் ஆயிஷா தம் பிள்ளைகளிடம், “நான்தான் படிப்பறிவு இல்லாததுனால கூட்டிப் பெருக்குற வேலைக்கு போறேன். இந்தக் குடிகாரனைக் கட்டிக்கிட்டு காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கெடக்கேன். நீங்களாவது நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போவணும். வாழ்க்க முழுக்க கஷ்டப்படாம இருக்கணும்" என்று அழுது புலம்புவாள். பர்ஹானா "அழாதம்மா. நான் இருக்கேன். நல்லா படிச்சு கலெக்ட்ராகி உன்ன இந்த ஊர் மெச்ச நான் பார்த்துப்பேம்மா" என்று அழும் அம்மாவை தேற்றுவாள். தங்கைகள் படிப்பில் நடுத்தரமாக இருந்தாலும் தன் குடும்பச் சூழ்நிலைகளை மனதில் இருத்தி பர்ஹானா வைராக்கியமாகப் படித்தாள். படிப்பில் மட்டுமல்லாமல் ஓவியம்,பேச்சு, விளையாட்டு போன்ற அனைத்திலும் முதல் மாணவியாகவே இருந்தாள். தற்போது நடைபெற்ற ஒன்பதாம் வகுப்பு அரையாண்டுத் தேர்விலும் பர்ஹானாதான் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். ஆசிரியர்கள் அனைவரும் பர்ஹானாவை பாராட்டியதுடன் அடுத்த வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் பர்ஹானாதான் மாநில அளவில் முதல் மாணவியாக வருவாள் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இந்த நிலையில் தான் எல்லோர் தலையிலும் மண்ணள்ளி போடுவது போல வந்தது கொரோனா ஊரடங்கு. ஒன்பதாம் வகுப்பு இறுதித் தேர்வு வருவதற்குள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தனர். ஆயிஷாவை பள்ளி திறந்த பின்பு வேலைக்கு வந்தால் போதும் என்று கூறி விட்டனர். ஊரிலுள்ள அனைத்துக் கடைகளும் மூடப்பட்டதால் முபாரக்கும் வேலையின்றி வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். நான்கு பிள்ளைகளும், கணவனும் வீட்டில். பள்ளி திறந்திருக்கும் பொழுது பிள்ளைகள் நால்வரும் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை வயிறார உண்டு வந்தனர். இப்போது அதற்கும் வழியில்லை. பள்ளியில் மாதம் ஒருமுறை சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு இரண்டு கிலோ அரிசியும், ஒரு கிலோ பருப்பும், 10 முட்டையும் வழங்கினர். இலவசமாகக் கிடைத்த ரேஷன் அரிசியையும் வைத்து தினமும் கஞ்சி காச்சி எப்படியோ பசியில்லாமல் சமாளித்தாள் ஆயிஷா. இரண்டு மூன்று மாதங்களில் கையிருப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பருப்பு, பால் வாங்கக் கூட காசு இல்லாத நிலைக்கு வந்தனர். பக்கத்தில் இருந்த பெரிய வீட்டம்மா அவ்வப்போது சாப்பாட்டிற்கு உதவி செய்து வந்தார். வீட்டு ஓனர் அம்மா அட்வான்ஸ் ரூபாய் கழிந்த பின்பும் மூன்று மாதங்கள் வரை வாடகை வாங்காமல் இருந்தார். பர்ஹானா இந்த வருடம் பத்தாம் வகுப்பு என்பதால் பள்ளியில் அலைபேசி வாயிலாக பாடங்கள் நடத்தினர். முபாரக்கிடம் பட்டன் போன் மட்டுமே இருந்ததால் எந்தப் பாடமும் பர்ஹானாவால் படிக்க இயலவில்லை. தினமும் கல்வித் தொலைக்காட்சியில் வரும் பாடங்களை மட்டும் பார்த்துப் படித்துக் கொண்டிருப்பாள். அதுவும் கேபிள் பணம் கட்டாததால் துண்டிக்கப்பட்டது. ஒரு அறையே சமையலறையாகவும், படுக்கை அறையாகவும், வரவேற்பறையாகவும் கொண்டதுதான் அவர்களது வீடு. அதற்குள் ஒரு பக்கம் கிழிந்த பாய் விரித்து அதில் முபாரக் படுத்திருப்பார். மறுபக்கம் நான்கு பிள்ளைகளும் விளையாடிக் கொண்டும், சண்டையிட்டுக் கொண்டும் இருப்பார்கள். அவர்கள் நால்வரையும் சமாதானம் செய்வது ஆயிஷாவிற்கு பெரும் பாடாக இருந்தது. நான்கு பிள்ளைகளையும், விதண்டாவாதம் பேசும் கணவனையும் வைத்துக்கொண்டு வெளியில் எங்கும் செல்லவும் முடியாமல் எப்படி நிலைமையைச் சமாளிப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருந்தாள் ஆயிஷா. சாராய கடையும் பூட்டப்பட்டதால் வீட்டிலேயே முடங்கி கிடந்தார் முபாரக். மனைவியுடன் சண்டையிடுவது மட்டுமே அப்போது அவரது முழு நேர பொழுதுபோக்காக இருந்தது. ஆயிஷா ஏதாவது வீட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்கு போகலாம் என்று நினைத்தாள். பெரிய வீட்டுக்காரவங்களும் கொரோனாவிற்கு அஞ்சி யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. மூன்று வேளை கஞ்சி நான்கு மாதங்களில் இரண்டு வேளையாகக் குறைந்திருந்தது. அந்த நேரத்தில்தான், அருகில் உள்ள பிள்ளைகள் எல்லாம் மதரசாவிற்கு செல்வதை அறிந்தாள். வீட்டிலேயே முடங்கி கிடப்பதற்கு பிள்ளைகள் மதரசா சென்றாலும் நன்றாக இருப்பார்கள் என்று நினைத்தாள். கடைக்குட்டி தவிர மற்ற மூன்று பிள்ளைகளையும் மதரசாவில் சேர்த்துவிட்டாள். மதரசா நிர்வாகிகளும் ஆயிஷாவின் ஏழ்மை நிலையை அறிந்து பிள்ளைகளுக்கு எந்தக் கட்டணமுமின்றி சேர்த்துக் கொண்டனர் . பள்ளி நாட்களில் காலை, மாலை இருவேளையும் ஏழு மணிக்கு மதரசா செல்வார்கள். தினமும் இரண்டு மணி நேரம் மட்டுமே மதரசாக்கள் நடைபெறும். கொரோனா தொற்று அதிகமிருந்த காலத்தில் மதரசாக்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டு இணையவழி பாடங்கள் நடத்தப்பட்டன. ஆறு மாதங்களுக்குப் பிறகும் பள்ளிகள் திறக்காமல் விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டதால் மூன்று மணி நேரத்திற்கு ஒரு பிரிவாக காலை முதல் மாலை வரை மதரசாக்கள் செயல்பட்டன. நோய் தொற்றுக்கு அஞ்சி முகக்கவசம் மற்றும் போதுமான இடைவெளியுடன் மாணவிகள் அமர வைக்கப்பட்டு இருந்தனர். மதரசாக்குள் நுழையும் போதே கைகளைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு கைகளைச் சுத்தப்படுத்தியும், கால்களை சோப்பு மற்றும் நீரால் சுத்தப்படுத்தியும் உள்ளே வர அறிவுறுத்தப்பட்டனர். அதேபோல் மதரசாவிலிருந்து வீட்டிற்குச் செல்லும் பொழுதும் தங்களை சுத்தப்படுத்திய பிறகே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஐம்பது பேர் அமரும் இடத்தில் இருபது பேர் மட்டுமே இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர். பெற்றோர்களும் பள்ளிகள் இல்லாமல் குழந்தைகள் வீட்டிலேயே இருந்தால் கெட்டுவிடுவார்கள் என்பதால் மதரசாக்களுக்கு விரும்பி அனுப்பினர். பர்ஹானா மதரசாவில் மூன்று வருடப் படிப்பில் (முபல்லிகா) சேர்ந்தாள். அவளின் தங்கைகள் ஒரு வருட படிப்பில் சேர்ந்தனர் . குர்ஆன் ஓதுவது, ஹதீஸ் (நபி மொழிகள்) படிப்பது, தொழுவது, சூராக்கள் (குர்ஆன் வசனங்கள்) மனப்பாடம் செய்வது இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருந்தன. அந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தாமலேயே மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தனர். பரீட்சை எதுவும் எழுதாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தது நடுத்தரமாகப் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த கவலையைக் கொடுத்தது. அடுத்து பதினொன்றாம் வகுப்பு சேர வேண்டும். பர்ஹானா மதரசா பாடங்களில் மூழ்கிப் போய் இருந்தாள். பள்ளி செல்ல வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் இருந்தாள். ஆயிஷாவும் பலமுறை சொல்லிப் பார்த்தாள். பள்ளி ஆசிரியர்களின் தொடர் வற்புறுத்தலுக்குப் பிறகு அவள் பதினொன்றாம் வகுப்பு சேர ஒரு மாதத்திற்குப் பின்பாக சென்றதனால் அவள் விரும்பிய வணிகவியல் பிரிவில் இடம் கிடைக்கவில்லை. அறிவியல் பிரிவில் மட்டுமே இடம் இருந்தது. அதில் சேர்ந்து புத்தகங்களை வாங்கி வந்து வீட்டில் வைத்தாள். அத்தோடு அவ்வளவுதான் ..! மீண்டும் கொரோனா விடுமுறை தொடர்ந்தது. மதரசாவில் தொடர்ந்து தேர்வுகள் நடைபெற்றதால் அதையே படித்துக் கொண்டிருந்தாள். பொது ஊரடங்கு ஒரு வருடத்திற்கும் மேலானதால் பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் குறிப்பிட்ட தொகையைப் போட்டு பள்ளியில் மிக ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்களின் குடும்பத்திற்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தனர். ஆயிஷாவிற்கும் அந்தப் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தையும், ரேஷன் அரிசியையும் வைத்துக் கொண்டு, அங்கே இங்கே கடன் பட்டு எப்படியோ பிள்ளைகளின் இருவேளை பசியை அமத்தினாள். முபாரக் உணவிற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆயிஷா கொடுக்கும் ஏதோ ஒன்றை சாப்பிட்டு விட்டு முடங்கிக் கிடந்தான். சில நேரங்களில் சண்டை போடக் கூட அவனுக்குத் தெம்பில்லை. கொரோனா காலத்தின் தொடர் இறப்புச் செய்திகளுக்கு இடையில் உயிருடன் இருப்பதே பெரும் சாதனையாக இருந்தது. ஊரடங்கு நேரத்தில் வெளியில் எங்கும் செல்ல இயலாது. ஆண்கள் மட்டும் அவ்வப்போது வெளியே சென்று, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி வந்தார்கள். குழந்தைகள் விளையாடுவதற்குக் கூட வெளியில் செல்லாமல் வீட்டிலேயே தொலைக்காட்சிப்பெட்டியின் முன்பு முடங்கிக் கிடந்தனர். பெண்கள் மாலை நேரம் தொழுகைக்குப் பிறகு வீட்டு வாசலில் அமர்ந்து ஊர்க்கதை பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதுவே அவர்களின் பொழுதுபோக்காக இருந்தது. ஆயிஷாவும் அவள் பக்கத்து வீட்டு பெண்களும் அருகில் உள்ள வீட்டின் திண்ணையில் அமர்ந்து தினமும் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக் கதைகளைக் கூறும் பொழுது ஆயிஷாவும் தன் வீட்டுச் சூழ்நிலையை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வாள். அப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள் பக்கத்து வீட்டு அக்கா பவுசியா, "ஆயிஷா.. அடுத்தடுத்து வயசுக்கு வந்த மூனு கொமருப் புள்ளைங்கள வச்சிருக்க.. தெனமும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற. ஒன் நிலம என்னைக்குத்தான் மாறுமோ. அது அல்லாவுக்குத்தான் வெளிச்சம். நான் உனக்கு ஒரு நல்லது சொல்றேன். யோசிச்சுப் பதிலச் சொல்லு. எங்க அக்கா மெகரு. உனக்குத் தெரியும்ல. அவ மகன் கபீரு. தேனில டீக்கடை வச்சிருக்கான். பார்க்கவும் அழகா இருப்பான். நம்ம பர்ஹானாவ அவனுக்குக் கட்டி வச்சா உன்னோட பாரம் கொஞ்சம் குறையும்" உடனே ஆயிஷா மறுத்து, "அக்கா.. பர்ஹானா சின்ன புள்ளக்கா. பதினாறு வயசுதான் ஆவுது. அதுக்குள்ள எப்படிக்கா கல்யாணம் பண்ணி வக்கிறது?" என்றாள். "பதினாறு வயசுன்னா என்ன? அவளைப் பார்த்தா பதினாறு வயசு மாதிரியா இருக்கா. அவ அத்தா மாதிரி நல்ல உயரமா இருபது வயசு மாதிரில இருக்கா. யாராச்சும் கேட்டா இருபது வயசுனே சொல்லிக்கலாம். பொறந்த சட்டிபிகெட்டவா கேக்கப் போறாக" என்றார் பவுசியா. "சாப்பாட்டுக்கே வழியில்லாத இந்த நேரத்துல கல்யாணம்.. அது.. இதுன்னு.. என்னக்கா சொல்றீங்க" "இந்த கொரோனா டயத்துல ஊர்ல நெறைய கல்யாணம் நடக்குது. நீ பாக்கலயா. வீட்டளவுல சிம்புளா வச்சா போதும். அந்தப் பையனும் வரதட்சணை எதுவும் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டான். பின்னப் பெறகு ஏதாச்சும் செய்றேன்னு சொல்லிட்டு கல்யாணத்தை முடிச்சு வை. பர்ஹானா அழகுக்கு நீ எதுவுமே செய்யக் கூட வேணாம். எனக்கு மட்டும் ஒரு பையன் இருந்திருந்தால் இந்நேரம் பர்ஹானாவ என் வீட்டு மருமகளாக்கி இருப்பேன். எனக்குத்தான் கொடுத்து வைக்கல" ஆயிஷாவிற்கும் பவுசியா சொல்வது சரியெனப்பட்டது . "சரிக்கா. அவர்கிட்ட கேட்டுட்டு என்னன்னு சொல்றேன். அந்தப் பையனுக்கு வயசு.." இழுத்தாள் ஆயிஷா. "என்ன பெரிய வயசு. இருபத்தேழுதான் ஆகுது. ஆனா பார்த்தா இருபது வயசு பைய மாதிரிதான் இருப்பான். ஆம்பளக்கி வயசா முக்கியம். சம்பாத்தியம்தான் முக்கியம். அவென் நல்ல சம்பாத்தியக்காரன். உனக்காக வேணா எங்க அக்காகிட்ட பேசுறேன். இந்த சம்பந்தத்தை விட்டுட்டா வேற நல்ல சம்பந்தம் உனக்கு அமையுறது கஷ்டம்" அடுத்தடுத்த வீட்டில் உள்ள பெண்களும் "ஆயிஷா.. இப்படியே கொரோனா கொரோனான்னு பள்ளிக்கூடத்தையும் திறக்க மாட்டாங்க. பிள்ளைகளோட படிப்பும் போச்சு. நம்ம பொழப்பும் போச்சு. பவுசியா சொல்றபடி மூத்தவளை கட்டிக் கொடுத்துட்டேன்னா அவளாவது கஞ்சிக்குக் கஷ்டப்படாம நல்லா இருப்பா. உனக்கும் கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்று சொன்னார்கள். இவர்களின் இந்தப் பேச்சு ஆயிஷாவின் மனநிலையை மாற்றியது. படிப்புதான் இல்லாம போச்சு. பிள்ளைக்கு நல்ல வாழ்க்கையாவது அமையட்டும் என்று யோசித்தாள் ஆயிஷா. முபாரக்கிடம் இது பற்றி பேசியபோது “எங்கிட்ட பணம் காசு எதுவும் கேட்காம என்ன வேணாலும் செஞ்சுக்கோ” என்றான். பர்ஹானாவிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் பர்ஹானாவுடன் படித்த வகுப்புத் தோழிகள் இரண்டு பேருக்கும் திருமணம் நடைபெற்றது. “உங்கூட படிச்ச புள்ளைங்க எப்படி தாய் தகப்பன் சொல்லக் கேட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்குதுக பாரு. கலாகாலத்துல நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்காச்சும் வயிறு நிறையும். இந்த கொரோனா சனியெ என்னைக்கு ஒழிய, நா என்னைக்கு வேலைக்கு போய் புள்ளைங்களுக்கு வயிறு நிறைய சோறு பொங்கி போட..” அடிப்பார் அடித்தால் கல்லும் கரையும் அல்லவா. பர்ஹானா கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தாள். முதலில் மறுத்தாலும் தன் அம்மா தனக்கு எதைச் செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று திருமணத்திற்குச் சம்மதித்தாள். ஒரே மாதத்தில் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு திருமணம் நடைபெற்றது. உறவினர்களும், ஊர்ப் பெரியவர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். கொரோனா காலம் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு அருகே உள்ள வீட்டு மாடியில் ஒரு மாலை நேரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணச் செலவு முழுவதையும் மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக்கொண்டனர். அன்று ஆயிஷாவும், முபாரக்கும் அவர்களது குழந்தைகளும் வயிறு நிறைய சாப்பிட்டனர். பர்ஹானாவிற்கு தன்னை அலங்காரம் பண்ணி, தலை நிறைய பூச்சூடி பட்டுச்சேலை உடுத்தி இருப்பது பிடித்து இருந்தது. அவ்வப்போது கண்ணாடியை கையில் எடுத்து தன் முகத்தையும், கூந்தல் அழகையும், திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டாள். தாம்பத்தியம் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதற்கு முன்பே அடுத்த மூன்று மாதங்களில் பர்ஹானா குழந்தை உண்டானாள். குழந்தை உண்டான நாளிலிருந்து எப்பொழுது பார்த்தாலும் வாந்தி மயக்கம் என்று ஏதாவது செய்து கொண்டே இருந்தது. ஆனாலும் வீட்டு வேலைகள் அனைத்தையும் அவளே பார்த்தாள். அதுதான் பெண்களுக்கான கடமை என்று சொல்லி வளர்க்கப்பட்டவள் அவள். அடுத்த சில மாதங்களில் கொரோனா ஊரடங்கு முடிந்து கடைகள் திறந்தன. கடைகள் பகுதி நேரமாக செயல்பட்டன. கபீரின் கடையில் வடை போடுவதற்கு உதவியாகச் சென்றாள். அப்பொழுதுதான் கவனித்தாள். அந்தத் தேநீர்க்கடை தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாசலிலேயே அமைந்திருந்தது. ஆட்சியர் அலுவலகத்தில் ஏக்கமுடன் பார்த்தாள். வடை போட்டுக் கொண்டிருக்கும் போது கலெக்டரின் வாகனம் அவளைக் கடந்து சென்றது. அதில் இருந்த கலெக்டர் முகத்தை எக்கி எக்கி பார்த்தாள். ஆனாலும் சரியாக தெரியவில்லை. பர்ஹானா மனதிற்குள் "பர்ஹானா ஐ. ஏ. எஸ்" என்று சொல்லிக் கொண்டாள். ஒரு கை வடை போடுவதில் மும்முரமாக இருந்தாலும், மற்றொரு கை அவளது நிறைமாத வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தது. ---------------------------------- ராஜிலா ரிஜ்வான் கம்பம்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in