யாழினியாதினி
சிறுகதை வரிசை எண்
# 157
சிறகு..
மதிய உணவு இடைவேளைநேரத்தில் கருச்சுமக்கும் தாய்போல புத்தகத்தைக்கட்டித்தழுவி மடங்கிச்சுருண்டு கிடந்த மதுபாலாவின் மனசு வீட்டில் காலையில் நடந்தநிகழ்வையே சுற்றிக்கொண்டிருந்தது.
காலையில் வீட்டுவேலைகளை முடித்துவிட்டு அவசர அவசரமாய்ப் பள்ளிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தபோதுதான் அடுப்படியிலிருந்து அம்மா கத்தியது காதில் இடியாய் விழுந்தது..
"இந்த வருசத்தோட நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும்.. குடிகார உங்கப்பன் ஊரைச்சுத்தி வாங்குன கடனுக்கு நாம ரெண்டுபேரும் ஆயுசுக்கும் அத்தக்கூலிக்கு போனாலும் அடைச்சுரமுடியாது.. யாரு என்ன பாவத்த பண்ணுனாங்களோ? சாபத்த வாங்குனாகளோ? தெரியல.. அம்புட்டு கஷ்டமும் நம்ம தலையிலதான் வந்து விடிஞ்சிருக்கு.. பொம்பளையாப் பொறந்த பாவத்துக்கு நம்மால வேறென்னத்தச் செய்யமுடியும்?" என்று அம்மா விம்மிக்கொண்டிருந்தாள்.
"முடியாதுமா.. நா படிப்ப விடமாட்டேன்மா.." என குரலில் உறுதி தொனிக்க அதே சத்தத்தோடும் வேகத்தோடும் சொன்ன மதுபாலாவை நோக்கி ஓடிவந்த வேகத்தில் முதுகில் ஆவேசமாய் மொத்துமொத்தென்றுமொத்தி தன் கணவன் மீதிருந்த கோபத்தைக் கொப்பளித்தாள் மல்லிகா. சம்மட்டியடியாய் விழுந்த அடிகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அலறித்துடித்தாள் மதுபாலா.
"இன்னுங்கூட.. என்னைய.. அடிச்சுக்குங்கமா.. ஆனா.. நா.. படிக்கணும்மா.." என்று தேம்பியழுதபடியே சொன்ன மகளைக் கதறியபடியே நெஞ்சோடு சேர்த்தணைத்தாள் மல்லிகா.
பள்ளிக்கூடத்திற்கு நேரமாகிவிட்டதென்று அம்மாவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சாப்பிடாமல்கொள்ளாமல் பையை எடுத்துக்கொண்டு பள்ளியிருந்த திசைநோக்கி ஓடிவந்தாள்.. வெளியில் முதுகைக்காட்டிலும் உள்ளுக்குள் மனதில் வலி அதிகமிருந்தது.அழுது அழுது கன்னம் வீங்கியிருந்தது.. மதிய உணவு இடைவேளையிலும் சத்துணவு சாப்பிடப் போகாமல் தோழிகளிடம் வயிற்றுவலியென்று பொய்சொல்லி வகுப்பறைக்குள் சுருண்டு படுத்துக்கொண்டாள்.. பசி வயிறை கவ்விப்பிடித்தது.. ஆனாலும் ஏமாற்றம், இயலாமை, குழப்பம்,கோபம் எல்லாமும் சேர்ந்து உள்ளுக்குள் கொந்தளித்துக்கொண்டிருந்தன. படிப்பதைத்தவிர வேறெதற்கும் ஆசைப்படாத தனக்கு ஏன் இப்படியொருநிலையென உள்ளுக்குள் எரிமலையாய் குமைந்துகொண்டிருந்தாள்.. சொல்லியழ யாருமின்றி எல்லோரும் இருந்தும் தான்மட்டும் தனிமைப்படுத்தப்பட்டதுபோன்று உலகமே அவளுக்கு இப்போது அந்நியப்பட்டுப்போயிருந்தது..
நோய்வந்தாலும் கவலையிருந்தாலும் எப்போதும் சுறுசுறுப்பாய் கலகலப்பாயிருக்கும் தன் தோழி மதுபாலாவின் முகம் காலையிலிருந்தே வாடியிருப்பதும் அழுதழுது வீங்கியிருப்பதும் நிச்சயம் அவள் சொன்னதுபோல் வயிற்றுவலியால் அல்ல.. வேறு ஏதோ பிரச்சனை என்பதைப் புரிந்துகொண்டாள் அனிதா.ஆனால் வீட்டில் என்ன பிரச்சனை என்பதைத்தான் அவளால் யூகிக்கமுடியவில்லை. எவ்வளவு அழுத்திக்கேட்டாலும் உண்மை சொல்ல மறுக்கும் மதுபாலாவை அப்படியே விட்டுவிடவோ அவளை விட்டுவிட்டுச் சாப்பிடவோ துளியும் விருப்பமில்லை.. பக்கத்திலேயே ஆணியடித்தாற்போல அசையாமல் நின்றுகொண்டிருந்தவள் ஏதோ யோசனை வந்ததும் சிட்டுக்குருவிபோல விருட்டென்று ஓடினாள்.
ஆசிரியர்கள் அறையில் கையும் தட்டும் கழுவி
மதிய உணவுண்பதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த ஆசிரியை வானதி வாசலில் ஓரமாய் நின்றுகொண்டிருந்த அனிதாவை எதேச்சையாகப் பார்த்து அவள் முகத்தில் தெரிந்த பதற்றத்தைப் பார்த்ததும் பாத்திரத்தை ஓரமாக வைத்துவிட்டு அருகில்வந்து என்னவென்று புருவம் உயர்த்தினார். அனிதா அவரின் காதருகே பட்டனைத் தட்டியதைப்போல படபடவென்று சொல்லி முடித்தாள்.
அனிதாவின் கைபிடித்து 10-C வகுப்பறைக்கு விரைந்தார் வானதி. வானதிக்கு கிராமப்புற, ஏழை-எளிய குடும்பங்களிலிருந்து வரும் பெண்பிள்ளைகளின் சிரமங்கள் எல்லாம் தெரியும்.சிட்டுக்குருவிகளின் தலைகளில் பனங்காய்கள் சுமத்தப்பட்டிருப்பதை உணர்ந்து பதறி கேட்காமலேயே உதவிசெய்வார்.
சிறுவயதில் தனக்கு உதவவோ வழிகாட்டவோ ஆளின்றி தான்பட்ட துயரங்களை வேறுயாரும் படக்கூடாதென்ற நல்லெண்ணமே அவரை சொகுசுவாழ்க்கையை உதறித்தள்ள வைத்தது.
வெளிநாட்டில் பெரிய நிறுவனமொன்றில் கிடைத்த வேலையை உதறித்தள்ளிவிட்டு கிராமப்புற பள்ளியில் பணிசெய்வதை விரும்பி ஏற்றுக்கொண்டவர் வானதி. 'தட்ஸ் மை சைல்டு' என்ற அமைப்பை நிறுவி IT நிறுவனத்தில் பணிபுரியும் தன் நண்பர்கள், தன்னார்வலர்களின் உதவியுடன் நூற்றுக்கணக்கான பெண்பிள்ளைகளின் உயர்கல்விக் கனவுகளை நனவாக்கி வருகிறார். கிராமத்திலிருந்துகொண்டே தமிழ்நாடு முழுக்க தன்னார்வல உயர்கல்வி நிறுவனங்களின் உதவிகளைப் பெற்றுத்தரும் பெரும்தொண்டினை ஒருநாளும் அவர் விளம்பரப்படுத்திக்கொண்டதேயில்லை. மதுபாலாவிற்கும் அனிதாவிற்கும் ஆறாம்வகுப்பில் வகுப்பாசிரியையாக இருந்து அவர்களுடைய திறமைகள் பலவற்றை வெளிக்கொணர்ந்து அவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தவர் ஆசிரியை வானதி. நான்காண்டுகளானாலும் தற்போது அவள் தன்வகுப்பு மாணவியல்ல எனத்தெரிந்தும் இதோ ஓடோடி வந்துவிட்டார்.. கூட்டுப்புழுவாய் சுருண்டு விம்மிக்கொண்டிருந்த மதுபாலாவின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டு தலைகோதிவிட்டார். நிமிர்ந்து முகம்பார்த்த மதுபாலா அடக்கிவைத்திருந்த அத்தனையையும் அழுகையாய்க் கொட்டினாள். அழுது முடிக்கட்டுமென்று தலைகோதிக் கொண்டிருந்தவர் "மது..என்ன பிரச்சனைனு சொல்லுமா.. என்னால முடிஞ்சத நான் கட்டாயம் செய்யுறேன்.. அழுதா பிரச்சனை தீரவா போகுது..நீ துணிச்சலான புத்திசாலியான பொண்ணு.. எல்லாப் பிரச்சனைக்கும் தீர்வுனு ஒன்னு கண்டிப்பாயிருக்கும். மனச தளரவிடாத.. தைரியமாயிரு. எந்தப் பிரச்சனைனாலும் உங்கூட நான் இருக்கேன்.. நிச்சயம் சரியாய்டும்.." என்ற வானதி ஆசிரியை ஆறுதல்மொழி கேட்டதும் மனசில் புதுத்தெம்பும் துணிச்சலும் பிறந்தது. எழுந்து உட்கார்ந்து கண்ணீரைத் துடைத்துக்கொண்டு காலையில் வீட்டில் நடந்ததையெல்லாம் சொன்னாள்.
"இவ்வளவுதானா.. அசடு.. சாயந்தரம் நா வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட பேசிக்குறேன்.. உங்கம்மாவ எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுனு எனக்கு நல்லாவே தெரியும்.. நீ எதுக்கும் கவலப்படாத.. வா.. எழுந்திரு.. சாப்பிடப்போகலாம்." என்றார் வானதி ஆசிரியை.
வானதி ஆசிரியை வாக்குகொடுத்தால் எப்பாடுபட்டேனும் அதைச் செய்துமுடித்துவிடுவார் என்பதை அவரையறிந்தவர்கள் அனைவரும் நூறு விழுக்காடு உறுதியாக நம்புவார்கள். மாணவப்பிள்ளைகளோ அதற்கும் ஒருபடி மேலதிகம்.. குழப்பம் நீங்கி தெளிவு பிறந்த மகிழ்வில் மதுபாலாவும் தோழி துயர் நீங்கிய நெகிழ்வில் அனிதாவும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டார்கள்.அதில் நன்றியும் நட்பும் பளிச்சிட்டன..
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்