அன்புச்செல்வி சுப்புராஜூ
சிறுகதை வரிசை எண்
# 156
வாக்கு
******
"எம்பேர்ல இருக்கிற இடத்தை விக்கப் போறேன் அக்கா" தம்பி சொன்னதும் திடுக்கிட்டுப் போனாள்.
"ஏன்டா தம்பி, எதாவது கடன் இருந்தாலும் பரவாயில்லை. பாக்கெட்ல மொந்தையா இருக்கிற பணம், இப்ப விழவா... பொறவு விழாவானு எட்டிப் பார்க்குது. இப்பதேன் கல்யாணம் முடிஞ்சிருக்கு, அதுக்குள்ள எதுக்கு விக்கிற" அக்கா கேட்கவும் " அவ கடைய பெரிசாக்க சொல்றா... அதான் " தயங்கியபடியே பதில் சொன்னான்.
"அவ சொன்னா உனக்கெங்க போச்சு புத்தி, இப்ப வர்ற வருமானத்துல சேர்த்து வச்சு பெரிசாக்குங்க, இல்லைனா பேங்க்ல லோன் போடு... மாசாமாசம் கட்டினா கண்ணுக்குத் தெரியாத லோன அடச்சிடலாம். அதுக்காவ தொட்டு இடத்தை விப்பாங்களா... எனக்கு சுத்தமா பிடிக்கலடா"
"பரம்பரை எடத்துல எம்பங்கத்தான விக்குறேன், நீயேன் இம்புட்டு ஆவேசப்படற..." தம்பி கேட்கவும் விக்கித்துப் போனாள்.
"பரம்பரை இடந்தேன், உம் பங்குதேன், உம் பேர்லதா இருக்கு... நானென்ன இல்லைனா சொன்னேன். இப்ப விக்குறதுக்கு அவசியம் ஏதுமில்லை.வர்ற இலாபத்துல கடைய பெரிசாக்கு. இடம் அதுபாட்டுக்கு கெடக்கட்டும். பின்னும் பொறவும் ஒதவுமுனு சொல்றேன்.. அம்மா இருந்திருந்தாலும் இதத்தான் சொல்லும்" செத்துப்போன அம்மாவை துணைக்கழைத்தாள் அவள்.
"நானென்ன சின்னப்பிள்ளையாக்கா, எனக்கு எல்லாந் தெரியும். ஏதோ மூத்தவுகனு ஒரு வார்த்தை சொன்னேன். சரி போயிட்டு வாரேன்" பேசியபடியே தம்பி கெளம்பவும் "ஐயா, செத்த நில்லு, இந்தா ஒரு வாய் சாப்பிட்டு போ" வேகவேகமாக தட்டைக் கழுவி சோறு வைத்தாள்.
தம்பி சாப்பிடும் போதே "அக்கா சொல்லுறேனு கோவப்படாதடா, ஒரு பத்து செண்ட் இடம் மட்டும் நீ வச்சுக்கிட்டு, மீதத்தை வித்துடு ... சரியா?" கெஞ்சலாக கேட்டவளைப் பார்த்து " நா வாக்கு கொடுத்துட்டேன் அக்கா. மீறமாட்டேன், அடுத்த வாரம் ரெஜிஸ்டரேசன்.... என்று வீராப்பாக சொல்லிச் சென்றவன், சொன்னபடியே அடுத்த வாரத்தில் இடத்தை விற்றும் விட்டான்.
தகவல் தெரிந்ததும் அடுத்த நாள் தம்பியைப் பார்க்க அவனின் வீட்டுக்குச் சென்றாள். " வாங்க மதினி, என்ன இம்புட்டு தூரம், நாங்க இடம் வித்ததை மோப்பம் பிடிச்சு, பங்கு கேட்டு வந்துருக்கீங்களோ?" தம்பி மனைவியின் வரவேற்ற அழகில் தயங்கியபடியே வாசலில் நின்று விட்டாள்.
"அவுக வர மத்தியானமாகும். சரி, தண்ணி குடிக்கிறீங்களா.... இப்பனு பார்த்து இந்த சொம்ப வேறக் காணோம்.டம்ளரெல்லாம் கழுவாமல் கெடக்கு. எதுல தண்ணி மோந்து தர தெரியலையே" அங்கவாய்த்த தம்பி மனைவியிடம், எதுவும் வேண்டாமெனத் தலையாட்டி விட்டு வீடு திரும்பினாள்.
அதோடு தம்பி வீடிருக்கும் திசைப் பக்கமே நடப்பதிவ்லை அவள். அதோ... இதோவென்று ஒரு வருடம் கடந்தது. அன்று காலையில் வழமை போல வாசல் தெளிக்க கதவைத் திறந்தவள் திண்ணையில் உட்கார்ந்து இருந்த தம்பியைப் பார்த்து திடுக்கிட்டுப் போனாள்.
"அட... என் ஐயா, இப்படி மெலிஞ்சு போயிட்டயே, மொகமெல்லாம் வாடிக் கெடக்கு... கேட்பாரு... கொள்வாரு யாருமில்லையா? அக்காகாரி நா உசுரோட இருக்கைல வேறு யாரு ஏங் கேட்கணும்? உள்ள வாய்யா... சாப்பிட்டாயா... ?" மூச்சு விடாமல் பேசிக் கொண்டே மளமளவெனச் சமைக்கது தொடங்கினாள் அவள்.
"உம் பேச்சு கேட்டிருக்கணும் அக்கா, பணத்தை எல்லாம் ஆடம்பரமா செலவு செஞ்சு தொலச்சிட்டாள். இப்ப கையில நயாபைசா இல்லை. கடையையும் வித்துட்டாள். நல்லா வாழ்ந்தாச்சு. இப்போ வேறெங்காச்சும் வேலைக்குப் போக நா ரெடியா இருந்தாலும் யாரும் சேர்த்துக்க மாட்டேங்குறாங்க, செத்துப் போலாம் போல இருக்கு" பேசும் பொழுதே அழுது விட்டான்.
"இதுக்கேன்டா அழற, நா இருக்கேன் உனக்கு... என்ன வேணும் சொல்லு. நா செய்யறேன். பழசை நினைக்காத" தாங்கிய அக்காவின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் விட்டான் தம்பி.
அன்புச்செல்வி சுப்புராஜூ
பட்டாபிராம், சென்னை - 72
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்