பட்டியூர் செந்தில்குமார்
சிறுகதை வரிசை எண்
# 155
பட்டியூர் செந்தில்குமார்
சிறுகதை - கூடப்பிறந்தவன்
----—---------—---------------—-----------------------
1
“நாங்க உசுரோட இருக்கோமா செத்துட்டோமா ன்னு பாக்க வந்தீகளா…? தழுதழுத்த குரலில் அழுதுகொண்டே அவனையும், அவனுடைய மனைவியையும் பார்த்துக் கேட்டாள் குருவம்மாள். காரவீட்டின் தார்சாலிலும் தொழுவத்திலும் இருந்த அத்தனை பேரும் அவன் முகத்தையேப் பார்த்தார்கள்.தலையைக் குனிந்துகொண்டு பேசாமல் இருந்தான். அவன் கண்கள், முகமெல்லாம் கோவைப்பழமாக சிவந்திருந்தது. நெற்றியிலிருந்து வழிந்த வியர்வையை கையால் துடைத்துவிட்டு,பேய் அறைந்தது போல் அமர்ந்திருந்தான்.
அவன் மனைவிக்கு இங்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை. குழப்பத்தோடு முழித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அவன் பக்கத்தில்.
“இப்படி ஒரு காரியத்தைச் செய்ற அளவுக்கு உனக்கென்னப்பா கோபம்..அதுக்கு நாலு அடினாலும் அடிச்சிருக்கலாமே..” என்றார் அங்கிருந்தவர்களில் ஒரு பெரியவர்.
“உனக்கும் ஒரு புள்ள இருக்கே… இந்த பச்சமண்ணு என்ன பாவம் செஞ்சது. ஒனக்கு..நாங்க செத்துப்போயிருந்தா ஒன்ன சும்மா உட்ருவாகளா.. அழுதுகொண்டே கையை நீட்டி நீட்டி கேட்டாள் குருவம்மாள். இடுப்பிலிருந்த குழந்தையின் வலது தோள்பட்டையில்
ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு காயம். தோல் கருத்து கொப்புளமாய் வீங்கி உடைந்திருந்தது. அழுது கொண்டே பேசும் தன் அம்மாவின் முகத்தையே பார்த்து வாய் கோணிக்கோணி ஏங்கி சத்தமாய் அழத்தொடங்கியது குழந்தை. அங்கிருந்தவர்கள் எல்லோரும் அந்த அழுகுரல் கேட்டு கண்களில் நீர் கசிய பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
2
ஆடி மாதம். மேல்காற்று புழுதியை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. காலையிலேயே கங்குகளை அள்ளிக் கொட்டியதைப்போல கடுகடுத்த முகத்துடன் வாசலில் பேசாமல் உட்கார்ந்திருந்தான் தங்கராசு.
ஜெயராசு சிலநேரம் பேசும்போது கோபம் வந்தால் வார்த்தைகள் திக்கும். கொத்தி கொத்தி சண்டை போட்ட சேவலின் தலையில் பூ சிவந்து கன்னிப்போய் இருப்பதைப்போல முகம் இருக்கும். அப்படியிருந்தால் அவர் கோபமாக இருக்கிறார் என்று சொல்லிவிடலாம்.
அப்படித்தான் அன்று எதோ கோபத்தில் இருக்கிறான் என்று முகத்தைப் பார்த்து உணர்ந்தவராய் தெருவை நோக்கி வராண்டா தூணில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார் தங்கையா.
வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஆணும் பெண்ணுமாக தெருவில் ஆடு மாடுகளை பத்திக்கொண்டு மேய்ச்சலுக்கு கிளம்பி போனார்கள்.
“என்னடா தங்கராசு...தேரமாகலையா..
யோசனை பண்ணிக்கிட்டே உக்காந்துருக்க… சாப்பிட்டு உழவடிக்க போ... என்று எண்ணெய் தேய்த்த தலையை வாரிக்கொண்டே சொன்னார் அவனது தகப்பனார் தங்கையா
சாரத்தை மடித்துக்கட்டி தலை குனிந்தபடி
சட்டை அணியாத உடம்பில் கழுத்தில் மாலையைப்போல் தூண்டைப் போட்டுக்கொண்டு கல் தூணோடு சாய்ந்து வாசலில் அமர்ந்திருந்த தங்கராசு "வீடு கொடுக்காத ஒங்களுக்குலாம் உழவடிக்க போகனும்மாக்கும்".. என்று சிடுசிடுவென முகத்தில் அறைந்த மாதிரி சொன்னான்.
சீப்பில் இருந்த முடியை எடுத்துக்கொண்டே
“அதான் தை மாசம் வரைக்கும் ஒன்னா இரு ... வெள்ளாமை எடுத்து வீடு கட்டித்தாரேனு சொல்லுதம்ளாடா "... என்று மெதுவான குரலில் சொன்னார்
வீட்டுக்கு முன்னால் தொழுவில் கட்டிக்கிடந்த காளைமாடுகள் நின்றபடியே ஒன்றுக்கொன்று கொம்புகளால் "மடார் ..மடார் "என முட்டி சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது. எதுவும் காதில் விழாதது போல் அமர்ந்திருந்தான் தங்கராசு
தங்கையா வேப்பங்குச்சியால் பல் விலக்கிக்கொண்டே வந்த தங்கராசுவின் அண்ணன் குருசாமியிடம், இந்த மாட்டுக்கு ஒரு கட்டு நாத்து கொண்டு வந்து போடுடா..காடியில கூளம் இல்லாம சண்ட போட்டுக்கிட்டு கிடக்கு..”என்றார்.
குருசாமி நாத்துப்படப்பில் இருந்து ஒரு கட்டு நாத்தை உருவிக்கொண்டு வந்து கட்டை பிரிச்சி காடிக்குள்ள தனித்தனியா ரெண்டு மாட்டுக்கும் உதறி உதறி கூளத்தை போட்டார். "தின்னுங்க" என்று மாடுகளைப் பார்த்துச் சொல்லிவிட்டு தொழுவத்தைவிட்டு வெளியே வந்தார்.
ரெண்டு கையைவும் மாத்தி மாத்தி தூசியை தட்டிவிட்டுக்கொண்டே "ஏலே தங்கராசு.. என்னாச்சில ஒனக்கு ...உழவுக்கு போகலையா... னு கேட்டார்
பதிலுக்கு தங்கையா தை மாசம் வரை பொறுடா... வீடு போட்ருவம் ங்கிறேன்...
கேக்கமடக்கான்". என்றார் குருசாமியிடம்
வாசலில் உட்கார்ந்திருந்த தங்கராசுவைப் பார்த்து ..ஆறு பேருல இன்னும் ரெண்டு பேரு கல்யாணம் முடிக்காம இருக்காங்க..ஒனக்கு மட்டும் பொது வீட்டுல எப்படி பங்கு தர முடியும் இப்பவே... என்றார் குருசாமி கொஞ்சம் குரலை உயர்த்தி.
“எல்லாரும் நல்லா இருக்காங்க…நான் மட்டும்தான் இப்படி இருக்கேன்…உனக்கு வீடு இருக்கு…”னு கெட்டிக்காரத்தனமா சொல்லுதயா ..? என்று ஆவேசப்பட்டான் தங்கராசு.அவன் மூச்சில் அனல் வீசியது."இவன் இப்படி சொல்லிட்டானே… என்கிற மனசுக்குள் ஆத்திரம். இயலாமையின் கொந்தளிப்பு. கோபத்தில் ரத்தமாய் சிவந்திருந்த முகத்தை ஒரு பக்கமாய் திருப்பிக்கொண்டான் தங்கராசு
"எங்களுக்கு நாங்களாத்தானல வீடு கட்டிக்கி்ட்டோம்..வேற யாரு கட்டிகொடுத்தா...?
குருசாமி சொல்ல அண்ணனுக்கும் தம்பிக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்தது.தொழுவத்தில் குறுக்கே சுவருக்கு அடுத்த சமையலறையிலிருந்து ப்பூஊ..ப்பூஊ என்று அம்மாவின் ஊது குழல் சத்தம் கேட்டது
இவர்கள் இருவரும் கடுமையாக பேசி அடிதடி ஆகிவிடுதைப்போல இருந்தது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கையா..
"குருசாமி நீ வீட்டுக்கு போடா… என்றதும் பேசாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து காரவீ்ட்டிற்குப் பின்னால் இருக்கும் தன் கூரை வீட்டைப் பார்த்துப் போனார்.
"ஏலே தங்கராசு நான் சொல்றத சொல்லிட்டேன்"... அதுக்கு மேல உன் பிரியம் போல செஞ்சிக்கோ... என்று வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்து கொண்டு "ரேசன் கடையில மண்ணெண்ணெ ஊத்துதாங்களாம்".. கட்டாரங்குளம் வரை போயிட்டு வந்திருதேன் கருப்பாயி…” என்று பொஞ்சாதிகிட்ட சொல்லிவிட்டு கிளம்பினார் தங்கையா.
உச்சிவெயில், மேல்காத்து புழுதியைச் சுருட்டு வீசியது, தங்கராசு அவன் துணிமணியை எடுத்துக் கொண்டு மனைவியின் ஊருக்கு கிளம்பினான்.
3
ஜெயராசு அவன் மனைவியின் ஊருக்குப்போய்
ஐந்து நாள் கழித்து ஒரு திட்டத்தோடு ஊரிலிருந்து புறப்பட்டான். பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது இரவு ஒன்பது மணி இருக்கும். அதே பேருந்திலிருந்து இறங்கிய இளைஞர்கள் இருவரும் வேகமாக நடந்தார்கள். பெரியவர் ஒருவர் மெதுவாக நடந்து போனார். சாலையோரம் ஒரு மரத்தின் இருளில் குத்துகாலிட்டு சிறுநீர் கழித்தான். செடிகளின் இருளில் சிள்வண்டுகள் இரைச்சல் அதிகமாயிருந்தது. ஒரு பீடியைப் பற்ற வைத்தான். அதற்குள் சிறுது தூரம் இளைஞர்களும், பெரியவரும் கடந்து போய்
விட்டார்கள
பஸ் நிறுத்தத்தின் ஊரில் இருந்து அவன்
ஊருக்கு நான்கு கி.மீ தூரம் காட்டுப் பாதையில் நடந்துதான் போக வேண்டும். அந்த ஊரின் முடிவில் ஒரு நீண்ட ஒடை அவன் ஊரைப் பார்த்து போய் கொண்டிருந்தது. வற்றிய ஓடையின் இரு கரைகளிலும் வளர்ந்திருந்த வேலிமரங்களின் கிளைகள் மேல்காற்றில் உராயும் சத்தம் அவன் காதுக்குள் வந்து இரைச்சலிட்டதைப் போல இருந்தது. ஒடையை கடந்து கரையேறும் பாதைக்கு பக்கத்தில் ஒற்றைப் பனைமரம் ஒரு காய்ந்த ஒலை மட்டை தொங்கியபடி காற்றுக்கு பனை மரத்தை உரசிக்கொண்டே அலைவுறும் சத்தம் வேறு அவனுக்கு “திடுக்’ என்ற பயத்தில் உடம்பு புல்லரித்தது. அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வேகமாக நடந்தான்.
வேலிமரங்களும் உடைமரங்களும் நிறைந்த காட்டிற்குள் கொஞ்ச தூரம் சென்ற ஒற்றையடிப் பாதை மாட்டு வண்டித்தடத்தில் இணைந்தது.
இப்போது இந்த தடத்தில் நடக்கும்போது மேல்காற்றுக்கு கிழக்கு பார்த்து திரும்பி ஒரு பீடியை பற்ற வைத்தான்.புகையை இழுத்து ஊதிக்கொண்டே நடந்தான். ஊரை நெருங்க நெருங்க அவனுக்கு தன் பயம் நீங்கியது.எப்படி தீ வைக்கலாம் என்று யோசித்தான். கம்மாக்கரை
தாண்டினால் ஊருக்குள் சென்றுவிடலாம். ஆனால் அவன் கம்மாக்கரைக்குள்ளே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த இருட்டில் ஒரு வெட்டவெளியில் அமர்ந்தான். தூரத்தில் ஒரு ஆட்காட்டி பறவை சத்தமிட்டுக்கொண்டே அவன் தலைக்கு மேலே பறந்து சென்றது ஊருக்குள் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டது.
கம்மாக்கரையிலிருந்து இறங்கி ஊரைப் பார்த்து நடந்தான். வேலி மரங்கள் அரை பனை உயரத்திற்கு வளர்ந்து தரிசாகக் கிடந்தது கொண்டல் நாயக்கர் புஞ்சை. ஆளு நடமாட்டம் அதிகம் இல்லாத ஒற்றையடிபாதை வழியாக போனால் கார வீட்டிற்கு போய்விடலாம் என எண்ணினான். தோல் செருப்பு போட்டிருந்ததால் பாதையில் கிடந்த முள்மேல் “நெருக்..நெருக்..” என்று மிதித்து நடந்து போனான். ஊருக்கு வடக்கே நாய்கள் குரைத்தன. மேல்காற்றில் வளர்ந்த வேலிமரங்கள் கிழக்காக சாய்ந்து அசையும் போது “மொரு…மொரு”… என்று கிளைகள் உடைவது போல சத்தம் கேட்டது.
ஒரு வழியாக காரவீட்டின் இருண்ட சுவர்பக்கம் நின்று எட்டிப் பார்த்தான்.வீட்டு தார்சாலில் எந்த அனுக்கமும் இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள்.அவன் மெல்ல அடி எடுத்து வைத்து மேற்குபுறம் உள்ள அறைக்குப் போனான். சாத்தி வைத்திருந்த கதவை மெல்ல தள்ளி உள்ளே நுழைந்தான். அறையின் மேற்குப்புறம் மூடியிருந்த கண்ணாடி சன்னலின் வழியாக தெருவிளக்கின் வெளிச்சம் அந்த அறையில் ஓரளவுக்கு வெளிச்சமாக இருந்தது. வடக்கு பார்த்த வாசல் கதவுக்கு இடதுபக்கம் இடுப்பு உயரத்திலிருந்து நான்கு அடி உயரம் நான்கு கதவுகள் வைத்த அந்த காலத்து சன்னல் இருந்தது.அதன் ஓரம் ஒரு சிம்னிவிளக்கு அணைந்திருந்தது. பக்கத்தில் சிம்னியில் படிந்திருக்கும் கரும்புகையை துடைப்பதற்காக ஒரு துணி வைக்கப்பட்டிருந்தது.அதை
இரண்டாகக் கிழித்து ஒரு பாதித்துணியில் விளக்கிலிருந்த மண்ணெண்ணெய்யில் நனைத்து எடுத்து கையில் சுருட்டி வைத்துக் கொண்டான்.யாரும் விழித்துவிடுவார்களோ என்ற அவசரத்தில் கதவருகே வந்து கவனித்தான். தங்கையா, கருப்பாயி, பேரக்குழந்தைகள் என உறக்கத்தில் இருந்தவர்களைக் கவனித்தான். ஒரு பூனையைப் போல மெதுவாக வெளியேறி காரவீட்டின் இருண்ட பகுதியான கிழக்குப் பக்கம் தெற்கேப்பார்த்து நடந்தான்.
காரவீட்டின் பின்புறம்தான் குருசாமியின் கூரை வீடு வடக்கு பார்த்து இருந்தது.அந்த வீட்டின் மேல் காரவீட்டின் நிழல் இருட்டாக விழுந்திருந்தது. இன்னும் சொல்லப்போனால் தெருவிளக்கின் வெளிச்சத்தை உயரமான காரவீடு மறைத்தபடி நின்றது.அந்த இருட்டு அவனுக்கு தீ வைக்க தோதாக அமைந்தது.
கூரைவீட்டின் மேற்கு பக்கம் பெரிய நாத்துபடப்பு இருந்தது. அதிலிருந்து ஒரு ஆளு உயர நாத்துக்கட்டை உருவிக்கொண்டு வந்தான்.
கூரை வீட்டின் பின்புறம் தெற்குப்பக்கம் சுவரோரம் சாய்த்து நாத்துக்கட்டை நிறுத்தினான். அது சரியாக கூரை முகட்டின் ஓலையும் நாத்துக்கட்டின் உயரமும் ஒன்றொடொன்று தொட்டுக்கொண்டிருந்த இடத்தில் மண்ணெண்ணெய் துணியை மெதுவாக திணித்தான்.இரண்டாவது தீக்குச்சியில் தீ பிடித்தது. ஆடி மாதம் என்பதால் மேல்காற்று வேறு அடித்து கொண்டிருந்தது. தீ “சடசட “ என்று எரியத்துவங்கியது. இருட்டு கெசமாகத் இருந்த அந்த பகுதி வெளிச்சமாய் ஆனது. ஊருக்குள்ள இருந்து நாய்கள் குரைத்துக்கொண்டே ஒடிவந்தன.
அங்கிருந்து உடனே அவன் முத்துகருப்பன் களத்துக்குள் புகுந்து தெற்கே பார்த்து குண்டுக்கிழவன் வேலிக்காட்டுக்குள் போகும் ஒத்தையடிப்பாதை வழியாக வேகமாக ஓடினான்.
கூரைவீ்ட்டுக்குள் தரையில் பாய் விரித்து குருவம்மாளும் அவளுடைய ஒரு வயது குழந்தையும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
கூரையின் மேற்புறம் எரிந்து வீட்டின் உள்புறம் “சடார்” என வெடித்த மூங்கில் துண்டு கீழே குழந்தையின் தோள் பட்டையில் விழுந்தவுடன் வீறிட்டு அலறி அழுதது.
பக்கத்தில் நார்க்கட்டிலிருந்து உறங்கிக் கொண்டிருந்த கணவன் குருசாமியை 'எந்திரிங்க... எந்திரிங்க.... என்று கதறி கூப்பாடு போட்டுக்கொண்டு குழந்தையைத் தூக்கினாள்.
உள் தாழ்ப்பாளைத் சரட்டென இழுத்து,கதவை திறந்து வெளியே ஓடினாள்.
குருசாமி நார்க்கட்டிலில் ரெண்டு கைகளையும் ஊன்றி “தங்க்’ என்று தரையில குதித்ததும் கட்டிலில் இருந்த டார்ச்லைட்டை எடுத்தார். கதவு நிலைக்கு மேலே மண்சுவரில் வைத்திருந்த அருவாளை எடுத்துக்கொண்டு இடுப்பிலிருந்த சாரத்தை தார்பாய்ச்சிக்கட்டிக்கொண்டு வெளியே முற்றத்திலிருந்து தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த வீட்டின் பின்பக்கச்சுவரோரம் ஓடி பார்த்தார்.
ஆளு உயரத்துக்கு இருக்கிற ரெண்டு கையால் கட்டிப்பிடிச்சி தூக்குகிற மாதிரி இருக்கிற பெரிய நாத்துக்கட்டு எரிந்து தரையில் குச்சி குச்சியா கரிசல் மண்ணோடு சரிந்து கிடந்தது. அப்போதே தீ பாதி கூரையை சாம்பாலாக்கிவிட்டு பனைவோலையால் வேய்ஞ்ச கூரை ஒரு போல் உயரத்திற்கு எரிந்தது. இடது கையால்
டார்ச்லைட்ட அடித்துக்கொண்டு வலது கையில் அரிவாளை ஓங்கியபடி நாத்துப்படப்பு பக்கம் ஓடி தேடினார்.எந்த அரவமும் இல்லை. ஊருக்குத் தெற்கே களத்துமேட்டு வழியாக ஓடி டிரான்ஸ்பார்மர் வரைக்கும் சாமி வேட்டைக்குப் போனது போல் சுற்றும் முற்றும் பார்த்து ஓடி வந்தார்.எந்த ஆளு நடமாட்டமும் இல்லை.
அதிர்ச்சியில் தூக்கம் கலைந்து அழுது கொண்டிருந்த கைக்குழந்தையை இரண்டு கைகளிலும் ஏந்திக்கொண்டு வடக்காம காரவீட்டைப் பார்த்து ஓடினாள் குருவம்மாள் “யத்தே எந்திரிங்க த்தே... என்று அலறியபடி
சத்தபோட்டு அழுதாள். காரவீட்டு தார்சாலில்
படுத்திருந்த தங்கையாவும் கருப்பாயியும் “என்னம்மா என்னாச்சி “என்று பதறிக்கொண்டு எழுந்தார்கள்.. கருப்பாயி தலைமுடியை கொண்டைப் போட்டுக் கொண்டே எந்திரிச்சி சேலை முந்தானை எடுத்து இடுப்பில் சொருகியபடி ஓடி வந்தாள். தீ ஏரியும் வீட்டைப் பார்த்து இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக்கொண்டே “சண்டாளப்பாவி குடும்பத்தோடு எரிச்சிக் கொல்லப்பாத்தானே” என்று திட்டினாள்.
பக்கத்து வீட்டு பக்கம் ஓடி போய் "ஏம்மா சோலையம்மா… சுடலை எந்திரிச்சி வாங்கடா... குருசாமி வீடு தீ பிடிச்சிருச்சி… எந்திச்சி வாங்கடா “ என்று அலறல் சத்தத்தோடு கதவை தட்டி எழுப்பினாள்
.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து வயதான பெரியவர்களும் சிறுவர்களும் ஆணும் பெண்ணுமாக இளவட்டங்களுமாய் நாலா பக்கமிருந்தும் ஓடி வந்தார்கள்.
அதே நேரம் குண்டுக்கிழவன் வேலிக்காட்டை அடுத்து இருக்கும் உப்போடையை கடந்து விட்டான் தங்கராசு. அங்கிருந்து தெற்கே அஞ்சுபனைத்தாவு கரிசல் காட்டுபக்கம் அந்த நள்ளிரவில் ஒரு டிராக்டர் உழவடித்துக் கொண்டிருந்தது. அதன் தூரத்து விளக்கொளி வெளிச்சத்திற்கு முன்னால் உழவு மண்கட்டிகளுக்கு நடுவே குறுக்கிட்டு ஓடினான்.அந்த வெளிச்சத்திலிருந்து மறைந்து நல்லதண்ணீர் குட்டை பக்கம் போய் நின்று ஊரின் திசையில் வடக்கே திரும்பி பார்த்தான். அவனுக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. தீ ஒரு பனை உயரத்துக்கு பற்றி எரிந்தது
ஊருக்குள் அவரவர் வீட்டிலிருந்து குடங்களிலிருந்த உப்புத்தண்ணீரைக் கொண்டு ஓடிவந்து தீயின் மீது வீசி ஊற்றுவார்கள். ஊர் கிணற்றில் தண்ணீரை இறைத்து இறைத்து குடங்களில் நிரப்பிக் கொண்டிருந்தார்கள். இளவட்டங்கள்.பெண்கள் வரிசையாக தண்ணீர் குடங்களை சுமந்து கொண்டு வந்து இடைவெளியில் மற்றவர்களிடம் கை மாறி கொடுத்தனுப்பியபடி இருந்தார்கள். கூரை வீடு ஒலை என்பதால் வேகமாக மேல்காற்றுக்கு தீ கொழுந்துவிட்டு ஆவேசமாக எரிந்து கொண்டிருந்தது. எவ்வளவு முயன்றும் குடத்து தண்ணீரால் யாராலும் தீயை அணைக்கமுடியவில்லை. தீயின் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருந்தவர்களின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வருவது தெரிந்தது
சிறுவர்கள் தங்களை அறியாமலே கண்ணீர் வழிவதைத் துடைத்துக்கொண்டார்கள்.
தீ எரிவதை அணைக்கமுடியவில்லையே என்று பார்த்து தாங்கமுடியாத துயரத்தில் ஒரு ஓரமாக குத்துகாலிட்டு அமர்ந்திருந்தார் தங்கையா, கருப்பாயி பக்கத்தில் குருசாமியும் குருவம்மாளும் அழுது கொண்டிருந்த குழந்தையை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார்கள்
4
மறுநாள் விடியற்காலை, தீ எரிந்து சாம்பலாகிப் போன வீட்டைப் பார்க்க குருசாமியும் குருவம்மாளும் போனார்கள்.மேல்காற்றுக்கு சாம்பல்கள் பறந்தது. சீதனமாய் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த அம்மி இருந்த இடத்தை ஒரு கம்பால் கிளறினாள். ஈரமாய் ஒட்டியிருந்த சாம்பல்களைக் கம்பால் தள்ளி தள்ளி அப்புறப்படுத்தினாள். இரண்டாக உடைந்து இருந்தது. குழவி்கல்லின் கைப்பிடியின் ஒரு பக்கம் உடைந்து இருந்தது. அதற்கு பக்கத்தில் இருந்த உரல் அதன் அகன்ற வாய் பகுதி ஒரு பக்கம் உடைந்து அதன் உள்பகுதியில் தண்ணீர் சாம்பல் நிறத்தில் தேங்கியிருந்தது. பக்கத்தில் கிடந்த ஒரப்பட்டி துருப்பிடித்து இத்துப் போனது போல் தன் கனம் குறைந்து காட்சியளித்தது..
மண்குடங்கள் எல்லாம் உடைந்து அதன் ஓடுகளில் ஈரம் கலந்த சாம்பல் உறைந்திருந்தது. சுற்றுச்சுவர்கள் கருப்பு நிறத்தில் அந்த வீட்டின் நீள அகல அமைப்பைச் சொல்வது போல் கட்ட மண்ணாக நின்றிருந்தது.
சேலை, துணிமணிகள், ஒரு வயது குழந்தையின் துணிமணிகள் எல்லாம் எரிந்து உருகி பிளாஸ்டிக்கைப் போல் கட்டி கட்டியாகக்
கிடந்தைப் பார்த்தாள். ஆசை ஆசையாய் வாங்கிய பூப்போட்ட சேலைகள் தீயில் ஒன்றுமில்லாமல் போனது.
சமையற்கட்டில் எவர்சில்வர் தட்டுகள்,கிண்ணங்கள், தம்ளர்கள், எல்லாம் கறுத்து ஈத்துபோய் கிடந்தது. சோறு வைத்திருந்த அலுமினிய பாத்திரம் கறுத்து நெளிந்து இருந்தது.குழம்பு பாத்திரம் கவிழ்ந்து வீட்டிற்குள் சிந்தி கரியும் சாம்பலும் கலந்து காட்சியளித்தது. இவற்றையெல்லாம் பார்த்து கண் கலங்கி வழிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டாள் குருவம்மாள்.எதுவும் பேச முடியாமல் அமைதியாக பாத்திரங்களை எடுத்து ஒரு இடத்தில் வைத்தார் குருசாமி. ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்து பாத்திரங்களை ஓரளவுக்கு சாம்பல் போக கழுவி காய வைத்தாள் குருவம்மாள்.
ஏ..குருசாமி எரிஞ்சிபோனதைப் பார்த்துட்டு இருந்தா வேலைக்கு ஆவாதுடா.. சாம்பல், கரிகட்டைய எல்லாம் அள்ளிக் குப்பையில் போட்டுருவம்..இப்படியே கெடந்தா பாக்குறவன் என்ன நெனப்பான்.. இன்ன குருசாமி ..செத்த இரு ..நம்ம வீட்ல இரும்பு சக்கவரட்டி இருக்கு எடுத்துட்டு வாரேன்…என்று கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து தலைப்பாகைக் கட்டிக்கொண்டு போனார் சுடலை
எரிந்து கருப்படைந்துபோன எவர்சில்வர் தட்டுகள், செம்பு, குடங்களை எடுத்துக் கொண்டு காரவீட்டைப் பார்த்து போனாள் குருவம்மாள்.
“தாயோலி…எப்படி வந்து தீயை வைச்சான்” சினத்தோடு சுடலை கேட்டார்
‘சிறுக்கிவிள்ளை நேத்தே கையில கெடச்சிருந்தான்னா கண்டந்துண்டாம வெட்டி எறிஞ்சிருப்பேன்.. “தீ பட்ட மனத்தின் கோபத்தில் சொன்னார் குருசாமி
காரவீட்டிற்குபின்னால் இருந்த வீடு எரிந்ததால் மரச்சன்னல்கள் தீ பிடித்து தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பாதி அறிந்து கரிக்கட்டையாக சன்னல் இருந்தது.
காரவீட்டில் ஊர் நாட்டாமை,பெரியவர்கள்,
உறவுக்காரர்கள் என நிறைய பேர் வந்து தங்கையாவிடம் துக்கம் விசாரிப்பதைப்போல வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
அப்போதுதான் தங்கராசுவும், அவனது மனைவியும் குழந்தையோடு ஊரிலிருந்து வந்திருந்தார்கள்.
கூடியிருந்தவர்கள் இவர்களைப் பார்த்து அமைதியானார்கள். தங்கராசுவுக்கு மனசு படபடவென்று அடித்தது முகம் வியர்த்தது அவன் மனைவிக்கு இங்க என்ன நடந்தது எனப்புரியாமல் திகைத்துப்போய் இருந்தாள்.
“என்ன குருவம்மாள்.. பச்சப்புள்ளய வைதுக்கிட்டு இருக்க… அதுக்கென்ன தெரியும்..அவ அழுவப் போய்தான் நீங்க புருசனும் பொண்டாட்டியும் முழிச்சிப் பாத்தீக..அவ அழுவாம இருந்திருந்தா மேக்கூரை எரிஞ்சி விழுந்து அமுக்கிருக்கும்ளா ஒங்களை…
அப்பா அம்மாவை பார்க்கனும்.. அநாதை பிள்ளையா ஆயிரக்கூடாதுனுதான்..அவ ஒங்களுக்கு தெய்வமாக அழுது எழுப்பி காப்பாத்தியிருக்கா.. பிள்ளையக் கொண்டா இங்க “ என்று சத்தம் போட்டுக்கொண்டே குழந்தையை வாங்கினாள் சோலையம்மாள்.
குருசாமி ,தங்கராசுவைப் பார்த்து நாத்து படப்புல இருந்து நீதாம்ல காளமாட்டுக்கு தெனமும் நாத்து கூளத்தை உருவிட்டு வந்து போடுவ… நாத்துகட்டு எரிஞ்சிகிடந்தப்பவே நீதான் வீட்டுக்கு தீயை வச்சிருப்பேன்னு படப்புக்காரயும், களத்துமேட்லயும் ஓடிப்போய் தேடினேன். ஓடிட்ட கையில கெடக்காம கண்ணை மறைச்சிட்டு.
“இப்ப புருஷனும் பொண்டாட்டியும் நல்லபுள்ளயாட்டம் ஊருக்கு வந்திருக்கீகளாக்கும்.. என்று ஆவேசமாகத் திட்டினார்
நேத்து நைட் எல்லாம் அங்க எங்க ஊர்லதான இருந்தாரு எங்கவூட்டுக்காரு.. திட்டாம் தரமா குத்தம் சொல்லாதீக..என்றாள் தங்கராசுவின் மனைவி.
அமைதியாக இருந்தான் திகைத்துப்போய் தங்கராசு முகமெல்லாம் வியர்த்துபோய்.. ஏல்லாம் கண்டுபிடித்துவிட்டார்களே என்று ஊமையாய்.
இங்க காரவீட்ல சிம்னிவிளக்கிலருந்து துணியில மண்ணெண்ணெய்ய நனைச்சி எடுத்துட்டு போயிருக்க…
அவசரத்துல மண்ணெண்ணெய் சிந்தி சுவர்ல கீழ வழிஞ்சிருக்கு…
கரிய துடைக்க வச்சிருந்த துணி கிழிஞ்சி இருக்கு…
இதல்லாம் பண்ணனும்னா உன்னத் தவுர வேற ஊர்ல இருந்தா எவனும் கட்டுச் சோறு கட்டிக்கிட்டு வாரான்.. என்றாள் கருப்பாயி. தங்கராசுவைப் பார்த்து
எதுவும் பேசவில்லை அவன். பேசாமலே அவன் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதாக அங்கிருந்தவர்கள் எல்லாரும் புரிந்துகொண்டார்கள்
வீடு தீ எரிந்துவிட்ட தகவலறிந்து ஊருக்கு வந்திருந்த குருவம்மாளின் தம்பிக்கு பயங்கரமான கோபம். அந்த கூட்டத்திலிருந்து தீடீரென தங்கராசுவை நோக்கி பாய்ந்து வந்தார். அங்கிருந்த பெண்பிள்ளைகள் தடுத்தனர்.
அவன்தான் தீயை வச்சான்னு தெரிஞ்சு போச்சி..கோவத்துல அவன அடிச்சி ஒன்னுல்லாட்டவொன்னு ஆயிப்போச்சினா
பிரச்சனை இன்னும் பெருசாயிரும்யா… என்று சத்தம்போட்டுப் பிடித்து நிறுத்தினார் சுடலை..
தங்கையா “அவனை ஒன்னும் சொல்ல வேண்டாம்டா குருசாமி… அவன் தப்பு செஞ்சிட்டான்… என்றார். தகப்பனார் சொன்னதுக்கப்புறம் முகம் சுருங்கி தலையை குனிந்தபடி எதுவும் பேசாமல் கோபத்தை அடக்கிக்கொண்டு அதை வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தார் குருசாமி
ஏலே… தங்கராசு…ஒரு நிமிஷம் கூட இங்கின இருக்கக்கூடாது…ஒன் பொண்டாட்டி பிள்ளைய கூப்புட்டுகிட்டு போல…போற இடத்துலயாச்சும் மப்புப் பண்ணாமா இருந்து காலத்தை கழி.. என்று அவனைப் பார்த்து சத்தம்போட்டு அதட்டினார் தங்கையா.
அவன் மனைவி, குழந்தையைத் தூக்கிக்
கொண்டு “வாங்க போவம்..” அவனை கோபத்தில் முறைத்துக்கொண்டு சத்தமாகச் சொன்னாள்.
எதுவுமே பேசாமால் அவள் பின்னால் தலையை குனிந்தபடிய எழுந்து நடந்தான் தங்கராசு.
மேல்காற்று புழுதியை அள்ளி வீசியது.
வலது கையால் அவன் முகத்தை மறைத்துக்
கொண்டே கிழக்கே நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கிருந்த அத்தனை பேரும் அமைதியாக இருந்தார்கள்.இதையெல்லாம் கவனித்துக்கொண்டு இருந்த தங்கையாவின் பேரன் தார்சாலில் எதுவும் பேசாமல் அமைதியா உட்கார்ந்திருந்த குருசாமியைப் பார்த்து “என்ன சித்தப்பா நீங்க அவர ஒன்னுமே சொல்லல…” என்று ஆதங்கத்தோடு கேட்டான்.
“பெரியாளுக பேசிட்டுருக்கும்போது, ஊட ஏன் பேசுற.. நீ சும்ம இருடா..” என்றார்கள் பெரியவர்கள்.
குருசாமி தலையை நிமிர்த்தி செந்திவேலை பார்த்து கண்களில் கண்ணீர் முட்ட துண்டால் துடைத்துக்கொண்டே “என்னடா செய்ய.? எங்கூடப்பிறந்துட்டானே அவன் ” என்றார்.

படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்