யாழிசைசெல்வா
சிறுகதை வரிசை எண்
# 154
தாய்மாமன் சீர்வரிசை
========================
ஏண்டி காளியம்மா.... அப்படி உள்ளார என்னாடி பண்ணிட்டு இருக்க...? நானும் பாத்துக்கிட்டே இருக்கேன் ரொம்ப நேரமா... விடிய விடிய உள்ளார கிடந்து மாத்தி மாத்தி உருட்டிக்கிட்டு இருந்த... எப்பத் தண்டி முடியும்....? ஏண்டி... நான் சொல்றது உன் காதுல கேக்குதா இல்லையா? இல்ல அவ பாட்டு கத்திக்கிட்டு இருக்கட்டும்னு உன் பாட்டுக்கு உள்ளார இருக்கியா?"
"இப்ப எதுக்கு வெளியே கிடந்து கத்துக்கிட்டு கெடக்க? எப்ப பாரு எதையாவது சொல்லிக்கிட்டே இருப்பியா? என்ன கொஞ்சம் என்னுடைய வேலையைப் பார்க்க விடேன். நானே ஏத எங்க வச்சேன்னு தெரியாம திக்கு தெரியாம அலைஞ்சுகிட்டு இருக்கேன். இதுல இடையில ஒருத்தன் கொடையறேன்னு கெடந்து நீ என்னை வாட்டி வதைக்கிறாயா? பேசாம அந்த பக்கம் ஒக்காந்து வெத்தலய எடுத்து மென்னுட்டு திரி!" வட சட்டியில் போட்ட கடுகு மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டு வீட்டுக்கு உள்ளாரா போயிட்டா காளியம்மா.
செல்லம்மாளோட ஒரே மக தான் காளியம்மா. இந்த ஆவணி வந்தா இருபத்திரண்டு வயசு ஆகப்போகுது. சொந்த மாமன் மகனனக் கல்யாணம் கட்டிகிட்டா. கருகருன்னு கருநாகம் போல நீண்ட தலை முடிய கோடாலி கொண்ட போட்டு கிட்டு, தரையில் பரவிக்கிட்டு இருந்த சேலையை தூக்கி முட்டிக்காலுக்கு மேல சொருகிக்கிட்டு அரக்க பறக்க வீடு முழுவதும் பரவிக் கிடந்த பொருள்களை நோக்கிப் போய்க் கொண்டிருந்தா. மாநிறம், அவ்வளவா அதிக சத்துமில்லாமல் ஒல்லியும் இல்லாம நடுத்தரமா பார்க்க லட்சணமா இருப்பா. பன்னிரண்டாவதுக்கு மேல படிக்கல. வீட்டு வேலை தோட்டத்து வேலைன்னு பம்பரமா சுழலண்டு கிட்டு எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத பொம்பள தான் காளியம்மா! எதையும் தாட்டியம்ம செஞ்சு முடிக்கிற திறமை கொண்டவதேன் காளியம்மா! இந்த சின்ன வயசுல இவளுக்கு எவ்வளவு தைரியம் பாருன்னு அடிக்கடி ஊருக்குள்ள பேசிக்குவாங்க.
தள்ளாத வயதில் அசைந்து அசைந்து வரும் தேர் போல வீட்டுக்குள்ளார வந்து தன்னோட மகளே உத்து பார்த்துக் கொண்டிருந்தா செல்லம்மா!
"தாயி.... இன்னும் எத்தனை நேரம் டி பார்த்துகிட்டு இருப்ப! திரும்பத் திரும்ப பார்த்தாலும் இருக்கிறது தாண்டி இருக்கும்! அதுக்கு மேல என்ன செய்ய முடியும்! நமக்கு என்ன முடியுமோ அதை மட்டும் செய்! அதுக்கு மேல நடக்கிறது எல்லாம் நடக்கட்டும்!" என தன் மகள் காளியம்மா கிட்ட போன செல்லம்மா அவ தலையை கோதிவிட்டுக் கொண்டே சொன்னாள்!
"ஏம்மா.... கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கறியே. இப்பதானே சொன்னேன். கொஞ்ச நேரம் திண்ணையில் உட்கார்ந்து உன் பாட்டுக்கு வெத்தலையை போட்டுக்கிட்டு இருனு சொல்லிட்டு உள்ளார வந்தேன்! அதுக்குள்ளே நீ மறுபடியும் வந்து பழைய குருடி கதவத் தொரடினு ஆரம்பிக்கிறாயே... கொஞ்சம் கூட புரிஞ்சுக்க மாட்டேங்கிறியே...."என செல்லமாளைப் பார்த்துக் கூறினாள் காளியம்மா!
"நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற.... இதெல்லாம் எங்க கொண்டு போயி முடியப் போகுதோ.... கடைசியில நீ தனே கஷ்டப்பட்டுகிட்டு இருப்ப? அதை எப்படி நான் பார்த்துகிட்டு நிக்க முடியும்.... ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு கருவேப்பிலை கொத்து மாதிரி நான் வச்சிருக்கேன்! எம் மனசு கெடந்து அடிச்சிக்குதடி...."
"பேசாம போயிரு அந்த பக்கம். நான் எத்தனை தான் சொன்னாலும் நீ கேட்க மாட்டேங்கிற... எனக்கு ரொம்ப லேட் ஆயிடுச்சுன்னு கடுப்புல இருக்கேன். நீ வேற வந்து என்னை வெறுப்பேத்தாம போயிடு...."
தான் பக்கத்துல கடந்த நோட்டை எடுத்து அதுல எழுதி வச்சிருந்த லிஸ்ட பார்த்துகிட்டு இருந்தவ மறுபடியும் அங்கு இருந்த பொருள்கள் எல்லாம் உத்து பார்த்துக்கிட்டே இருந்தா. என்ன நெனச்சாலோ தெரியல விடு விடுனு வாசல நோக்கி வெளியே வந்தவ "நீ போயி மாரியம்மா அக்கா வீட்ல கொடுத்து இருக்க பழங்கள் எல்லாத்தையும் வாங்கிக் கொண்டு வந்து அத எல்லாத்தையும் உள்ளார வச்சிருக்க பையுல போட்டு வை"எனச் சொல்லிவிட்டு மீண்டும் வீட்டுக்குள்ள நுழைஞ்சா.
"ஏண்டி... கருப்பாய்கிட்ட பணம் கேட்டிருந்தியே அதை வாங்கிட்டியா...?"என்றாள் செல்லம்மா தன் மகளைப் பார்த்து.
"என்ன பெத்தவளே! நல்ல வேலை ஞாபகப்படுத்தின. மாரியம்மா அக்கா வீட்டுக்கு போய் பழங்கள் வாங்கிட்டு அப்படியே மறக்காம வார வழியில கருப்பாயி அக்கா வீட்ல போயி பணத்தையும் வாங்கிட்டு வந்துரு" என செல்லமாவைப் பார்த்து கூறிவிட்டு வீட்டுக்குள் போய்ட்டா காளியம்மா.
வாசலில் கட்டி இருந்த கன்னுக்குட்டி துள்ளித் துள்ளி விளையாண்டுக்கிட்டு இருந்துச்சு. அப்ப வீட்டுக்குள்ள இருந்து வெளியே வந்த மாரியம்மா "என்ன சின்னம்மா! தங்கச்சி காசு வாங்கிட்டு வர சொல்லுச்சாக்கும். நானே வரலாம்னு இருந்தேன்! அதுக்குள்ளார நீயே வந்துட்ட. ஏன் அப்படி கடந்து மூச்சு வாங்குகிறே! இந்த வயசான காலத்துல பெசாம வீட்டில் உட்கார வேண்டியதுதானே!"என்றாள்.
"என்ன எங்கடி உக்கார விடுற உன் தங்கச்சி! விடிய விடிய விட்டுக் கொள்ளாத கெடந்து பூணை உருட்டுற மாதிரி உருட்டிக்கிட்டே திரியுறா. சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா. நான் என்ன செய்ய முடியும் சொல்லு?"
"சரி விடு சின்னம்மா! யாருக்கு செய்றா... எல்லாம் உன் அண்ணன் மக விசேஷத்துக்கு தானே செய்றா. ஏதோ ஊர்க்காரிக்கு செய்யற மாதிரி இப்படி பேசுற. இதெல்லாம் நல்லாவ இருக்கு? "
"நல்ல அண்ணே மகடி... அந்த வீணா போன பையலுக்கு என் புள்ளையை கொடுத்தாலும் கொடுத்தேன் ஒரு நாள் கூட என் புள்ள நிம்மதியா ஒரு வா சோறு உட்கார்ந்து தின்னதில்லை. மாஞ்சி மாஞ்சி வேலை பாக்குறா . நேரத்துக்கு சோறு தண்ணி சாப்பிட மாட்டேங்குறா. ஆனாலும் அவ கஷ்டம் பாடு குறைஞ்ச மாதிரி தெரியல. இதுல அவள் சத்திக்கு மீறி தேவையில்லாம இழுத்து போட்டு அத்தனையும் செய்யுறா.... சொன்னா எங்க கேக்குறா...."
"நீதான சின்னம்மா, என் புள்ளைய ஏன் அண்ணன் மகனுக்குக்தான் தருவேன். வேற யாருக்கும் தர மாட்டேன்னு ஒரேடியா வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு. வாரவங்ககிட்ட எல்லாம் அடிச்சு பேசி விரட்டி விட்டுட்ட. இப்ப என்னடா என்றால் இப்படி கிடந்து அழுத்துகிற"
"நீ சொல்றதெல்லாம் வாஸ்துவந்தாண்டி.... அப்படியே ஒப்புக்கிறேன். அன்னைக்கு என்னவோ கூறுகெட்ட சிறுக்கி மாதிரி ஒரு முறுக்குல பேசிட்டேன். என் மக இப்படிக் கடந்து கஷ்டப்படுவானு தெரிஞ்சிருந்தா சத்தியமா நான் பொண்னு கொடுத்திருக்க மாட்டேன்டி. எல்லாம் என் தலையெழுத்து. நான் செஞ்ச பாவத்துல என் புள்ள கடந்து கஷ்டப்படுறா.... "என பொங்கி வந்த கண்ணீரை முந்தானை சேலயால் துடைத்துக் கொண்டு பேசிக்கிட்டு இருந்தா செல்லம்மா.
"விடு சின்னம்மா. உன் மருமகன் நல்ல பையன் தானே. எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டுன்னு கடந்து பாடுபடுறான். இந்த மாதிரி மாப்பிள்ளை யாருக்கு அமையும். இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு தானே உன் புள்ளைய உன் அண்ணன் மகனுக்கு கட்டி வச்சே. இப்ப என்னடானா இப்படி பேசுற"
"அந்தப் பையன் நல்லவன் தாண்டி. யாரும் இல்லைன்னு சொன்னா. அதுக்காண்டி அவன் தங்கச்சிக்கு இத்தனை கஷ்டப்பட்டு சீர் செய்யணும்னு தலையில இருக்கா என்ன? இருக்கத வச்சு செஞ்சா போதாதா....? எதுக்காக இப்படி ஊரெல்லாம் கடன உடன வாங்கி அப்படியெல்லாம் சீர் செய்யணும்னு எதுவும் இருக்கா என்ன? அத சொன்னா எங்க புரிஞ்சுக்கரா...."
"உனக்கு தெரியாதா சின்னம்மா. ஊர்ல எத்தனை பேரு சீர் கொண்டு போனாலும் தாய்மாமே சீர் மாதிரி வேற ஒன்னு வருமா என்ன? அதைச் செய்யறதுக்கும் ஒரு தாட்டியும் வேணும். ஊரு முன்னால நம்ம மரியாதையை விட்டுக் கொடுக்கிற முடியுமா என்ன? இதை சரியா செய்யாம விட்டுட்டா ஊருக்குள்ளற தலைநிமிர்ந்து நடக்க முடியுமா என்ன? "
"ஊரு என்னடி ஊரு..... நம்ம வாழ்ந்தாலும் ஏசும் , தாழ்ந்தாலும் ஏசும்... இந்த மானங்கெட்ட ஊருக்காக எதையாவது பண்ணி வச்சிட்டு.... காலமெல்லாம் கடந்து கஷ்டப்பட போறது என் புள்ள தானே.... அதை எப்படி நான் பார்த்துக்கிட்டு நிக்க முடியும்..."
"நீ சொல்றதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது.... ஆனாலும் இது ஊறு சனம் ஏத்துக்குமா....ம்ம்... சரி இரு... நான் உள்ளார போய் பணம் எடுத்துட்டு வந்து தாரேன்"என்றவள் வீட்டுக்குள் போனா மாரியம்மாள்.
மடிப்பு கலையாத நோட்டுக்களை எண்ணி கட்டு கட்டாக மஞ்சப்பைக்குள் வைத்துக் கொண்டு வாசலை தாண்டி வெளியே வந்து செல்லம்மா கையில் கொடுத்துவிட்டு"சின்னம்மா மறக்காம மாசம் பிறந்ததுமே வட்டி வந்துரும்னு சொல்லிரு. இல்லாட்டி உன் மருமகன் கிடந்து சலம்பிக்கிட்டு திரிவாப்புல... பெறகு சொந்தக்காரங்களுக்குள்ள சடவா போய்டும் "என சிரித்துக் கொண்டே கூறினாள்.
"சரிடி அம்மா! உனக்கு எந்த கஷ்டமும் வராமல் மாசம் பிறந்த உடனே எப்படியாவது கொண்டு வந்து வட்டியைக் கொடுக்கச் சொல்கிறேன் தாயி. சரி வாரேன். அங்கு அவ ஒருத்தியாக் கெடந்து கஷ்டப்பட்டு கேட்டு இருப்பா..."என சொல்லிக்கொண்டே தள்ளாத வயதிலும் மஞ்சப்பையை மடியில் கட்டிக்கொண்டு வீட்டை நோக்கி கொண்டிருந்தாள்.
சிறகுமொளச்ச பட்டு பூச்சிப் போல பட்டுச்சேலைகட்டி எதுக்கே வந்து கொண்டிருந்தாள் காளியம்மா.
"ஏம்மா.... உன்கிட்ட ஒரு வேலையை சொன்னா..... சீக்கிரமா செய்ற பழக்கமே கிடையாதா?"எனக் கூறிக்கொண்டே தன் தாய் அருகே வந்தாள் காளியம்மாள்.
"என்ன என்னடி பண்ண சொல்ற? வயசான காலத்துல என்னால முடிஞ்ச வரைக்கும் தானே நடந்து போக முடியும்"
"பணம் வாங்கிட்டியா?"
"அதெல்லாம் வாங்கிட்டேன் டி! ஆனா மனசு கடந்து தான் அடிச்சிக்குது! அந்த மாரியம்மா மாசமான வட்டி கரெக்டா கொடுத்திரணுமா. அப்படி தரல்லைனா அவளோட புருஷன் கடந்து சலம்புவானு இவளாவே சொல்லிக்கிறாடி. இதெல்லாம் உனக்கு தேவைதானாடி. கண்டவக் கிட்ட எல்லாம் கெடந்து அசிங்கப்படணும்னு உனக்கு என்ன தலையிலயா எழுதி இருக்கு!" என தன் மகளைப் பார்த்து வாஞ்சையோடு கூறினாள் செல்லம்மா.
"பணம் கொடுத்தவங்க அப்படித்தான்மா பேசுவாங்க. இதெல்லாம் உனக்கு தெரியாதா என்ன? ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுகிறியே. அதை விடு. வா வீட்டுக்கு போகலாம் நேரம் ஆயிருச்சு" என பேசிக்கொண்டு வீட்ட நோக்கி அவர் இருந்தார்கள்.
பூந்தோட்டமே மொத்தமாக பெயர்த்து எடுத்து வாசலில் கொட்டியது போல் வண்ண வண்ண சேலைகளில் கூட்டமாக பெண்கள் காளியம்மா வாசலில் கூடியிருந்தார்கள்.
"எல்லாரும் வந்துட்டாங்கம்மா. வெரசா போய் நீயும் கிளம்பி வா"எனது தன் தாயைப் பார்த்து கூறிவிட்டு அங்கு கூடியிருந்த பெண்களை நோக்கி நகர்ந்தாள் காளியம்மாள்.
"என்ன காளியம்மா ஒரே தடபுடல செய்யுற பொறுக்க. நாத்துனா அமைஞ்சா உன்ன மாதிரி அமையனும்னு ஊரெல்லாம் உன்ன பத்தி தான் பேச்சா கிடக்கு! தாட்டியம்மா எல்லாத்தையும் செஞ்சி சாதிச்சுக் காட்டிப்புட்டையே "என்றாள் கூட்டத்தில் ஒருத்தி.
"தேர் கிளம்பறது முக்கியமில்லடி. அது ஊரெல்லாம் சுத்தி எந்தப் பொல்லாப்பும் இல்லாம திரும்பவும் புறப்பட்ட இடத்துக்கு வந்து சேரணும் அதுல தாண்டி அதோட அழகு இருக்கு! இப்பவே திருஷ்டி கழிச்சாப்லே பேசினா எப்படி?"என்றாள் அவள் அருகே இருந்த மற்றொருத்தி.
அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எல்லாரும் வந்து ஆளுக்கு ஒரு தட்டா எடுத்துக்கிட்டு கிளம்புங்க"கூடியிருந்த பெண்களைப் பார்த்துக் கூறினாள் காளியம்மாள்.
உணவைத் தேடிச் செல்லும் எறும்புக் கூட்டம் போல் சாரை சாரையாக வீட்டுக்குள் சென்ற பெண்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு தட்டாக எடுத்துக் கொண்டு திருவிழா தேர் போல் அசைந்தாடி கிளம்பத் தயாரானார்கள். செல்லமாவும் அதற்குள் கிளம்பி வாசலுக்கு வந்து விட்டிருந்தாள்.
" டிடும் டிடும்" என மேளச் சத்தம் வானைப் பிளந்து கொண்டும் அதற்கு இணையாக நாதமும் வாசித்துக் கொண்டு வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு முன்பாக அய்யனார் பட்டு வேட்டி சட்டையில் ஊருக்கு வெளியே நிற்கும் கருப்புசாமி போல் கையை வீசிக்கொண்டு முன்னால் வந்து கொண்டிருந்தான்.
"வந்துட்டீங்களா.... எங்கடா இன்னும் ஆளக் காணோமேனு பாத்துக்கிட்டு இருந்தேன்! கரெக்டா சரியான நேரத்துக்கு வந்து சேர்ந்துட்டீங்க.... மத்த ஏற்பாடு எல்லாம் பாத்துட்டீங்கல்லெ.... இங்க என்னால முடிஞ்சா எல்லாத்தையும் ரெடி பண்ணிட்டேன். நீங்க சொன்னா புறப்பட வேண்டியதுதான்"தன் புருஷன் அய்யனாரை பார்த்துக் கேட்டால் காளியம்மாள்.
"புறப்பட வேண்டியது தான் காளி. நீ சொன்ன மாதிரி எல்லாத்தையுமே ரெடி பண்ணிட்டேன். சரி வாங்க போகலாம்" எனக் கூறியபடி அய்யனாரும் காளியம்மாவும் முன்னால் நடந்து கொண்டிருந்தார்கள்.
அடுத்த வீதியில்தான் விசேஷ வீடு. மைக் செட்டில் இளையராஜாவின் இசை காற்றைத் துளைத்துக் கொண்டு பரவி வரும் தென்றல் போல் இனிமையாக வழிந்து கொண்டிருந்தது!
ஏற்கனவே வந்திருந்த அத்தனை பேரும் தாய் மாமன் சீர்வரிசையை பார்ப்பதற்காக வீட்டின் வாசலில் தெரு முனையை வெறித்துப்பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.
அப்போது டிடும் டிடும் மென வெளுத்து வாங்கிக் கொண்டு மேளக்காரர்கள் வாசிக்க அதற்குப் பக்க வாத்தியமாக நாதம் பொழிந்து தள்ளிக் கொண்டிருந்தது. மேளச் சத்தத்தின் ஓசையால் ஒலித்துக் கொண்டிருந்தா மைக் செட் அணைக்கப்பட்டு இருந்தது! தெருவின் முனையைக் கடந்ததும் அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து ஒருவன் முன்னாள் வந்து பையில் இருந்த நீண்ட பத்தாயிரம் வாலா பட்டாசை தெருவை நோக்கி உருட்டி விட்டு அதன் திரியை பற்ற வைத்ததும் மின்னலைக் கிழிக்கும் ஓசையுடன் பட்டாசு வெடிக்க தொடங்கியது.
சில நிமிடங்கள் காற்றில் கரைந்து ஓசை அடங்கியதும் அய்யனார் மற்றும் காளியம்மாள் அவள் தாய் செல்லம்மாள் ஆகியோர் முன்னால் வர மற்ற பெண்கள் அதனைத் தொடர்ந்து விசேசவீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
விசேஷ வீட்டின் வாசலிலிருந்த பெண்களில் நடு வயதைக் கடந்திருந்த குட்டையாகவும் இருந்ததோடு பக்கவாட்டில் வளர்ந்திருந்த பெண்மணி "அடேங்கப்பா. இது என்னடி பெரிய கூத்தா இருக்கு. நூறு தட்டுக்கு மேல் இருக்கும் மேல இருக்கும் போல இருக்கே. பாக்குறவங்களெல்லாம் வாய பிளக்குற மாதிரிலே இருக்கு.... எத்தனை வகையான பழங்கள் இருக்குமோ அத்தனையும் இருக்கு. போதும் போதாக்குறைக்கு சட்ட துணிமணிக மட்டுமே பத்து தட்டுக்கு மேல இருக்கும் போல இருக்கு. அதுவும் இல்லாம நகை நட்டு, காசு, பணம் எல்லாமே பெரிய டாப்பு ஜோலியாவுல இருக்கு. ஓவர் பவுசா இருக்கே. இப்படி எல்லாம் கிளம்பி வந்தா இல்லாத பட்டவர்கள் எல்லாம் எங்க போய் முட்டிக்கிறது" முதலை வாயை பிளந்தது போல் அந்த பெண்மணி திறந்த வாயை மூடாமல் பேசிக் கண்டே இருந்தார்.
வாசலில் இருந்து வரவேற்பதற்கு எந்த நாதியும் இல்லை.
சீர்வரிசை மொத்தமும் வீட்டின் பட்டா சலையில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பார்க்கும் ஊர்சனம் அனைத்தும் மெச்சுக்கொட்டி பேசிக் கொண்டிருந்தது.
"அதன் தாய் மாமன் சீர் கொண்டு வந்துட்டாருலெப்பா பெறகென்ன முதல்ல அவர மொய் எழுதச் சொல்லிட்டு சட்டுபுட்டுனு சோத்தை போடுங்கய்யா. இன்னும் எத்தனை நேரம் தான் காத்துக் கெடக்கிறது. உள்ளார இருந்து வெள்ளாட்டம் கறிக் கொழம்பு எப்ப வந்து என்ன ரசிச்சு கடிச்சுத் திண்பான்னு ரொம்ப நேரமா கூப்பிட்டுக்கிட்டே இருக்குப்பா...." என்றார் அங்கு கூடி இருந்த கூட்டத்திலுள்ள முறுக்கு மீசை மனிதன்.
"ஏண்டா.... கஞ்சிக்கு செத்த பயலாட்டம் நாக்கதொங்கப் போட்டுக்கிட்டு இப்படி முன்னால வந்து துடிச்சுக்கிட்டு நிக்கிறீங்க.... யேன் மகளோட சொத்தை அழிக்கிறதுக்கே பொறப்பெடுத்து வந்தீங்களா.... பேசாம போயிருங்க.... யேன் வாயில வேற மாதிரி வந்துரும்...."என சுர்ருன்னு கடிச்சு சுள்ளெறும்பு பாட்டம் எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் சோலையம்மாள்.
"இப்ப எதுக்கு மேல விழுந்து புடுங்கி திங்கிற மாதிரி எல்லாரையும் வெரசிக்கிட்டு இருக்க?"என்றான் அய்யனார்.
"ஆமாண்டா.... நீ கொண்டு வர்ற சீர்வருசையா வச்சுத்தான் யேன் மக வாழனும்னு இல்ல.... யாருக்கு வேணும் பத்து காசு பெறாத இந்த சீர்வரிசை"என்று பொறிந்தாள் சோலையம்மா.
"என்ன சின்னம்மா இப்படி சொல்லுற. அண்ணன் கொண்டு வந்த சீர்வரிசை மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா.... சட்ட துணிமணி இல்லாம, அஞ்சு லட்ச ரூபாநகை நட்டு, பண்டபாத்திரம், கருப்பு வெள்ளாடு, இரண்டு லட்ச ரூபாய் மொய் என அத்தனையும் பத்தாதுன்னு வேட்டு வெடி மேல தாளம்னு ஊரே அமர்க்களம் படற மாதிரி செஞ்சுபுட்டாருலெ.... நீ என்னோடனா.... இங்க இப்படி கடந்து கொதிக்கிற...."என்றான் கூட்டத்திலிருந்து வெளியே வந்த அய்யனாரின் சித்தி மகன் பாண்டியன்.
"அட போடா வெறும் பயலே. உனக்கு வேணும்னா இது ஒசத்தியா இருக்கலாம். இது எல்லாம் என் மகன் முன்னாடி கால் தூசிக்கு பெறாது. பத்து காசு பெறாத இதை எல்லாத்தையும் எடுத்துட்டு ஓடிப் போயிடுங்க. இத வச்சுட்டு மேன் மக வாழனும்னு இந்த அவசியமும் இல்லை. என் மருமகனோட சொத்தே கோடிக்கணக்கில் இருக்கு" என இளக்காரமாக பேசினால் சோலையம்மாள்.
"ஏன் சித்தி. தெரியாம தான் கேட்கிறேன் உன் மகன் தானே அய்யனாரு. கொஞ்சம் கூட மகேங்கிற பாசம் இல்லாம ஒரேடியா மருமகனைத் தூக்கி வச்சு கொண்டாடுகிறேயே. பணத்துக்கு முன்னால மக்க மனசங்க எல்லாம் ஒன்னும் இல்லாம போயிருச்சு இல்ல... இத்தனை சீர் செனத்திய நம்ம வகையறா யாராவது இதுக்கு முன்னால கொண்டு வந்து இருக்காங்களா.... வாய் இருக்குன்னு பேசிக்கிட்டு இருக்க.... இதெல்லாம் நல்லா தெரியலே...."என்றான் பாண்டியன்.
"ஏன்டா.... பிச்சைக்கார பயல்கள எல்லாத்தையும் ஏவி விட்டு என் மகளோட விசேஷத்தை கேவலப்படுத்துவதற்கே கூட்டத்தை கூட்டி வந்து இருக்கியா. நீ எல்லாம் வரலைன்னு யாருடா அழுதா... மரியாதையா எல்லாத்தையும் அள்ளிக்கிட்டு ஓடிப் போயிருங்க.... இந்த குப்பைகள் எல்லாம் என் மகளோட வீட்டு அடைச்சுக்கிட்டு பெரிய தொந்தரவு இருக்கு" என படபடவென மூஞ்சியில் அடித்த மாதிரி பேசினாள் சோலையம்மாள்.
அதற்குள் செல்லம்மாள் முன்னால் வந்து "இந்தாடி... புது பணக்காரி! நீ பொழைச்ச பொழப்பெல்லாம் மறந்திரிச்சா.... வசதியான மாப்பிள்ளை கிடைச்சதும் பெத்த புள்ளனு கூட பாக்காம வாசல்ல வச்சு ஊரு முன்னால கேவலப்படுத்திட்டெல்ல.... நீயெல்லாம்...."என சொல்லிக்கொண்டிருந்த செல்லம்மாவின் வாயைப் பொத்திக்கொண்டு அவளை பின்னால் அழைத்துக் கொண்டு வந்தால் காளியம்மாள்.
அய்யனாரும் அவனோடு வந்த பெண்கள் கூட்டமும் அவனது நண்பர்களும் எதுவும் பேசாமல் அவன் பின்னாலையே விசேஷ விட்டைவிட்டு வெளியேறி சென்று கொண்டிருந்தார்கள்.
"பாத்தியாடி.... அந்த புதுப் பணக்காரி போடுற ஆட்டத்தே. இவளுகளுக்கு செய்யறதுக்காக ஊரெல்லாம் கடன உடன வாங்கி, ஊரைத் திரட்டிக்கிட்டு போயி அவகிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு வந்ததுதேன் மிச்சம். வந்தவங்கள ஒரு நிமிஷம் கூட உட்கார்னு சொல்லு நாதியில்ல. ஒருவா தண்ணி கூட குடிக்கல. சுவத்துல எரிஞ்ச பந்து மாதிரி நம்மள அசிங்கப்படுத்தி திருப்பி விட்டுட்டாளுங்க. இவளுக்கு போய் தூங்காமல் கொள்ளாம பார்த்து பார்த்து அத்தனை பணத்தை கொட்டி செஞ்ச. உனக்கு இப்ப என்னடி கிடைச்சுச்சு" நான் பொங்கி வந்த அழுகையை அடக்க முடியாமல் காளியாம்மாளைப் பார்த்து கேட்டாள் அவள் தாய் செல்லம்மாள்.
"ஊர் முன்னால என் புருஷனோட கௌரவம் குறைஞ்சிரக்கூடாது. தாய்மாமன் சீர் செய்யாம போயிட்டானு ஒருத்தரும் என் புருஷனப் பேசிடக்கூடாது. எனக்கு அது போதும். மத்ததப் பத்தி எனக்கு எந்த கவலையும் இல்லை" என தன் தாயின் கண்ணீரைத் துடைத்துவிட்டவள் தனது கண்களில் பொங்கி வந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டு தைரியமாக நடை போட்டாள் காளியம்மாள். அவளது நடையில் துடிப்பு நிறைவான துணிச்சலும் இருந்தது.
படைப்பு சிறுகதைப் போட்டி - 2025 - பட்டியல்